ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-65- ஓர் அறிவியல் அறிஞர்.
உ யிர்களின் தோற்றம் ;ஓரறிவு- புல், மரம் ஆய்வு:
ஆய்வுரை. முனைவர் இரெ.குமரன் (களப்பாள் குமரன்.) ;
ஓரறிவு- புல், மரம் ஆய்வு:
“அகக்கா ழனவே மரமெனப் படுமே.” -632. உள்வயிர்ப்பு உடையனவற்றை மரம் எனப்படும் என்றவாறு. உள் வயிர்ப்பு (ஆணி வேர் உடையவை மரம் எனப்படும்) உள் வயிரம் உடைய வேம்பு, தேக்கு முதலியவை மரவகை எனப் பெறும்.
மரவகை - உறுப்புகள் :
”இலையே முறியே தளிரே கோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையுள் ளுறுத்த அனயவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.” -633.
இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப் பெயர் மரத்துக்கு அங்கமாம் என்றவாறு. இதனானே புற வயிர்ப்பும் உள் வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரான இவ்வுறுப்புப்பெயர் உடையன மரம் எனப்படும் என்று கொள்க.- இளம்பூரணர் உரை,
மர வகை, உள் வயிரம் உடையவை, உள்ளும் புறமும் திண்மையானவை. அவற்றின் உறுப்புகள் - இலை, முறி, தளிர், கோடு, சினை, குழை, பூ, அரும்பு நனை இவை உள்ளிட்ட இவை போன்ற அனைத்தும்.
(கிளவி - சொல். ; முறி - முற்றாத.இலை ; நனை - மொக்கு. ; குழை. - கொழுந்து. கோடு - கிளை..)
புல், மரம் : பொதுப்பெயர்கள் :
“காயே பழமே தோலே செதிளே
வீழோடு என்றாங்கு அவையும் அன்ன.” - 634.
இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறலின் காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப்பெயர் அவ்விருவகைக்கும் பொது எனப்படும் என்றவாறு, தாழை பூவை உடைத்தாகலானும் கோடு உடைத்தாகலானும் புறவயிர்ப்பு இன்மையானும் மரம் எனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை. - இளம்பூரணர்.
தொல்காப்பியர் மரபியலில் கூறும் உயிரியல் தொடர்பான கருத்துகளும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளதும் ஆன்றோர்தம் அறிவியல் சிந்தனைக்கும் சான்றுகளாகும்.
அறிவியல் ஆசான் தொல்காப்பியர் ஓரறிவு உயிர்களைப் (புல், மரம்) பகுத்து ஆராய்ந்தமுறை இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாக அமைந்துள்ளதை அறிந்து மகிழ்க. ................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக