தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -58.
முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து :
தொல்தமிழர் - விழாக்கள் இல்லாத நாட்களை அறியா..!
“கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நல்நாட்டு
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
கொடி நிழற்பட்ட பொன்னுடை நியமத்து
சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின்
வயவர் வேந்தே.....”,
--குமட்டூர்க் கண்ணனார் , இரண்டாம் பத்து : 15, 16 – 21.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புலவர் புகழ்ந்து பாடியது. நினது நாடு கடலிலே தோன்றும் முத்து, பவளம் போன்ற கடல்படு பொருள்களும் மணி முதலிய மலைபடு பொருள்களும் ஆறுகள் பாயப்பெற்ற முல்லை, மருத நிலத்துப் பொருள்களும் பிறவுமாகிய பலவகையான செல்வம் பொருந்திய பரந்த இடத்தினைக் கொண்டது ஆகும். நின் நாட்டிலே உள்ள பழைய ஊர்கள் மத்தளம் முதலிய இசைக்கருவிகள் ஒலிக்கின்ற விழாக்கள் இல்லாத நாட்களை அறியா. அப்பழைய ஊரில் பலவகைக் கொடிகளின் நிழலில் பொன்னை முகுதியாக உடைய கடைத்தெருக்கள் அமைந்திருக்கும். அத்தகைய கடைத்தெருக்களில் தாம் வெற்றி பெற்றமையால் உண்டான மகிழ்ச்சி ஆரவாரத்தால் முழக்கப்பெறும் வெற்றி முரசினையுடைய வீரர்களின் தலைவனே... என்று சேரலாதனின் வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்துரைத்தார்.
.................................................................தொடரும்...............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக