புதன், 30 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-17.

 

தாய்மொழி வழிக் கல்வி-17.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வியைத் தமிழில் கற்பிக்க முடியுமா..? என்பதுபற்றித் துணைவேந்தர்(1981 – 1986)  வ.ஐ. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரங்கில் பேசிய மின்துறைப் பொறியாளர் பேராசிரியர் இரா. கணேசன்…….

“ பொறியியல் கல்வியைத் தமிழில் நடத்த முடியும்; இப்போதே நடத்த முடியும்.  பொறியியல் துறையில்  ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. தமிழில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் துறைப் பாட நூல்கள் இன்னும் அச்சிடப்படாமல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கரையான்கள் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றை உடனே வெளியிட ஆவன செய்ய வேண்டும். பாட நூல்கள் வெளிவரும்வரையில் நாம் காத்திருக்கத் தேவையில்லை. வரும் கல்வி ஆண்டிலேயே நம் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயே பொறியியல் வகுப்புகளைத் தொடங்கலாம். திருச்சியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் ஆய்வுகளைச் (Experiments) செய்து கொள்ளலாம்.” என்று கூறினார்.

வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நம் மொழியை வளர்த்தாக வேண்டும். இது கணிப்பொறி யுகம், கணிப்பொறியியலிலும் தமிழ்மொழி வளர்ச்சியடைந்து வருகிறது. கணிப்பொறிக்குரிய மொழியாகத் தமிழ் ஏற்றம் பெற்ற பிறகு தாய்மொழிவழிக் கல்வி நூற்றுக்கு நூறு விழுக்காடு சாத்தியமே.

செவ்வாய், 29 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-16.

 

தாய்மொழி வழிக் கல்வி-16.

மணவர்கள் மனம் கொள்ளத்தக்க வகையில்  சொல்லும் வழி தாய்மொழியால்தான் இயலும்.ஈண்டு இரண்டு வரலாற்று உண்மைகளைச் சுட்டுவம்.

“1847 இல் டாக்டர் சாமுவேல்பிஷ்கிரீன் (1822- 1884)  என்ற ஆங்கில மருத்துவர் இலங்கை வந்தார். ஆங்கில மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் இலங்கை வாழ் தமிழர் 33 பேருக்குத் தாய்மொழியாகிய தமிழ்வழி ஆங்கில மருத்துவத்தைக் கற்பித்தார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்.

1) இரண வைத்தியம் (Surgery – 1867)

2) வைத்தியதாகரம் (மருத்துவக் கையேடு) (Physicians Vade mecum- 1872)

3 )மனுஷவங்காதி பாதம் (Human Anatomy- 1872)

4) வைத்தியம் ( Practice of Medicine – 1875)

5) மனுஷசுகரணம் (Human Physiology - )

6) கெமிஸ்தம் ( Chemistry – 1875)

7) இந்து பதார்த்த சாரம் ( Wanings Pharmacopoeia of India – 1884)

இன்றைக்கு 175 ஆண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மனிதன் அதுவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழில் மருத்துவக் கல்வி அளிக்க முடிந்தது. இன்றோ  மருத்துவம் பொறியியல் முதலிய அறிவியல் பாடங்களைத் தமிழில் கற்பிக்க முடியுமா? என்று கேட்பது முறையோ…?

திங்கள், 28 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-15.

 

தாய்மொழி வழிக் கல்வி-15.

அன்று முதல்….

தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பி. விருத்தாசலனார் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் வழிக் கல்விக்குப் போராடிவருகிறார். 1990 இல் தஞ்சையில் தமிழ்வழிக் கல்வி மாநாட்டை நடத்தித் தமிழ் உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.”ஆங்கில மொழி கற்பதில் தவறில்லை  ஆனால் பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்துவதே தமிழ்வழிக் கல்வி இயக்கம். ” என்றார்.

ஒரு நாட்டின், ஓர் இனத்தின், ஒரு புதிய சமுதாயத்தின் எழுச்சி முழக்கமாக இருக்க வேண்டிய மொழி அரசியல்வாதிகளின் வாக்கு அறுவடைக்குரிய கருவியாக மாறிவிட்டது. இந்நிலை மாறினால்தான் தாய்மொழி  தனக்குரிய இடத்தில் அதாவது தலைமை இடத்தில் அமர முடியும்.

வெள்ளி, 25 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-14.

 

தாய்மொழி வழிக் கல்வி-14.

”ஒரு நாட்டின் தன்மானச் சின்னமாகத் திகழ்வது தாய்மொழிதான். ஒரு நாட்டில் தாய்மொழிக்குரிய இடம் தலைமை இடம்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஒரு சுதந்திர நாட்டின் சிறப்பம்சம் தாய்மொழியின் தலைமை இடமே. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றோம்; ஆங்கிலத்திலிருந்து விடுதலை பெறவில்லையே. இதற்கிடையே இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுச் செயல்பட ஒரு சமாதான உரிமை ஒப்பந்தம் செய்யவும் முயலக்கூடாது. இந்தியா போன்று சுதந்திரமடைந்த  இலங்கையில் அனைவரும் தம் தாய்மொழியில் கல்வி பயின்று வருகின்றனர்.”

”டாக்டர் க. கைலாசபதி தாய்மொழிவழிக் கல்விதான் உண்மையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ”என்கிறார்.

“In the academic world of Sri Lanka  Mother tongue is given in due place and a child can study from the primary level to Higher education in its Mother tongue.

Heaving been a teacher for the past 25 years I firmly believe that only if the medium of instruction  is the  mother tongue, actual  progress is possible.”

வியாழன், 24 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-13.

 

தாய்மொழி வழிக் கல்வி-13.

கல்வியில் இத்தகைய பின்னடைவிற்கு இன்றைய இந்தியக் கல்விக் கொள்கையே காரணம். நம்முடைய பண்பாட்டிற்கும் மொழிக்கும் ஏற்ப ஒரு புதிய கல்விமுறையை உருவாக்காமல் மேலை நாட்டுத் தாக்கத்திற்கு ஆட்பட்டுக் கிடப்பது முறையன்று என்பதை மிக நாகரிகமாக சுட்டிக்காட்டுகின்றார் கனடா  நாட்டுஅறிஞர் ஜான் ஸ்பெல்மேன்.

“An academic sell-out in the Indian Universities  has been going with the academicians  initiating  western cultural values following  text books , authors systems and structures.”

புதன், 23 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-12

 

தாய்மொழி வழிக் கல்வி-12

யுனெஸ்கோ கல்வி ஆய்வு அறிக்கை அயல்மொழி வாயிலாகக் கல்வி கற்பிப்பது பயனற்றது என்று குறிப்பிடுவதோடு இந்நிலைக்குக் கல்வியாளர்களே காரணம் என்றும் கூறுகிறது.

 It should  be remembered that only the native language  is the medium of instruction in most of the countries of the world. Only in India it has become a problem due to opposition from scholars UNESCO  aftera through study has indicated that education through  foreign medium is disadvantages.

செவ்வாய், 22 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-11

 தாய்மொழி வழிக் கல்வி-11

ஆங்கிலக் கல்வியின் வாயிலாக மிகப் பெரும்பான்மை மக்களிடமிருந்து கல்வி விலகியே இருக்கிறது. கல்விப் புரட்சி உண்டாக்க வேண்டிய காலக் கட்டத்தில் எழுத்தறிவு இயக்கம் நடத்துவது ஏமாற்று வேலையே. ’எல்லோருக்கும் கல்வி’ என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அக்கல்வி எம்மொழி வழியாகத் தரப்பட வேண்டும் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“ தாய்மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தாய்மொழிக் கல்வியை நாங்கள் வற்புறுத்தவில்லை. சமுதாயத்தின் எல்லா நிலை மக்களுக்கும் கல்வியும் உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக இருப்பதற்கு முழுமுதல் காரணம் ஆங்கிலவழிக் கல்வியே.” –டாக்டர் தமிழண்ணல்.

திங்கள், 21 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-10

 

தாய்மொழி வழிக் கல்வி-10

“அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு எல்லாவகையிலும் ஆக்கம் தேடும்

 வகையில் மேற்கில் வெளியாகும் அறிவியல் நுட்பச் செய்திகளை 

உடனுக்குடன் தமிழில் தரும் அரிய வாய்ப்பைக் கூரியர் இதழ்மூலம் 

யுனெஸ்கோ ஏற்படுத்தித் தந்துள்ளது , எத்தகைய அறிவியல் நுட்பக் 

கருத்தாயினும் சொற்செட்டோடும் பொருட் செறிவோடும் தமிழில் கூற 

முடிவதற்கு யாருடைய திறமையும் காரணமல்ல எண்ணற்ற வேர்ச் 

சொற்களைக் கொண்ட தமிழ்மொழி இயல்பாகவே அறிவியல் 

மொழியாக அமைந்திருப்பதுதான்” என்கிறார் அறிஞர் மணவை 

முஸ்தபா.

 

ஞாயிறு, 20 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-9

 

தாய்மொழி வழிக் கல்வி-9

தமிழ்நாட்டில் கல்வி அனைவர்க்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்  என்று கூறும் பாவேந்தர், அக்கல்வி தாய்மொழிக் கல்வியாகவும் அதன் வழியே கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும்….

“தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய வேண்டும்”- என்கிறார்.

சனி, 19 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-8

 

தாய்மொழி வழிக் கல்வி-8

”கல்வியானது உலகில் வழங்கும் பல மொழிகளாலும்

 எய்தற்பாலதே யெனினும் தாய்மொழியிற் கற்றலென்பது

 ஒவ்வொருவர்க்கும் உரிய கடன்களுள் விழுமியதொன்றாம்.

 அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று

 அறியாமையினீங்குதற்கு வேற்று மொழியைத் துணையாகக்

 கொள்ளுதல் ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண்குதிரையைத்

 துணையாகக் கொண்டது போலும் பயனில் செயலேயாகும்.” 

– நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.