ஞாயிறு, 18 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –13.

 

தாய்மொழி வழிக் கல்வி –13.

ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தாய்லாந்து செனட் எதிர்ப்பு.

  “ தாய்லாந்து நாட்டில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவும் வங்கி ஒன்றை அமைப்பது தொடர்பாகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் ‘ஸ்மால் அண்ட் மீடியம் சைஸ் எண்டர்பிரைசஸ்’ என்று ஆங்கிலச் சொற்கள் இடம்பெற்றிருந்தன. உறுப்பினர்கள் எதிர்த்தனர்; ஆங்கிலச் சொற்கள் நீக்கபட்டன. தாய்மொழியில் சட்டம் இயற்றும்பொழுது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது :”- தினத்தந்தி, 14-9-2002.

முற்றிற்று.

சனி, 17 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –12.

 

தாய்மொழி வழிக் கல்வி –12.

வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நம் மொழியை வளர்த்தாக வேண்டும். இது கணிப்பொறி யுகம், கணிப்பொறியியலிலும் தமிழ்மொழி வளர்ச்சியடைந்து வருகிறது. கணிப்பொறிக்குரிய மொழியாகத் தமிழ் ஏற்றம் பெற்ற பிறகு தாய்மொழிவழிக் கல்வி நூற்றுக்கு நூறு விழுக்காடு சாத்தியமே.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு எல்லாவகையிலும் ஆக்கம் தேடும் வகையில் மேற்கில் வெளியாகும் அறிவியல் நுட்பச் செய்திகளை உடனுக்குடன் தமிழில் தரும் அரிய வாய்ப்பைக் கூரியர் இதழ்மூலம் யுனெஸ்கோ ஏற்படுத்தித் தந்துள்ளது , எத்தகைய அறிவியல் நுட்பக் கருத்தாயினும் சொற்செட்டோடும் பொருட் செறிவோடும் தமிழில் கூற முடிவதற்கு யாருடைய திறமையும் காரணமல்ல எண்ணற்ற வேர்ச் சொற்களைக் கொண்ட தமிழ்மொழி இயல்பாகவே அறிவியல் மொழியாக அமைந்திருப்பதுதான்என்கிறார் அறிஞர் மணவை முஸ்தபா.

வெள்ளி, 16 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –11.

 

தாய்மொழி வழிக் கல்வி –11.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வியைத் தமிழில் கற்பிக்க முடியுமா..? என்பதுபற்றித் துணைவேந்தர்(1981 – 1986)  .. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அக்கருத்தரங்கில் பேசிய மின்துறைப் பொறியாளர் பேராசிரியர் இரா. கணேசன்…….

பொறியியல் கல்வியைத் தமிழில் நடத்த முடியும்; இப்போதே நடத்த முடியும்.  பொறியியல் துறையில்  ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. தமிழில் எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் துறைப் பாட நூல்கள் இன்னும் அச்சிடப்படாமல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கரையான்கள் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றை உடனே வெளியிட ஆவன செய்ய வேண்டும். பாட நூல்கள் வெளிவரும்வரையில் நாம் காத்திருக்கத் தேவையில்லை. வரும் கல்வி ஆண்டிலேயே நம் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலேயே பொறியியல் வகுப்புகளைத் தொடங்கலாம். திருச்சியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் ஆய்வுகளைச் (Experiments) செய்து கொள்ளலாம்.” என்று கூறினார்.

வியாழன், 15 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –10.

 

தாய்மொழி வழிக் கல்வி –10.

 

ஆங்கிலக் கல்வியின் வாயிலாக மிகப் பெரும்பான்மை மக்களிடமிருந்து கல்வி விலகியே இருக்கிறது. கல்விப் புரட்சி உண்டாக்க வேண்டிய காலக் கட்டத்தில் எழுத்தறிவு இயக்கம் நடத்துவது ஏமாற்று வேலையே. ’எல்லோருக்கும் கல்விஎன்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அக்கல்வி எம்மொழி வழியாகத் தரப்பட வேண்டும் எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தாய்மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தாய்மொழிக் கல்வியை நாங்கள் வற்புறுத்தவில்லை. சமுதாயத்தின் எல்லா நிலை மக்களுக்கும் கல்வியும் உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக இருப்பதற்கு முழுமுதல் காரணம் ஆங்கிலவழிக் கல்வியே.” டாக்டர் தமிழண்ணல்.”

 

செவ்வாய், 13 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –9

 

தாய்மொழி வழிக் கல்வி –9

இலங்கை

இந்தியாவைப் போன்று அதே காலக்கட்டத்தில் இலங்கையும் வெள்ளையர்

 ஆதிக்கத்திலிருந்து விடுதலை  அடைந்த பின்பு இலங்கையின் தேசியக் கல்விக் கொள்கை தெளிவாக வரையறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

                          இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கிலக் கல்விமுறை இரத்தத்திலும் நிறத்திலும் இலங்கையர்களாகவும் கருத்திலும் சுவையிலும் அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள புதிய ஒரு வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக்கு ஒப்ப அமைந்தது.

                     சுயமொழிக் கல்வி வளர்ச்சியிற் கூடிய அக்கறை செலுத்தப்படாமையால் மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்ட பழக்க வழக்கங்களும் பண்பாட்டு அம்சங்களும் சீர்கேட்டை அடையத் தொடங்கின.”-சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி.

 

திங்கள், 12 ஜூன், 2023

தாய்மொழி வழிக் கல்வி –8

 

தாய்மொழி வழிக் கல்வி –8

 

“1847 இல் டாக்டர் சாமுவேல்பிஷ்கிரீன் (1822- 1884)  என்ற ஆங்கில மருத்துவர் இலங்கை வந்தார். ஆங்கில மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் இலங்கை வாழ் தமிழர் 33 பேருக்கு அவர்தம்  தாய்மொழியாகிய தமிழ்வழி ஆங்கில மருத்துவத்தைக் கற்பித்தார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்.

1) இரண வைத்தியம் (Surgery – 1867)

2) வைத்தியதாகரம் (மருத்துவக் கையேடு) (Physicians Vade mecum- 1872)

3 )மனுஷவங்காதி பாதம் (Human Anatomy- 1872)

4) வைத்தியம் ( Practice of Medicine – 1875)

5) மனுஷசுகரணம் (Human Physiology - )

6) கெமிஸ்தம் ( Chemistry – 1875)

7) இந்து பதார்த்த சாரம் ( Wanings Pharmacopoeia of India – 1884)

இன்றைக்கு 175 ஆண்டுகளுக்கு முன்னரே தனி ஒரு மனிதன் அதுவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழில் மருத்துவக் கல்வி அளிக்க முடிந்தது; இன்றோ  மருத்துவம் பொறியியல் முதலிய அறிவியல் பாடங்களைத் தமிழில் கற்பிக்க முடியுமா? என்று கேட்பது முறையோ…?