ஞாயிறு, 8 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -60.உருகெழு மரபின் கடவுள் பேணியர்.

  தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -60. 

  முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து : 

             தொல்தமிழர் - வழிபாடு: கடவுள் பேணியர்.  

” சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று    

ஐந்துடன் போற்றி அவை துணையாக    

எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை   

காலை அன்ன சீர்சால் வாய்மொழி   

உருகெழு மரபின் கடவுட் பேணியர்  

கொண்ட தீயின் சுடர் எழுதோறும்    

விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி... ‘  

               - பாலைக் கெளதமமனார், மூன்றாம் பத்து: 21: 1- 7.  

                            சொல் இலக்கணம் சொல்லும் நூல், பொருள் இலக்கணம் சொல்லும் நூல், சோதிட நூல், வேதம், புலன் வழிச் செல்லாது உள்ளே அடங்கிய தூய மனம் என்று சொல்லப்படும் ஐந்தையும் ஒருங்கே போற்றி அவற்றின் துணையோடு எவ்வுயிர்க்கும் துன்பம் செய்ய நினையாமல் விளக்கமுற்ற கொள்கைகளுடன் கதிரவனைப் போல எப்போதும் தப்பாதாகிய நன்மை அமைந்த வேதத்தினால் அச்சம் தரத்தக்க முறைமையினையுடைய கடவுளைப் பேணும் பொருட்டு, செய்யத் தொடங்கிய வேள்வித் தீயின்  சுடர் ஓங்கி எழுந்தோறும் உள்ளத்து விருப்பம் மெய்யின்கண் பரந்து காணப்படுதற்குக் காரணமான பெரும் புகழினை உடைய ஆவுதிப்புகையும்..”  

(கேள்வி - வேதம். ; எவ்வம் - வருத்தம். ; வாய்மொழி - வேதம். ; ஆவுதிப் தீயின் கண்ணே வேட்டலைச் செய்யும் நெய் முதலியன, ஈண்டு ஆவுதி என்றது ஆவுதிப் புகையை உணர்த்திற்று,) 

( பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வெற்றிச் சிறப்பைப் பாடியது.)

 ............................தொடரும்................................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக