தன்னேரிலாத தமிழ்- 148
தாய்ப்பால்
இனிக் கருப்ப சாஸ்திரம் (1927) கூறுவதாவது:-
1) குழந்தை பிறந்தவுடனே அதற்குத்
தாயின் முலைப்பாலைப் பருகுவித்தல் வேண்டும். இதனால் தாய்க்கும்
பிறந்த குழந்தைக்கும் நன்மையுண்டு.
2) சிலர் குழந்தைக்குப் பால்
கொடுத்தால் உடம்புகெட்டுப் பலவீனமாகும் என்று நினைத்துத் தாதியை வைத்துப் பால் கொடுப்பதும்
புட்டிப் பால் கொடுத்து வளர்ப்பதும் தகுதியான காரியமன்று. சிருட்டிகர்த்தர்.
குழந்தைக்கென்றே உண்டாக்கியிருக்கிற பாலை அதற்குக் கொடாமல் நிறுத்திவிடுவது
அவ்வளவும் புத்தியீனம்.
3) பால் கொடுக்கும் ஸ்திரீகள்
ஆரோக்கிய பதார்த்தங்களை நன்றாய்ப் புசித்தல் வேண்டும்.
4) தாயும் பிள்ளையும் சுகசரீரிகளாயிருக்கின்
ஒரு வருஷத்திற்குமேல் பிள்ளைக்குப் பால் கொடுத்தல் கூடாது. அப்படிக்
கொடுத்தால் பிள்ளை சீக்கிரம் பேசமாட்டாது.
5) ஒரு ஸ்திரீயானவள் விசேஷித்த
பயங்கரத்திலும் மனக்கிலேசத்திலும் இருக்கும் பொழுது அவளுடைய பால் விஷத்தையொக்கும்.
அப்படிப் பட்ட காலத்தில் குழந்தைக்குப் பால் கொடுத்தல் கூடாது.
6) பால் உண்டாகாது போனால் மார்பில் சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டால் பால்
உண்டாகும். மீன் கருவாடு முதலிய ஆகாரங்களை விசேஷமாய்த் தின்பதனால்
பால் விசேஷமா யுண்டாகும்.
7)
தாய்ப் பால் தாதிப்பால் இல்லாத குழந்தைகளுக்குப் பசுவின் பால்
புகட்டலாம்.
8)
ஆட்டுப்பால் முலைப்பாலுக்குச் சமானமாயிருக்கும். ஆட்டின் பாலைக் குடித்த குழந்தைகள் அநேகம் வியாதியில்லாமலிருக்கின்றன.இதில் கொஞ்சம் சர்க்கரையையும் மூன்றிலொரு பாகம் வெந்நீர் அல்லது சுண்ணாம்புத்
தெளிவு நீரையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
9)
குழந்தைக்கு ஆறு ஏழு பற்கள் முளைத்தபின்பு முலைப்பாலை மறக்க வைக்கலாம்.