ஞாயிறு, 22 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 108. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின் The Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)

 சான்றோர் வாய் (மைமொழி : 108. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின் The Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

 

மொனாடுகள் புலனறிவு ;

மொனாடுகளுக்குப் புலனறிவு உணர்வெழிச்சிப் பண்புகள் உண்டு ; உணர்வு இல்லாத மொனாடுகள் இல்லை.  பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக ஒவ்வொரு மொனாடும் அமைகிறது. மொனாடுகள் ஒன்றிற்கொன்று வேறுபட்டவை  ; அளவிறந்தவை எனினும் இவைகள் அணுக்கள் இல்லை. மொனாடுகள் ஒன்றிற்கொன்று தொடர்பின்றித் தனித்து இயங்குகின்றன. பல் கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டுவதைப் போல மொனாடுகள் அமைந்துள்ளன. மொனாடுகளில் முதன்மையானது கடவுள்.

 

இவ்வுலகில் வேண்டாத பொருள்களோ, ஆற்றல்களோ இல்லை. எல்லாப் பொருள்களும் அற்றல்களும் பொதுமையோடு இயைபுடையன என்பதாலேயே இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கடவுளின் அருள் உலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே. அறிவும் அறமும் உடைய மனிதனே இறைவன் உலகுக்குச் செல்ல முடியும். மனிதனின் செயல்கள் இறைவனால் மதிப்பிடப்படுகின்றன., என்கிறார்.

 

இவரின் கருத்துப்படி இயற்கையின் ஆற்றலே இறைவன் எனக் கொள்ளலாம்.

 

….தொடரும் 

சனி, 21 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 107. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின் The Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)

 

சான்றோர் வாய் (மைமொழி : 107. பகுத்தறிவியல் சிந்தனைகள். காட்ஃபிரைட் லீப்னிஸின் The Monadology (1714), by Gottfried Wilhelm LEIBNIZ (1646-1716)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

 

. The Monad logy  is one of Gottfried Leibniz's best known works of his later philosophy. It is a short text which presents, in some 90 paragraphs, a metaphysics of simple substances, or monads. Wikipedia

Translated by Google

விளக்கம்

மோனாடாலஜி என்பது காட்ஃபிரைட் லீப்னிஸின் பிற்கால தத்துவத்தின் சிறந்த அறியப்பட்ட படைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு குறுகிய உரையாகும், இது சுமார் 90 பத்திகளில், எளிய பொருட்கள் அல்லது மோனாட்களின் மெட்டாபிசிக்ஸை வழங்குகிறது. விக்கிப்பீடியா.

லீப்னிஸ் :

இவர் தந்தை ஒரு தத்துவப் பேராசிரியர். இவரோ கல்வித் தேர்ச்சி – சிந்தனை அறிவு – தத்துவம் – அளவையியல் – கணிதம் – சட்டம் – சமயம் முதலிய பலதுறைகளில் சிறந்து விளங்கியவர். சமயச் சடங்கு, ஆலய வழிபாடுகளில் நம்பிக்கையற்றவர்.

1.)     தனிப்பொருள் உண்மை.

2.)     நோக்கமுடைய பிரபஞ்ச இயக்கம்.

3.)      அறஞ்சார்ந்த வாழ்க்கை.

4.)      உலகியல் இன்ப துன்பங்கள். ஆகிய நிலைகளில் நின்று சிந்தித்தார்.

செறிபொருளின் அடிப்படைப் பண்பு ஆற்றலே அன்றிப் பரப்புடைமை ஆகாது. ஆற்றலே அனைத்திற்கும் பிறப்பிடம். ஆற்றலை மையமாக உடைய தனிமங்களை மொனாடுகள் Monado)   எனக் குறிப்பிட்டார். எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆர்றல் கூறுகள்  மொனாடுகளால் ஆனது, ஒவ்வொரு மொனாடும் ஒரு செறிபொருளாகிறது.

 மொனாடுகள் தனித்தியங்கும் ஆற்றல் உடையவை. பிறவற்றைப் பாதிப்பதில்லை ; பிறவற்றால் பாதிக்கப்படுவதும் இல்லை. செறிபொருள் கடவுள் இயற்கை என்ற பொது உண்மைகளில் கரைந்துபோன மனிதனை, லீப்னிஸ் தனித்தியங்கும் தனிமமாக்கி முதன்மைப் பெறச்செய்தார்.

  பகுதி 2. ….தொடரும் ....

வெள்ளி, 20 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 106. பகுத்தறிவியல் சிந்தனைகள். பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT DE SPINOZA – 1632 – 1677.) பகுதி – 2

 

சான்றோர் வாய் (மைமொழி : 106. பகுத்தறிவியல் சிந்தனைகள். பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT  DE SPINOZA – 1632 – 1677.) பகுதி – 2

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

இவரின் கடவுட் கொள்கை புரட்சிகரமானது – மனிதப் பண்புகளைக் கடவுளுக்கேற்றி வழிபாடு செய்வது அறியாமை. கடவுளுக்கும் உலகிற்கும் “படைப்பு நிலை” என்றொரு தொடர்பு இல்லை. மனிதன் மொழியால் சிந்தனையால் கடவுளை அடைய முடியாது. கடவுளை எந்த மனிதனும் எந்தச் சமயமும் உடைமையாக்கிக் கொள்ள முடியாது.  இயற்கை,  காரணமாகவும் காரியமாகவும் விளங்குகிறது.  கடவுள் ‘செறிபொருள்’  இயற்கையை இயக்கியாகவும் இயற்கையில் இயங்கியாகவும் தோற்றமளிக்கிறது.

’அறிவே துன்பம் துடைக்கும்’ உடலும் உள்ளமும் கடவுளின் வெளிப்படுகள். உடலன்றி உள்ளமும் ; உள்ளமின்றி உடலும்  இருப்பு நிலையும் செயல் நிலையும் பெறமுடியாது. ‘ அறிவே புனிதம்,’ என்ற சாக்ரடீஸ் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார். மனிதன் தன்னுள் புதைந்து கிடக்கும் அறிவாற்றலை வெளிக்கொணர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 எதையும் எவராலும் எப்போதும் மாற்ற இயலாது ; நடப்பது நடந்தேதீரும்.  ஆதம் ஆப்பிள் தின்றது,  அவ்வாறு செய்யவேண்டும் என்பது  இயற்கையில் இயங்குகின்ற  அளவையியக் கட்டாயம். ; இதில் பாவ, புண்ணியம் இல்லை.  எந்தச் செயலுக்கும் யாரும் பொறுப்புக் கிடையாது.

இறுதியாக…. !

இயற்கையின் முழுமையில் ஏற்றத் தாழ்வு இல்லை. அறிவதே சரியான அறிவு. மனிதன் எல்லோரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பது அளவையியக் கட்டாயம். ’அறிவுத் தெளிவே அறம்’ என்கிறார்.

இவ்விடத்து நமது பேராசான் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள்.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை. (குறள் : 315.)

  ….தொடரும் ....

வியாழன், 19 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 105. பகுத்தறிவியல் சிந்தனைகள். பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT DE SPINOZA – 1632 – 1677.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 105. பகுத்தறிவியல் சிந்தனைகள். பெனிடிக்ட் ஸ்பினோசா-( BENEDICT  DE SPINOZA – 1632 – 1677.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

அறிமுகம் :

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். யூதர், கொள்கைக்கேற்ப வாழ்ந்துகாட்டியவர்  ; அஞ்சாமல் கருத்துக்களைப் பரப்பியவர். இவர் பன்மொழிப்புலமை உடையவர் ; தனித்துவமான சிந்தனையால் தீவிரவாதியானார் ; கடவுளை ஒரு பொருள் எனக் கூறினார் ; சமயக் கொள்கைகள் வெற்றுக்கற்பனை என்றார் ; யூத சமயத்தின் பழைமைகளை மறுத்தார் ; மதத்தை விட்டு விலகினார் ;  தனிமையில் மேலும் சிந்தித்தார் ; வறுமையில் வாடினார். வறுமை செம்மை தந்தது.

 இவரெழுதிய அறவியல் (எத்திகா) என்னும் நூல் , இலக்கியச் சுவை நிரம்பிய தர்க்க நூல் ; இந்நூலைச் சிலர் தீயிட முனைந்தனர் ; இவரை நாத்திகர் என்று இழிவு படுத்தினர்.

இடைக்காலத்தில் கிறித்துவ சமயம் செழிப்புற்று விளங்கியது ; பிற சமயங்கள் ஒடுக்கப்பட்டன ; யூதர்கள் துன்புறுத்தப்பட்டனர் ; யூத சமயமும் கிறித்துவ சமயமும் முரண்பட்டன. பொதுவாக யூதர்கள் அறிவாளிகள் ; புதுமையாகச் சிந்திப்பவர்கள்  - சர் ஐசக் நியூட்டன் , காரல் மார்க்சு, ஐன்ஸ்டின் யூதர்கள்.

செறிபொருள் :

 அறவியல் நூலின் முதற் பகுதி செறிபொருள் என்பதாம். இது பிறிதொன்றால் படைக்கப்படமல், தன் இருப்புக்குத் தானே காரணமாய் அமைகிறது. இதுவே கடவுள் , கடவுள் எண்ணிலா இயல்புகள் கொண்டவர். அவற்றை மனிதனால் அறிய முடியாது .  கடவுள் ஒரு நோக்கம், ஒரு செயல், கொண்டவர் அல்லர். வரம்பில்லா பரப்புடைமையும் சிந்தனையும் கடவுளின் இயல்புகள் , வரம்பிற்குட்பட்ட மனிதனால் அவரை  அறிய முடியாது.

  ….தொடரும் ....

 

புதன், 18 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 104. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 104. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ  (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

கலைகளும் விஞ்ஞானத் தத்துவங்களும் :

 “ சிந்திக்கும் சக்தியற்ற இயற்கையிலிருந்து மனிதன் தனது முயற்சியால், தனது சிந்தனையினால், தனது புரிந்துகொள்ளும் சக்தியால் வெளிவந்தான். இது மிகவும் நல்லதுதான், ஆனால் பிறகு என்ன நிகழ்ந்தது..? தனது சக்திகளை அழிவுக்குத்தான் பயன்படுத்தி வருகிறான். அவன் அணிந்திருக்கும் நாகரிகம் என்ற முகமூடி தன் சகோதர மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்து விடுகிறது.

சமுதாய ஏற்றத்தாழ்வு :

 சொத்துரிமை தோன்றியது – சமுதாயத்தில்  ஏற்றத்தாழ்வுகள் முளைத்தன. மனித தேகத்தின் பலத்தில்  கூடுதல் குறைச்சல்கள் தோன்றின ; விபரீத பலன்கள் விளைந்தன. ஏழை – பணக்காரன் என்ற பிளவு பின்னர் வந்த சமுதாயச் சட்டங்களால் நிலை நிறுத்தப்பட்டன. பணக்காரன் ஏழையைத் தன் கோரப்பாதங்களால் மிதித்து வாழ்வது – சுரண்டுவது மனிதத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

சமுதாய ஒப்பந்தம் :

மனிதன் பிறக்கும் பொழுது சுதந்திரம் உள்ளவனாகத்தான் பிறக்கிறான். ஆனால், எங்கு நோக்கினும் அவன் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டவனாகவே காட்சியளிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் தான் மற்றவர்களுக்கு எஜமானன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால், அப்படி நினைப்பவந்தான் மற்ற எல்லோரையும்விடப் பெரிய அடிமையாகக் கிடக்கிறான். இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும் ; அது என்னால் முடியும்.

வழிபாடு :

கடவுளை மெய்ம்மையில்தான் பார்க்க வேண்டும் ; மெய்ம்மை நிறைந்த அர்ப்பணத்தை யார் செய்தாலும் கடவுள் நிராகரிக்க மாட்டார்.

கடவுளை நாடுவதற்கு வேதப் புத்தகமும் ஆலயமும் சடங்குகளும் இடையில் தரகு வேலை செய்யும் குருமார்களும் தேவையில்லை.

மேற்கூறியவற்றால் ரூசோவின் தெளிவான சிந்தனைகளும் செயலாக்கத் திட்டங்களும் ஒட்டுமொத்த மனித சமுதாயச் சமத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்பது தெளிவாகுமே..!

 

  ….தொடரும் ....

செவ்வாய், 17 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 103. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 103. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ  (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

அறிமுகம்:

“சுதந்திரத்தின் தந்தை ரூசோ”.  உலக மகா இலக்கியங்களுள்  ஈடுஇணயற்றதாக விளங்கும்  ரூசோவின் வாழ்க்கை வரலாற்று நூல் ( The Confessions of Jean Jacques Rousseau )

மனித குலத்தின் சரித்திரத்திலேயே புதியதோர் அத்தியாயத்தையும் மனிதனின் சிந்தனையிலே புதியதொரு பாதையையும் சனசக்தியின் கருத்திலே புதியதோர் ஜீவனையும் துவக்கிவைத்தவர் ரூசோ. உலகம் முழுவதும் மக்களாட்சியை நோக்கி மலர வேண்டும் எனக் கனவுகண்டு, முதன்முதலாக சனநாயகத்தை உயிருள்ள தத்துவமாக அரசியல் உலகிலே உலவவிட்டவர்   ரூசோ.

அரசியலாலும் அறியாமையாலும் மத்த்தாலும் சம்பிரதாயத்தாலும் சமுதாயப் பிளவுகளாலும் பொருளாதாரத்தாலும் கலாச்சாரத்தாலும் மனித குலம் விலங்கிடப்பட்டு, ஒருசிலருக்குப் பலர் அடிமையாக்கப்பட்டு நாகரிகத்தின் பெயரால் மனிதன் அடிமைப்பட்டு வாழ்ந்த காலத்தில் பிரான்சில் புறப்பட்ட புரட்சியாளன் ரூசோ.

 சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற அவரது வார்த்தைகளே பிரஞ்சி புரட்சியின் எழுச்சி முழக்கங்களாக ஒலித்தன.

ரூசோவுடன் குடியாட்சியும் மனித சுதந்திரமும் பிறந்தது எனலாம்.

 என்னுடைய குழந்தைப் பருவம் ஒரு குழந்தையுடையது போல் இருந்ததில்லை ; நான் எப்போதும் ஒரு மனிதனைப் போலவே உணர்ந்தும் சிந்தித்தும் வந்திருக்கிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

 ரூசோ ஓர் அரக்கனுமல்ல ; ஒரு ஞானியுமல்ல மனிதத்தன்மையோடு கூடிய ஒரு மனிதந்தான். அவலம் நிறைந்த அவரது வாழ்க்கை, ஒழுக்கத்தின் உயர்வை நாடியது.

கலைகளும் விஞ்ஞானத் தத்துவங்களும் :  ….தொடரும் ....

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 102. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 

பகுதி -3

சான்றோர் வாய் (மைமொழி : 102. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

யோக்கியமான கடவுள் ; மனிதனின் சிறந்த படைப்பு ;

“ ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கடவுளை உற்பத்தி செய்து வைத்திருக்கிறது.  உற்பத்தி செய்தவனின்  குணாதிசயங்களையே அந்தக் கடவுளும் பெற்றிருக்கிறது. அவன் எதை எதை வெறுக்கிறானோ எதை எதை  நேசிக்கிறானோ அவைகளையே அந்தக் கடவுளும் வெறுக்கும் நேசிக்கும்.

 புரோகிதர்களின் பிரதான வேலையே தங்கள் கடவுளைப் புகழ்வதும் மற்றவர் கடவுள்களை இகழ்வதுமே.

 அந்தக் காலத்தில் ஏதோதோ செய்தார் எங்கள் ஆண்டவர் என்று கூறுகிறீர்களே … !ஏன் இப்பொழுது அவர் ஒன்றைக் கூடச் செய்து காட்டமாட்டேன் என்கிறார்..? கேளுங்கள் பக்தர்களே ! கேளுங்கள் உங்கள் ஆண்டவனை…!

 இந்த உலகை ஏதோ ஒரு பெரிய தெய்வீக் சக்தி ஆட்டிப்படைப்பதாக மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் ; அந்தச் சக்தி நினைத்தால்  தன்னை நரகத்தில் தள்ளும்  - சுவர்க்கத்திற்கும் உயர்த்தும்  என்று நம்புகிறான்.

 இந்த நம்பிக்கை நிலைத்திருக்கும் வரை அறியாமையும் வறுமையும் துன்பமும் இந்த உலகைவிட்டுப் போகா ..!

 இயற்கைக்கும் மேற்பட்டதாகக் கருதப்படும் அந்தச் சக்தியின் உதவியைப் பெறுவதற்காக மனிதன் தன் உழைப்பையும் ஆற்றலையும் பாழாக்கிக் கொள்கிறான்.

 இல்லாத இந்தக் கடவுளின் பலிபீடம் எண்ணற்ற தலைமுறைகளாக மனித இரத்தத்தால் கழுவப்பட்டு வருகிறது.

…………………தொடரும்………..

சனி, 14 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 101. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 

சான்றோர் வாய் (மைமொழி : 101. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

பகுதி -2.

கடவுள்கள்:

கடவுள்கள் என்ற சொற்பொழிவு இவருக்குப் பெரும் புகழைத்தந்தது.

”கடவுள்கள், போய் பூதங்கள், மூடநம்பிக்கை” –ஆகிய சொற்பொழிவுகள் மூலம் யூதர்களின் ஒரு கடவுளும் ; கிறிஸ்தவர்களின் ஒரு கடவுளும் ; காட்டுமிராண்டி மக்களின் பற்பல கடவுள்களும் மனிதனின் பயந்த உள்ளத்தில் எழுந்த கற்பனைகளே – என விளக்கிப் பேசினார், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்

டிருக்காமல்.”கோழை  அடிக்கடி செத்தும் பிழைத்துங் கொண்டிருப்பான் ; வீரனோ ஒரு முறைதான் சாவான், அந்த மரணம் வரும்வரை மனத்தைக் கவர்ந்த கொள்கைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருப்பேன்.” என்று உரைத்தார்.

 “உண்மைதான் இந்த உலகின் அறிவுச் செல்வம் ; ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

“ கோவில்கள், புரோகிதர்கள்,  கட்சிகள், காவலர்கள் அல்லது கடவுள்களின் கட்டளைக்குப் பணிந்து உன் அறிவை இழப்பாயேயானால் நீ ஊழியனாக, அடிமையாக உழல வேண்டியதுதான்.

”சில கருத்துகள் தெய்வீகமானவைகள் என்றும் மனிதன் அவ ற்றைச்  சிந்திக்கவோ ஆராயவோ கூடாது  என்றும் சொல்லலாகாது. அவை தெய்வீகமானவை என்று யாருக்குத் தெரியும் ..? உண்மை என்று தெரிந்துகொள்ள முடியாதவை எவையும் எப்படி நமக்குத் தெவீகமானவையாக இருக்க முடியும்..? “

“ஒவ்வொரு விஞ்ஞானியின் ; ஒவ்வொரு சிந்தனையாளனின்  விரோதியாகப் பலநூற்றாண்டுகளாகத் தேவாலயம் இருந்துகொண்டு அறிவு வளர்ச்சியைத் தடை செய்திருக்கிறது.”

சீர்திருத்துவது எப்படி ..?

“ அறியாமையே இருள் – அந்த இருளைப் போக்க அறிவின் வெளிச்சம் தேவை.

இந்த உலகம் இயற்கையானது ;  மனிதனை நம்பியே மனிதன் வாழ வேண்டும். அறிவு வளர்ச்சியால் கேடுகளையும் ஆபத்துகளையும் தவிர்க்கலாம். இயற்கையிலிருந்து நன்மைகளைப் பெறலாம். புதிய கண்டுபிடிப்புகளால் சமுதாயம் வளரலாம் சிந்தனையாலும் படிப்பாலும் அறிவு பெறலாம். முன்னேற்றத்தின் அடிப்படை இவைகளே.!”

பகுதி -3

…………………தொடரும்………..

வெள்ளி, 13 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 100. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 

சான்றோர் வாய் (மைமொழி : 100. பகுத்தறிவியல் சிந்தனைகள்.இங்கர்சால். R.G. INGERSOLL – 1833 -1899.

 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

அறிமுகம் :

இராபர்ட்  கிரீன் இங்கர்சால், அமெரிக்கா திரிசுடன் ஊரில் பிறந்தவர். தேர்ந்த சொற்பொழிவாளர் , ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

“ மனிதன் தன் மனத்தில் எழும் கேள்விகளுக்குத் தனக்குத் தானே பதில் அளிக்கக் கூடிய பயிற்சியைப் பெறவேண்டும் ; மனிதன் பகுத்தறிவு படைத்தவனாக உருவாக வேண்டும்.’ என்றார்.

“மதகுருமாரிடமே , “ஞான ஸ்னானத்தைவிட சோப்பு ஸ்னானம் சிறந்தது”  என்றார். பின் வழக்கறிஞர் தொழில் பார்த்தார் ; நீக்ரோ அடிமை ஒழிப்பில் பெரும்பங்கு கொண்டார். சிலகால அரசியல் வாழ்வில் தேர்தலில் நின்று தோல்வியுற்றார்.

தேர்தல் பரப்புரையில் ..

“ இங்கர்சால் ஒரு நாத்திகர் ;  வேத நூலை நம்பாதவர் ; மதத்தைக் கேலி செய்பவர் ; அவரையா கவர்னராக்கப் போகிறீர்கள்…? அந்த நாத்திகரை நீங்கள் தேர்ந்தெடுத்தால்,  ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள், ஆண்டவன் கோபத்தால் அண்டம் கிடுகிடுக்கும் , தொற்று நோய்கள் யாவும் பரவும்  தொல்லைகள் பெருகும் நாடு அழிந்து காடாகிவிடும் நாம் அனைவரும் மடிந்துவிடுவோம் “ … மக்கள் இங்கர்சாலைத் தோற்கடித்தனர். 

சொற்பொழிவாளர் ;

இங்கர்சாலின் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அலை அலையாகத் திரண்டனர். பெரும்பொருள் கிட்டியது. அமெரிக்க அதிபரின் வருமானத்தைப்போல் இரண்டு மடங்கு கிடைத்தது, ஆயினும் அவர் பொருளைச் சேமித்தது கிடையாது

 சொற்பொழிவின் மையக் கருத்து :

பகுத்தறிவுச் சிந்தனை.

1). மனிதத் தன்மையின் சிறப்பு.

2), சுதந்திரத்தின் மேன்மை.

3). நீதியின் புனிதம்.

 ஆதிகர்களின் அச்சுறுத்தல் அடிக்கடி நிகழந்த்து ஆயினும் அவர் அஞ்சவில்லை. மூடபக்தியினின்றும்  மோட்ச, நரகத்தினின்றும் மனித சமுதாயத்தை விடுவிக்கப் போராடினார்.

கடவுள்கள்:  தொடரும் ..............................

வியாழன், 12 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 99. பகுத்தறிவியல் சிந்தனைகள். 2– தெசுகார்டசு – (RENE DESCARTES -1596 – 1650.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 99. பகுத்தறிவியல் சிந்தனைகள். 2– தெசுகார்டசு – (RENE DESCARTES -1596 – 1650.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

                                                             தொடர்ச்சி ….

சிந்தனை வகைகள் :

1.)     மன உள்ளாற்றல் கொண்டு சிந்திப்பது.

2.)      மன உள்ளாற்றல் வழி  உணர்ந்துகொண்ட உண்மைகளைப் பகுப்பளவைச் சிந்தனை வழி புதிய உண்மைகளை வெளிக்கொணர்வது.

மனமே அறிவுக்கு அடிப்படை என்பது தெசுகார்டசு முடிபு.

ஐயம் :

ஐயம், அறிவு விளக்கத்திற்குக் கருவி.  வெறும் ஐயம் வெறுமைக்கு இட்டுச் செல்லும் வினாக்களைத் தொடுத்து விளக்கங்களைத் தேடுவது சாக்ரடீசு சிந்தனை முறை. ஐயப்பாடு என்பது ஓர் ஆய்வு நெறி. ஐயத்தின் துணையால் அடிப்படை உண்மை காண முற்படுவது தெசுகார்ட்சு சிந்தனை முறை.

 மனத்தின் இயக்கமாகிய சிந்தனையஅனைத்திற்கும் அடிப்படை . பட்டறிவில் அறிவு விளைவதில்லை. நான் சிந்திக்கிறேன் எனவே, நான் இருக்கிறேன் – இவர் முடிபு.

 

ஒப்பு நோக்கு :

 நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றல்தான் ஆறாவது அறிவு  “ ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே “ என்றார் தொல்காப்பியர்.

“எல்லாவற்றையும் சந்தேகப்படு ,”   உண்மை அறியும் ஆற்றலுக்கு ஐயம் துணை புரியும் என்றார் காரல் மார்க்சு.

புதன், 11 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 98. பகுத்தறிவியல் சிந்தனைகள். – தெசுகார்டசு – (RENE DESCARTES -1596 – 1650.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 98. பகுத்தறிவியல் சிந்தனைகள். – தெசுகார்டசு – (RENE DESCARTES -1596 – 1650.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

தொல் தமிழர் காலந்தொட்டுத் தமிழ் மண்ணில் பகுத்தறிவுச் சிந்தனைகள் தோன்றி வளர்ந்து வருவதை நாம் அறிவோம். இயற்கையோடியந்த தமிழர்தம் வாழ்வியலில்  இயற்கையைப் போற்றி வழிபடும் பண்பாட்டு மரபு வேரூன்றி இன்றளவும் நிலைபெற்றிருக்கிறது.

தொல்காப்பியம் காலதிற்கு முன்பே மக்களிடையே சித்தர்கள் தோற்றுவித்த வாழ்வியல் சிந்தனைகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலைநாடுகளில்  17-18 ஆம் நுற்றாண்டுகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள் தோன்றி வளர்ந்த முறைகளைச் சற்று நோக்குவோம் .

“1.பகுத்தறிவியல், 2.  பட்டறிவியம் இவை ஒன்றுக்கொன்று முரணானவை. பகுத்தறிவுக்கு உடன்படாத எதுவும் அறிவாகாது. அனுபவ அறிவு, எல்லைக்கும் சோதனைக்கும் உட்படாத எதுவும் அறிவாகாது. சிந்தனை அறிவே சிறந்தது ; அனுபவம் பொய்த்திடலாம்,” என்று கூறினர்.

பிரன்சில் பிறந்த தெசுகார்டசு தற்காலத் தத்துவத்தின் தந்தை என்பர். இவரெழுதிய நூல்களுள் மூன்று குறிப்பிடத்தக்கவை.

1.)       சிந்தனை முறைபற்றிய உரையாடல்கள்.

2.)       தத்துவத்தின் அடிப்படைகள்.

3.)       தத்துவ அடிப்படைப்பற்றிய சிந்தனைகள்.

ஐயமே அறிவுக்கு வழி :

கல்வி அறிவுக்கு அடிப்படை ; பழைய இலக்கியக் கல்வி கற்பனை வாழ்வில் தள்ளிவிடுகிறது ; புராணச் செய்திகள் சிந்திக்கும் ஆற்றலைஅழித்துவிடுகின்றன ; மனிதன் சிந்தனையின் பயனாக அறிவைப் பெறவேண்டும்.

கணக்கியல், சிந்தனையில் தொடங்கி நிரூபணத்தில் முடிகிறது. இம்முறையே சல அறிவியல் துறைக்கும் தேவை என்கிறார். …………………தொடரும்………..

செவ்வாய், 10 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 97. பட்டறிவியச் சிந்தனைகள். -2- ஜீன் பால் சார்த்ரே (Jean Paul Sartre -1905 – 1980. ) (1946; Existentialism and Humanism).

 

சான்றோர் வாய் (மைமொழி : 97. பட்டறிவியச் சிந்தனைகள். -2- ஜீன் பால் சார்த்ரே (Jean Paul Sartre -1905 – 1980. ) (1946; Existentialism and Humanism).

 

”மொழி, இனம் என்பனவெல்லாம் மனிதனை அடிமைப்படுத்துவன. நான் என்னவாக இருக்கிறேன் ; என்னவாக மாறிக்கொண்டிருக்கிறேன் எனும் எண்ணங்களால்தான் மனிதன் இருப்புநிலை சிறப்படைய முடியும்.” என்கிறார்.

 

பிளாட்டோ முதல் காண்ட் வரையிலான கடந்த காலத் தத்துவங்கள் மனிதனை நாடக மேடை நடிகனாகக் கருதின. இந்நிலையை அடிமைச் சமுதாயக் கோட்பாடு” என்கிறார்.

 

 படைப்பாற்றல் மனித உரிமையின் இயல்பு. மனிதன் வாழ்க்கைக்கும் வாழ்க்கை மாற்றத்திற்கும் வேண்டிய பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தான் விரும்பும் வண்ணம் தானே உருவாக்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ உரிமையுண்டு ; பிறரால் உருவாக்கப்பட்டுத் திணிக்கப்படும் எதையும் மனிதன் ஏற்கக்கூடாது ; எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டும்.

இறுதியாக :

இருப்புநிலை இழந்து (அடிமையாக) வாழ்வதைவிட உரிமையோடு தன் இருப்பு நிலையை உணர்த்தி இறப்பது மேல்.”  என்று மனித வாழ்வின் மேன்மைக்கும் மதிப்புக்கும் உரத்துக் குரல் கொடுக்கிறார்.

…………………..தொடரும்………………………………..

திங்கள், 9 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 96. பட்டறிவியச் சிந்தனைகள். ஜீன் பால் சார்த்ரே (Jean Paul Sartre -1905 – 1980. )

 

சான்றோர் வாய் (மைமொழி : 96. பட்டறிவியச் சிந்தனைகள். ஜீன் பால் சார்த்ரே (Jean Paul Sartre -1905 – 1980. ) (1946; Existentialism and Humanism).

 

ஜீன்-பால் சார்த்ரேபிரெஞ்சு தத்துவஞானி, நாவலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர், 20 ஆம் நூற்றாண்டில் இருத்தலியல்வாதத்தின் முன்னணி விளக்கமாக அறியப்பட்டவர். 1964 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை நிராகரித்தார்.

                   இருபதாம் நூர்றாண்டின் தொடக்கம் அறிவியல் கண்டுபிடிப்புகளால் புத்தொளிப் பெற்றுத் திகழ்ந்தது. வனிகம் பெருகியது; மக்கள் கலப்பு மிகுந்தது ; சமுகப் பிரச்சினைகள் மலிந்தன ; புதிய பிரச்சினைகள் முளைத்தன  ; பழைய தத்துவங்கள் எடுபடவில்லை. ; புதிய சிந்தனைகள் தேவைப்பட்டன.

 புதிய தத்துவங்களில் “உடன்படுத்தியம், இருப்பியம்” (Existentialism and Humanism) இத் தத்துவங்கள் இயக்கங்களாகச் செயல்பட்டன.

உடன்படுத்தியம்:

           இயற்கையை மனித வாழ்விற்கு எவ்வெவ்வாறு உடன்படச் செய்வது என்பதாம். அறிவியலின் துணைகொண்டு இயற்கையை ஆக்கச் சக்திகளுக்கு மாற்றுவது.

  இருப்பியம் :

                       மனிதனின் இருப்பு நிலையையும் அவனுக்கிருக்கும் பிரச்சினைகளையும் முதன்மையாகக்கொண்டது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றையெல்லாம் மதிப்பீடு செய்கிறான். தன் பிரச்சினைகளைத் தனக்குள்ள வாய்ப்புகளைக்கொண்டு மனிதன் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே இதன் அடிப்படை.

  இயக்கங்களின் நோக்கம் :

 இவ்விரு இயக்கங்கள் சமுக மறுமலர்ச்சி, சமுக வாழ்வு என்பதைக் குறியாகக் கொண்டவை. சமுகப் பொருளாதாரப் பிரச்சினையே முதலிடம்  பெறுகிறது. சொர்க்கமா…நரகமா..?  என்ற கற்பனை வாதப் பிரச்சினைக்கு இங்கு இடமில்லை. வாழ்வா..... சாவா…. வளமா …..வறுமையா …..? என்ற மனித வாழ்வின் உண்மைப் பிரச்சினைகளே ஆய்விற்குரியன.

                           இவர் தத்துவங்களின் மையக் கருத்து, மானுடமே. “மனிதன் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கின்றான் ; பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைப்பட்டு, கூண்டுப் பறவையாகின்றான்” என்று ரூசோ கூறிய கருத்துகள் இவரிடம் எதிரொலிக்கின்றன.

 “ மனிதன் தானாக தனக்காக உரிமையோடு வாழ வேண்டும் என்பதே சார்த்ரேயின் மானுட வாழ்க்கை நெறி.

” பேருண்மையின் கூறாக மனிதன் இருக்கிறான் என்ற கருத்தை மறுத்து ; மனிதன் இருப்பால்தான் பேருண்மைப் பொருளுடையதாகின்றது” என்கிறார்…….. தொடரும் ..

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 95. பட்டறிவியச் சிந்தனைகள். நீட்சே : ( F.Nietzsche – 1844 – 1900. செர்மானியர்.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 95. பட்டறிவியச் சிந்தனைகள். நீட்சே : ( F.Nietzsche – 1844 – 1900. செர்மானியர்.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                   நீட்சே,டார்வின் பரிணாமக் கொள்கைக்குக் குழந்தை ; செருமானிய இராணுவ ஆட்சிக்குத் தந்தை. கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிச் சமய நிறுவனங்களுக்கும் இலக்கியங்களுக்கும் மூடுவிழா நட்த்தியவர். சமுகப் பிரச்சினைகள் இவர் தத்துவத்தின் மையக் கருத்துக்கள்.

                     நீட்சே இளமையில் விவிலிய நூலின் பெருமைகளை விளக்கியவர். சுகோப்பனோவரின் நூல்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். ஆசிரியப் பணியாற்றியவர்.  காதல் தோல்வி – பெண்டிர்மீது வெறுப்பேற்றியது. திருமணமே செய்துகொள்ளவில்லை. மன நோயாலும் உடல் நோயாலும் அவதியுற்று 1900 ஆம் ஆண்டு இறந்தார்.

 தத்துவச் சிந்தனைகள் : வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் போராட்டங்கள் இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போராட்ட முடிவுகளுக்கேற்ப வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது, எதுவும் நிலையானதன்று ; மாற்றமே நிலையானது. என்றார்.

                  இவரின், சராதுத்ரா ( Zarathustra:)) என்னும் நூல் மிகச் சிறந்த படைப்பு. சராதுத்ரா என்ற மாமனிதர் தியானநிலை முடித்து, மலையிலிருந்து கீழிறங்கி மக்களோடு உரையாடுவதாக அமைத்துள்ளார்.

 விருப்பாற்றல் (Will) உண்மையென்றாலும் இதிலும் வலிமையே வெல்லும் ; இதுவே வாழ்வின் உண்மை. ஒவ்வொரு விருப்பாற்றலும் மாமனிதன் என்ற நிலையை அடைய இடையறாது போராடிக்கொண்டிருக்கின்றன.

   அன்பே உயர்த்தும் ; அறமே வெல்லும் ; ஒழுக்கம் உயர்வு தரும்   என்பன, கோழைகள் தங்களைக் காத்துக்கொள்ள அறிவு என்ற பெயரில் அமைத்துக்கொண்ட கூடாரங்கள்.

 

             நீட்சேயின் மாமனிதன் அறிவு, ஆற்றல், மதிப்பு ஆகிய மூன்றின் சங்கமம். நெப்போலியனும் இட்லரும் நீட்சேயின் மாமனிதர்கள்.

 

             மனித இனமே மாமனித இனமாக மாற வேண்டும் ; காதல் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் ; சிறந்தவர்களோடு சிறந்தவர்கள் கூடினால் சிறந்த குழந்தை பிறக்கும்.

 

        பெண்கள் மென்னையானவர்கள், ஆண்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். ஆண்களின் போக உடைமைப் பொருள் பெண்கள்.

 

மனிதன், உணர்வுகளின் பிழம்பாக, விருப்பாற்றலின் கருவியாகச் செயல்படுபவன் என்பது இவரது முடிபு.

…………………..தொடரும்………………………………..

சனி, 7 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 94. பட்டறிவியச் சிந்தனைகள். டேவிட் ஹியூம் ( David Hume- 1711 – 1776.) இங்கிலாந்து.

 

சான்றோர் வாய் (மைமொழி : 94. பட்டறிவியச் சிந்தனைகள். டேவிட் ஹியூம் ( David Hume- 1711 – 1776.)  இங்கிலாந்து.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                          இவரெழுதிய முதல் நூல் “ மனித இயல்பு பற்றிய ஆய்வு “ அறிஞர்களிடையே வரவேற்பு பெறவில்லை. “ தமக்கு இறந்து பிறந்த குழந்தையென” இந்நூலைப் பற்றிக்குறிப்பிடுகிறார்.

 

 “அறநெறி, அரசியல் பற்றிய கட்டுரைகள், மனித அறிவாற்றல் பற்றிய ஆய்வு, அரசியல் விசாரணை, பிரிட்டானிய வரலாறு, சமய வரலாறு ஆகிய நூல்கள் இவர் எழுதியவையாகும்.

பகுத்தறிவியத்தை மறுத்துப் பட்டறிவியத்தைத் திருத்தி

அறிவாராய்ச்சி செய்தார் ; ஆராய்ச்சியின் பயனாக – “புலக் காட்சி, மனப்பதிவு, எண்ணம் ஆகிய மூன்றினைக் குறிப்பிடுகிறார்.

 

 புறவுலகப் பொருள்கள் ஐம்பொறிகளைத் தாக்கி மாற்றம் நிகழ்த்துவது – புலக்காட்சி.

 

 இம்மாற்றம் முறையாக மனத்தில் பதிவது – மனப்பதிவு.

 மனப்பதிவு – நினைவாற்றல், கற்பனை இரண்டையும் இணைத்துக் கூட்டியும் தொகுத்தும் எண்ணங்கள் உருவாகின்றன.

 

எண்ணங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பே – அறிவு .

 

ஒப்புமை, தொடர்ச்சி, காரண காரியம் –ஆகிய மூன்று வழிகளில் (விதிகள்) எண்ணங்களிடையே  தொடர்புகள் உருவாகின்றன. இதனால் மனிதன் தன்னையும் உலகத்தையும் அறிகிறான்.

                   அறிவாராய்ச்சியில் ஈடுபட்ட  ஹியூம் தன் ஐயத்திற்குத் தெளிவு தராதவர்றையெல்லாம் துணிந்து ஒதுக்கி விடுகிறார்.

புறவுலகில் சடப் பொருள் இல்லை .

அகவுலகில் ஆன்மப் பொருள் இல்லை.

காரண காரியத் தொடர்பிலும் உறுதியில்லை.

நம் மனப்பதிவுகளைத் தவிர வேறு எதையும் அறிய முடிவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

 

                     எண்ணங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கைதான் அறிவெனப்படுகிறது. நம்பத்தான் வேண்டும்  என்ற கட்டாயச் சூழலில் சில எண்ணங்களை நாம் நம்புகிறோம். அவற்றை அளவையியல் முறைகளால் நிரூபிக்க முடியாது.  எண்ணங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கை இல்லையெனில் வாழ்க்கை குழப்பம் மிகுந்ததாகிவிடும்.என்கிறார்.

……………தொடரும்……….