புதன், 18 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 104. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

 

சான்றோர் வாய் (மைமொழி : 104. பகுத்தறிவியல் சிந்தனைகள். ஜெ.ஜெ. ரூசோ  (J.J. ROUSSEAU – 1712 – 1778.)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423

கலைகளும் விஞ்ஞானத் தத்துவங்களும் :

 “ சிந்திக்கும் சக்தியற்ற இயற்கையிலிருந்து மனிதன் தனது முயற்சியால், தனது சிந்தனையினால், தனது புரிந்துகொள்ளும் சக்தியால் வெளிவந்தான். இது மிகவும் நல்லதுதான், ஆனால் பிறகு என்ன நிகழ்ந்தது..? தனது சக்திகளை அழிவுக்குத்தான் பயன்படுத்தி வருகிறான். அவன் அணிந்திருக்கும் நாகரிகம் என்ற முகமூடி தன் சகோதர மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்து விடுகிறது.

சமுதாய ஏற்றத்தாழ்வு :

 சொத்துரிமை தோன்றியது – சமுதாயத்தில்  ஏற்றத்தாழ்வுகள் முளைத்தன. மனித தேகத்தின் பலத்தில்  கூடுதல் குறைச்சல்கள் தோன்றின ; விபரீத பலன்கள் விளைந்தன. ஏழை – பணக்காரன் என்ற பிளவு பின்னர் வந்த சமுதாயச் சட்டங்களால் நிலை நிறுத்தப்பட்டன. பணக்காரன் ஏழையைத் தன் கோரப்பாதங்களால் மிதித்து வாழ்வது – சுரண்டுவது மனிதத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

சமுதாய ஒப்பந்தம் :

மனிதன் பிறக்கும் பொழுது சுதந்திரம் உள்ளவனாகத்தான் பிறக்கிறான். ஆனால், எங்கு நோக்கினும் அவன் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டவனாகவே காட்சியளிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் தான் மற்றவர்களுக்கு எஜமானன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால், அப்படி நினைப்பவந்தான் மற்ற எல்லோரையும்விடப் பெரிய அடிமையாகக் கிடக்கிறான். இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும் ; அது என்னால் முடியும்.

வழிபாடு :

கடவுளை மெய்ம்மையில்தான் பார்க்க வேண்டும் ; மெய்ம்மை நிறைந்த அர்ப்பணத்தை யார் செய்தாலும் கடவுள் நிராகரிக்க மாட்டார்.

கடவுளை நாடுவதற்கு வேதப் புத்தகமும் ஆலயமும் சடங்குகளும் இடையில் தரகு வேலை செய்யும் குருமார்களும் தேவையில்லை.

மேற்கூறியவற்றால் ரூசோவின் தெளிவான சிந்தனைகளும் செயலாக்கத் திட்டங்களும் ஒட்டுமொத்த மனித சமுதாயச் சமத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன என்பது தெளிவாகுமே..!

 

  ….தொடரும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக