செவ்வாய், 24 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 110. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – தொல்காப்பியர்- கி.மு. 711.

 

சான்றோர் வாய் (மைமொழி : 110. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்தொல்காப்பியர்- கி.மு. 711.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள் :

உலகத் தோற்றம் :

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

                                                          -----தொல். 1589: 1- 2

                      அளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம். தீ. நீர். வளி (காற்று). விசும்பு என்ற ஐந்தும் கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார். இஃது அறிவியல் உண்மை.

 உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைபடாது நிற்கும்; அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார். “

என்று விளக்குவார் இளம்பூரணர். இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ.

                        இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகைப் பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகிறார் தமிழண்ணல்.

உயிரினப் பாகுபாடு :

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொயு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”- --தொல்.1526.

 

தொல்காப்பியர் உயிர்களின் பரிமாண வளர்ச்சியை வளப்படுத்தியுள்ளார். இவர் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். இப்பகுப்புமுறை புலனறிவு அடிப்படையில் அமைந்து-  இன்றைய அறிவியல் கொள்கையோடு பெரிதும் ஒத்துள்ளதை அறியமுடிகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே  (புல். மரம் முதலிய இவ்வினம்தொடு உணர்வு  - அறிவு)

இரண்டறி வதுவே அதனொடு நாவே(  நத்தை. சிப்பி முதலிய இவ்வினம்-தொடு உணர்வோடு சுவை உணர்வும்)

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே (  கறையான். எறும்பு முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு உணர்வுகள்)

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ( வண்டு . தும்பி. முதலிய இவ்வினம் - தொடு .சுவை. நுகர்வு. கண்- பார்வை உணர்வுகள்)

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ( விலங்குகள் . பறவைகள் முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு. பார்வை. செவித்திறன் உணர்வுகள்)

ஆறறி வதுவே அவற்றொடு மனனே  ( மேற்சுட்டிய ஐந்து உணர்வுகளோடு மனம் என்னும் உணர்வும் அமையப் பெற்றவை மக்களும் பிறவும். –                                          தொல்காப்பியர் உயிரினங்களை அறுவகையாகப் பகுத்தார் . விலங்கியலார் பன்னிரண்டு வகையாகப் பகுத்துள்ளனர்.

 

     . ஆறறிவு :

 

மக்கள் தாமே ஆறு அறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

                         -தொல். 1532

                              மக்களுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என ஐம்பொறிகளும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐம்புலன் உணர்வுகளும் இருப்பதால் ஐயறிவும்ஆறாவதாக மனம் என ஒன்று பெற்று நன்மை தீமை அறிவதாலும் சிந்திப்பதாலும் அவர்களை ஆறறிவு உடைய உயிரினம் என்பார் தொல்காப்பியர். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎனக் கூறியதால் மக்களைப் போன்று ஆறு அறிவு உடையனவாக குரங்கு யானை கிளி முதலியவற்றுள் மன உணர்வுடைய உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என உரை வகுத்துள்ளார் இளம்பூரணர்.

                          இவ்வாறு  தொல்காப்பியர் உயிர்களை வகைப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியதாகும். இரண்டு மூன்று நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை; ஐந்து ஆறு அறிவுடையவை முதுகெலும்புள்ளவை.

                   உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிவியல் வழியாக மெய்ப்பித்துக் காட்டிய சி. ஆர். டார்வின் ஓரணு உயிரிலிருந்து மனிதன் படிப்படியாக வளர்ந்துள்ள நிலையை 1858 இல் வெளியிட்டார். அறிவியல் உலகம் அவரை அதிசயமாகப் பார்த்தது. டார்வினின் இந்த அரிய கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களைப் படைத்தார் ; மனிதனைப் படைத்தார் என்ற மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தது. டார்வின் - அரிஸ்டாட்டிலுக்கும் எம்பெடோகிளசுக்கும் கடன்பட்டிருப்பதைப்போல தொல்காப்பியருக்கும் கடன்பட்டுள்ளார் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

                           ஆறாவது அறிவாகிய மனத்தைப் பெற்ற மனிதன் அதன்வழி சிந்திக்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மனத்தின் தெளிவு நடத்தையின்வழி வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.”ஆறறிவதுவே அவற்றொடு மனனே” – என்னும் கூற்று பிராய்டின் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. அவற்றொடுஎன்னும் ஒரு சொல்லால் தொல்காப்பியர் உளவியல் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி ஆகிறார்.  அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய ஆறாவது அறிவைப் பெற்றது மனித இனம் என்பதுதானே பிராய்டின் கண்டுபிடிப்பு.

கரு உருவாகும் காலம்

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலை யான.

         தொல். பொரு. கற். 187.

                தலைவிக்கு மாத விலக்குத் தோன்றிய ( மூன்று நாள் கழிந்த பின்பு) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளை விட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர். இதனால் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க.

                        இத்தகைய ஓர் அறிவியல் ஆய்வை நிகழ்த்தி மெய்ப்பிக்க எத்தனை ஆண்டுக் காலம் ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலியல் குறித்த ஆய்வில் தொல்காப்பியரின் அறிவியல்  அறிவை ஈண்டுக் காணமுடிகிறது.

இன்று, பூப்பு வெளிப்பட்ட பத்தாம் நாளிலிருந்து பதினைந்தாம்  நாள் வரையில்தான் கருத்தோன்றும் என்பர்.

 

தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்   குறித்துச் சான்றுக்காக மேலே சுட்டியவை சிலவே ! .

 தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கணம் மட்டுமன்று சிறந்த இலக்கியமுமாகும்.

தொல்காப்பியர், எழுத்திலும் சொல்லிலும்  ஒரு மொழியியல் அறிஞராக ; பொருளியலில் ஒரு சமுகவியல் அறிஞராக ; மரபியலில் ஓர் உயிரியல் அறிஞராக விளங்கி, அவர் பதிவு செய்துள்ள கருத்துகள், அறிவியல் சிந்தனைகளுக்குச் சிறந்த சான்றுகளாகின்றன.   

……………………..தொடரும் ………………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக