சனி, 2 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…94.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…94.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

        மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

        வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

        தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வான குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

 

நெஞ்சே…! மனைவியாக வாழவந்த பெண்ணை வாழவிடாமல் செய்துவிடாதே.

கட்டிய மனைவியிடம் வம்பளந்து குறைகளைப் பெரிதுபடுத்திக் குற்றம் சொல்லாதே.

 கண்ணிருந்தும் குருடனாகி தீவினைகளைச் செய்து படுகுழியில் வீழ்ந்து அழிய வேண்டாம்.

 வீரனாகப் போர்க்களம் புகுந்து கோழையாகப் புறமுதுகிட்டுத் திரும்பி வர வேண்டாம்.

 பழி, பாவங்களுக்கு அஞ்சாத கேடுகெட்டவர்களோடு சேர வேண்டாம். 

எவரையும் எத்திப் பிழைக்காது மானம் காத்து உழைத்து வாழும் ஏழை எளியவர்களை இகழ்ந்து பேச வேண்டாம்.

 ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்துவரும் குறவர் குல மகளான வள்ளியின் கணவன் முருகனைப் போற்றி வணங்குவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக