இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…96.
உலகநாதர்
இயற்றிய உலகநீதி
நெஞ்சே…..!
“ கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும்
பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும்
இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரியிட்டுக்
கொள்ள வேண்டாம்
குருகுஆரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேல் பாதத்தைக் கூறாய்
நெஞ்சே.”
எண்ணித்துணிக
கருமம் என்றதற்கு இணங்க எச்செயலைச் செய்யத்துணிந்தாலும் நன்றாகச் சிந்திக்காமல் செய்ய
வேண்டாம்.
அன்றே செய்திருக்கலாம் ; செய்யாமல் விட்டுவிட்டேனே…!
என்று இறந்தகாலத்தை எண்ணி வருந்திப் பேச வேண்டாம்.
ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் இடத்திற்குப்
போக வேண்டாம்.
உனக்கு
உரிமையில்லாத பொது இடத்தைக் கள்ளத்தனமாகக் கவர்ந்து அதில் குடியிருக்க வேண்டாம்.
ஒருவனுக்கு
ஒருத்தி என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைக் கைவிட்டு இரண்டாவதாக ஒருத்தியை மனைவியாக்கிக்
கொள்ள வேண்டாம்.
தன் மானத்துடன் வாழும் எளியவர்களை அவர்கள் ஏதும் இல்லாத ஏழைகள்தானே என்று இழிவாக நினைத்து
அவர்களைப் பகைத்துக் கொள்ளாதே; சாது மிரண்டால் காடு கொள்ளாது.
நெஞ்சே….!பறவைகள் நிறைந்த தினைப்புனத்தைக் காக்கும்
வள்ளியின் கணவனாகிய முருகனின் திருவடியைப்புகழ்ந்து போற்றிச் செல்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக