தமிழமுது –255– தொல்தமிழர் இசை மரபு:115 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம்.
யாழிடைப் பிறவா இசையே .....!
பெருஞ்சிறப்புடன் கோவன் கண்ணகி மன்றல் நடைபெற்றது. கோவலன் கண்ணகியுடன் கூடி இன்பம் துய்த்து,
“ மாசறு பொன்னே வல்ம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வணிகன் பெருமட மகளே
மலையிடப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங்கூந்தல் தையால் நின்னை.”
என்று இங்ஙனமாக அவளுடையநலங்களைப் பாராட்டிக் களிப்புற்றிருந்தான், இருக்கும் நாளிலே கோவலன் தாயாகிய பெருமனைக்கிழத்தி என்பவள் கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்தி உயர்ச்சி பெற்று விளங்குதலைக் காண விரும்பி, வேறொரு மாளிகையில் இல்லறம் நடத்தற்கு வேண்டும் பொருள்களை நிரப்பி, ஏவல் செய்வோரை திரளாக ஏற்படுத்தி அவர்களை அதில் இருக்கச் செய்தனர். அவர்களும் அதிலிருந்து அன்பும் இன்சொல்லும் முதலியன உடையராய், விருந்தோம்பல் முதலிய அறங்களைச்செய்து இல்வாழ்க்கையை நடத்தி வருவாராயினர் இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன. இங்ஙனம் நிகழ்ந்து வருங்கால், மிக்க அழகும் அடல் பாடல்களீல் மேம்பட்ட தேர்ச்சியும் உடைய மாதவி என்னும் நாடக்க் கணிகைபால் கோவலன் விருப்பஞ் சென்றது. செல்லவே உள்ள பல்வகைப் பொருள்களையும் நாடோறும் அவட்குக் கொடுத்து, தன் மண வாழ்க்கையை மறந்து அவளுடன் மருவி மகிழ்ந்திருப்பானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அவ்வருத்தத்தைச்் சிறிதும் வெளிப்படுத்தாமலும் கோவலனை வெறுத்தலில்லாமலும் ஒழுகிவந்தாள்.
அக்காலத்தில், சோழமன்னர் ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யப்படும் இந்திர விழாவானது நடைபெற்றது. விழாவின் முடிவில் நிறைமதி நாளில் அந்நகரத்து ஆடவரும் மகளிரும் வழக்கம்போலக் கடலாடச் சென்றனர். மாதவியும் கோவலனுடன் கடற்கரையை அடைந்தாள், அடைந்து தாழை வேலியின் நடுவே புன்னைைமர நிழலில் புதுமணற்பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து, விதானித்து அமைத்த தந்தக் கட்டிலின்மீது கோவனுடன் சேர அமர்ந்து, தான் பாடுதற்கேற்பச் சமைத்த யாழை அவன் கையில் நீட்டினாள். அவன் அதனை வாங்கிப் பல வகை வரிப்பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தான், அவன் பாடியவற்றுள்
“திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.”
என்பது, இங்ஙனம் அவன் பாடியவெல்லாம் அவனுக்கு வேறு மகளிர்பால் விருப்பம் உண்டென்று கருதக்கூடியவாறு அகப் பொருட்சுவை தழுவியனவாய் இருந்தமையின்.....
.........தொடரும்............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக