தமிழமுது –261– தொல்தமிழர் இசை மரபு:121 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
பல்லவர் ஆட்சியின் பிற்பகுதி சமய மறுமலர்ச்சிக் காலமாகும். ஓவியம், சிற்பம், நடனம், இசை, கட்டிடக்கலை முதலாய பல கலைகளும் செழித்து வளர்ந்தன.
சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பண் சுமந்த பாடல்களைப்பாடி பக்தி இலக்கியைங்களை உருவாக்கினர். இத்தகைய உள்ளம் உருக்கும் பக்திப் பனுவல்களைப் பிற மொழிகளில் காணுதல் அரிது என்பர்.
இசைத்தமிழ் இலக்கியம்:
மன்னர்களையும் மற்றவர்களையும் பாடுவதை விடுத்து, மாதேவனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்ட பக்தி இலக்கியங்கள், பண்ணோடு பாடுவதற்கு ஏற்றவையாக அமைந்தன. பாவினத்துள் ஒன்றாகிய விருத்தப்பா பயிலப்பட்டது.
சங்ககாலத் தமிழ்ச் சமய நெறிகள் நெகிழ்ந்து வடபுல வேத நெறிக்கு இடம் கொடுத்தன. பழைய சைவ வைணவ மரபினரும் தம்முள் ஒன்றாகிப் புறச் சமயங்களாகிய பெளத்த, சமண சமயங்களை ஒடுக்கினர்.
பல்லவர் காலத்தில்,பக்திச் சுவை கனிந்த இசைத்தமிழ் இலக்கியம் நன்கு வளர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனி்த்த ஓர் இடத்தைப் பெற்றது.
கி.பி. 7ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த, சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பூதி அடிகள், முருகநாயனார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், குலச்சிறையார்,, மங்கையர்க்கரசியார், நெடுமாறர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முதலியோரும் கி.பி. 8ஆம் நூற்றாணடில் வாழ்ந்த கோட்புலிநாயனார், நரசிங்க முனையதரையர், சோமாசிமாறர், கலிக்காமர், சடையனா, இசைஞானியார், முதலிய நாயன்மார்கள் பக்திப்பாடல்களால் சைவ சமயத்தைப் பேணிக்காத்தனர்.
முற்காலப் பல்லவ மன்னராகிய ஐயடிகள் காடவர் கோன் சேத்திர வெண்பாவும், காரைக்காலம்மையாரின் திருப்பதிகங்களும் உண்மைச் சைவைத்தை நிலைநாட்டிய திருமூலரின் திரு மந்திரமும், பின்னர் எழுந்த திருஞான சம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்கள் முதற்கொண்டு, சேக்கிழாரின் பெரியபுராணம் ஈறாக 27 அருளாளர்கள் பாடிய அரும் பாடல்களைப் பன்னிரு திருமுறைகள் என்று போற்றுகின்றனர்.
.............................. தொடரும் ......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக