தமிழமுது –262– தொல்தமிழர் இசை மரபு:122 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
சைவம் தழைத்து:
திருநாவுக்கரசரையும் திருஞான சம்பந்தரையும் தலைவராகக்கொண்ட வைதிகச் சைவமே தமிழகத்தில் தழைத்தது. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இந்நால்வரே சைவசமய குரவர்கள் ; தேவாரம்பாடிய முதல் மூவரும் “மூவர் முதலிகள் என்றும் பெயர் பெற்றனர். இவர்கள் நால்வரும் இல்லையேல் சைவசமயமே நிலைத்திருக்க வழியில்லை என்பதைப் பின்வரும் பாடல் விளக்குகிறது .
“ சொற்கோவும் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகரும் - முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே மாமறை நூல் எங்கே
எந்தை பிரான் அஞ்செழுத்து எங்கே.”
பன்னிரு திருமுறைகள்:
தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய பாடல்களில் தொகை 1,03,00 என்பர். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை 8250 பாடல்களாகும்.
திருஞான சம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகள்.
திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல்கள், நான்கு, ஐந்து ஆறு திருமுறைகள்
சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறை
மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் இரண்டும் எட்டாம் திருமுறை .
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர் அருளிய பாடல்களைத் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் பெயருடன் ஒன்பதாம் திருமுறை.
திருமூலரின் மூவாயிரம் திருமந்திரங்கள், பத்தாம் திருமுறை.
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான்பெருமாள் நாயனார், நக்கீரத்தேவர், கல்லாடனார், கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், அதிராஅடிகள், பட்டினத்துப்பிள்ளையார், நம்பியாண்டார்நம்பிகள் ஆகிய பன்னிருவர் அருளிய நாற்பது பிரபந்தங்களைப் பதினொன்றாம் திருமுறை.
முதலாம் இராசராச சோழனின் (கி.பி.985 - 1014) விருப்பத்திற்கிணங்க திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் என்பவரால் திருப்பாடல்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுப் பதினொரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன.மந்திரங்கள் பதினொன்றாகலின் திருமுறைகளும் பதினொன்றாயின என்பர்.
சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக இணைக்கப்பட்டது.
பன்னிரு திருமுறைகளும் திராவிட வேதம் என்றும் கூறுவர்.
.....................................................தொடரும் .....................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக