ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-13.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர் - அகத்தியர் மாணவரா..?
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
ஆய்வுரை -பகுதி -6.
நச்சினார்க்கினியரும் பன்னிருபடலக் கொள்கையைப் பலவிடத்து மறுத்திருப்பதுடன் ‘கொடுப்போர் ஏத்தி’ என்னும் சூத்திரவுரையில் “தத்தம் புது நூல் வழிகளாற் புரநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமும் தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டுமென்றுணர்க” எனவும் உரைத்துள்ளார். இவற்றிலிருந்து பன்னிரு படலம் என்பது பிற்காலத்து யாரோ ஒருவரால் இய்ற்றப்பெற்று அகத்தியர் மாணாக்கர் பன்னிருவராலும் இயற்றப்பெற்றதெனக் கட்டி யுரைக்கப்பட்ட தென்பதே அவர்கள் கருத்தால் பெறப்படும். ‘வினைவியனீங்கி’ என்னும் மரபியற் சூத்திரவுரையிற் பேராசிரியர் ‘பன்னொருபடலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது’ என்று கூறியிருத்தல் ஊன்றியுணரின் அவர் கருத்தும் இதுவென்பது போதரும். இவற்றால் அகத்தியர்க்கு மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கொள்கையும் வலியற்று ஒழிதல் கண்கூடாம்.
தொல்காப்பியத்திலே வடசொற்களை எடுத்தாளுதற்கு விதி கூறியிருப்பதுடன் அம்போதரங்கம், குஞ்சரம், வைசியன், முதலிய வடசொற்கள் பயின்றிருப்பதும், இகர ஐகாரவீற்றில் திங்கட் பெயரும், வழி நூல் வகையுள் மொழி பெயர்த்தியற்றலும் ஒன்றாக விதித்திருப்பதும் பிறவும் ஓர்ந்துணரின் ஆரிய மக்களீன் கலப்புப் பெரிதும் ஏற்பட்ட பின்னரே இந்நூல் இயற்றப் பெற்றதாகுமெனில் பொருத்தமாம். இராமாயண காலத்தில் அத்துணை மிகுதியாக ஆரியக்கலப்பு இருந்திருக்க இடமின்மையால் ிதொல்காப்பியர் அகத்தியனார்க்கு மாணாக்கராக்குதல் செல்லாதென்பது பெறப்படும். அகத்தியரால் அழைத்து வரப்பெற்றனர் என்பதும் பொருந்தாமை கூறல் வேண்டா என்க. தொல்காப்பியர் அகத்தியனார்க்கு உடன் காலத்தினர் அல்லராயினும் அவரது கொள்கையைப் போற்றியோர் அருகினமையால் அவர்க்கு மாணாக்கர் எனக் கருதுதல் சாலும். ......................................தொடரும்............................்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக