ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-19.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
சோழவந்தான் அரசஞ் சண்முகனார்: ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை ; மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிபிள்ளை.
அறிஞர் அரசஞ் சண்முகனார் தமது சண்முக விருத்தியுள் “ இந்நூலை அதங்கோட்டாசிரியற்குக் காலம் வரையறையா நித்துணைத்தென வறியப்படாவிடினும் பாண்டிய நாட்டைக் கடல்கொள்ளுமுன்னர்த் தென்மதுரையில் அரங்கேற்றப்பட்டமையானும் அந்நாட்டைக் கடல் கொண்ட பின்னர்க் கபாடபுரத்துச் சங்கமிருந்த காலத்தே இராமனிலங்கை சென்றமையானும் அதன் காலத்துக்கு முன் என்பது தேற்றமாகலின்” என்று கூறிப்போதல் காண்க இதனால் தமிழர்களுடைய கணிதப்படி தொல்காப்பியஞ் செய்யப்பட்டுப் பல ஆயிரமாண்டுகள் சென்றன என்று சொல்லலாம். தொல்காப்பியரைப் பற்றிய உண்மைச் சரித்திரங்கள் கிடையாமையினால் அவர் காலத்தை வரையறுக்க முடியவில்லை. இக்காலத்தில் சரித்திர ஆராய்ச்சியாளர் தமிழர்களுடைய கணிதங்களை ஒப்புக்கொள்கின்றிலர்்்.” என்கிறார்..
தொல்காப்பியைப் பொருளதிகாரத்தைத் தாமே முதலில் அச்சிட்ட ராவ்பகதூர், சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தாமெழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ம் முகவுரையுள் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் பன்னீராயிரமாண்டுகள் வரை ஆகும் என்று எழுதியுள்ளார்கள்.
மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிபிள்ளையவர்கள் தமது அபிதானகோசமென்னும் நூலுள் “இதுவே தலைச்சங்கமாக நெடுங்காலம் நிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிருந்த தென்மதுரை கடல் கொள்ளப்பட்டழிந்தது. இதுமாத்திரமன்று, குமரியாற்றின் தெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற் கொள்ளப்பட்டன. இப்பெரும் பிரளயம் வந்த காலத்தை ஆராயுமிடத்து அது துவாபர கலியுக சந்தியாதல் வேண்டும். யுக சந்தியாவது யுக முடிவுக்கு ஐயாயிர மாறாயிரம் வருஷ முண்டென்னுமளவிலுள்ள காலம். ஒவ்வோர் யுக சந்தியிலும் பிரளமொன் றுண்டாகுமென்பது புராண சம்மதம். ஆகவே தென்மதுரை அழிந்த காலம் இற்றைக்குப் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன்னராதல் வேண்டும். இற்றைக்கு 11481 வருஷங்களுக்கு முன்னர் ஒரு பிரளயம் வந்து போயதென்றும் அப்பிரளயத்தால் இப் பூமுகத்திலே சமுத்திர தீரஞ் சார்ந்த நாடுகளெல்லாம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூபம் பேதித்துத் தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும் ‘போசிடோனிஸ்; முதலிய தீவுகள் சமுத்திர வாய்பட்டழிந்ததும் அப் பிரளயத்தாலேயாம் என்று ‘அத்திலாந்தி’ சருத்திரமெழுதிய ‘எல்லியட்’ என்னும் பண்டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம் “ என்று கூறினார்.
.................................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக