ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-7.
தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - திறனுரை:
முத்தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்.
”மல்குநீர் வரைப்பின்.................படிமையோனே,” என்பதுவரை விளக்கம்.
தொல்காப்பியன் என்பது இயற்பெயர். போக்கறு பனுவலாகிய இந்நூல் எழுதியபின், ஐந்திரம் நிறைந்த தொல்காபியன் எனத் தன்பெயரை உலகம் அறியச் சிறப்பாக வெளிப்படுத்தினான். பெருந்தேவனார் பாரதம் பாடியபின் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் இளங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோ எனவும் தம் இயற்பெயர்களைப் புலமைச் சிறப்புடைய பெயர்களாக வெளிப்படுத்திக்கொண்டதை ஒப்பு நோக்க வேண்டும்.
‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பதனால் இயற் பெயர் தெளிவாயிற்று. இந்நூல் யாத்து அரசவையில் அரங்கேற்றிய பின் தமிழுலகம் தொல்காப்பியனை எப்படிப் பாராட்டிற்று என்பார் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனச் சுட்டினார் பனம்பாரனார்.
ஐந்திரம் - ஐவகையாற்றல் நிறைந்த என்ற வினையால் ஐந்திரம் நூற்பெயரன்று என்பதும். ஆர்றல் நிறைவு என்பதும் பெறப்படும். நூலாயின் நான்மறை முற்றிய என்பது போல, ஐந்திரம் முற்றிய என்ற வினை வந்திருக்க வேண்டும். வேதம் நிறைந்த தமிழ்நாடு, என்ற பாரதி பாட்டில். நிறைந்த என்பது மிகுந்த என்ற பொருளில் வருவதை எண்ணுக. நிறைவு - குறைவில்லாத் தன்மை. ஐந்திரமாவது - ஐந்திணை இலக்கணம் கூறும் அறிவாற்றல். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் எல்லாம் கூறியிருப்பினும் பொருளிலக்கணமே வாழ்வுச் சிறப்புடையது. ஆதலின் அச்சிறப்பாற்றல் தொல்காப்பியரிடத்து மிகுந்திருக்கக் கண்டனர் அவையத்தார் அதனால் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற சிறப்படைக்கு உரியர் ஆயினர் தொல்காப்பியர்.
அடிகள் விபுலானந்தர் யாழ் நூலாற் சிறப்புப் பெறுவதையும் பண்டிதமணி கதிரேசனார் சுக்கிரநீதி மொழிபெயர்ப்பால் சிறப்புப் பெறுவதையும் ஈண்டு நினைவு கொள்வோம். ஐந்திரம் நிறைந்த ஒரு வகைப்புகழ் ஈண்டுச் சொல்லப்பெற்றது. தொல்காப்பியனார் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவது பனம்பாரனார் பாயிரக் கருத்தன்று; பாயிரம் நூல் பற்றியதேயாகும். எனினும் பல் புகழ் நிறுத்த படிமையோன். என்ற இறுதி அடி தொல்காப்பியர் வேறு வகையாலும் நன்மதிப்புடையவர் என்பதனைத் தொகுத்துக் காட்டும்.
படிமையோன் - பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையோன். அத்தகு வாழ்க்கை தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் ஒழுக்கத்தால் வருவது. படிமை - ஒழுக்கமுடைமை.
நடை முடிபு : பொருளும் நாடி முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணிப் போக்கறு பனுவலாகத் தொகுத்தான் யாவன் எனின், பாண்டியன் அவையகத்து அதங்கோட்டாசானுக்கு ஆராய்ந்து முறைகாட்டி ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைச் சிறப்பாகத் தோன்றச்செய்து மல்குநீர் வரைப்பின் பல்புகழை நிலைநிறுத்திய சான்றோன் ஆவான். .......................................தொடரும்....................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக