ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-17.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
முனைவர் ஜியார்ஜ் எல். ஹார்ட். அமெரிக்க மொழியியல் அறிஞர்.
”தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை வழங்க வேண்டுமென்று பேராசிரியர் மறைமலை அவர்கள் (மாநிலக்கல்லூரி, சென்னை) கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடைய வேண்டுகோளைப் பெருமகிழ்ச்சியுடன் ஏற்று இதனை எழுதுகிறேன்.
1975ஆம் ஆண்டு முதல் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பேராசிரியராக உள்ளேன். தற்சமயம் அங்குத் தமிழ்த்துறைத் தலைவன். 1970 ஆம் ஆண்டு ஃகார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி (சமசுகிரித) பட்டம் பெற்றேன். எனது முதல் அனுபவம் 1969இல் மேடிசன் , விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் வடமொழிப் பேராசிரியர் வேலை ஏற்றது. தமிழ், வடமொழி தவிர இலத்தீன், கிரேக்கச் செம்மொழிகளை அறிந்து, அவற்றின் மூலம் அந்த இலக்கியங்களையும், மொழி ஒப்பியல் ஆய்வு நூல்களையும் விரிவாகப் படித்துள்ளேன். அவற்றுடன் உருசியன், செர்மன், ஃபிஎன்சு ஆகிய தற்கால ஐரோப்பிய மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உண்டு. அம்மொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுள்ளேன். இவை தவிர இந்திய இலக்கியங்களில், தமிழ், மலையாள நூல்களை அம்மொழிகள் வாயிலாகவும், பிற மொழி நூல்களை ஆங்கில மொழியாக்கங்களின் வழியும் படித்துள்ளேன். தெலுங்கு மொழியின் தலையாய அறிஞர்களுள் ஒருவரான திரு வி. நாராயணராவ் அவர்களுடன் நெடிது உரையாடப்பெற்ற வாய்ப்புக்கள் வழி அம்மொழியின் பாரம்பரியத்தையும் நன்கு அறிவேன்.
கிழக்காசிய மொழிகள் துறையின் நீண்டநாள் உறுப்பினன் என்ற முறையில் இந்தி மொழி இலக்கியச் செழிப்பை அறிந்துணரும் வாய்ப்பும் பெற்றேன். துளசி, கபீர், மகாதேவ வர்மா நூல்களை ஆழமாகப் பயின்றுள்ளேன். நான் பல ஆண்டுகளை - உண்மையில் 1969 முதல் என் வாழ்வின் பெரும்பகுதியை - வடமொழி / ஆய்வில் பயன்படுத்தியுள்ளேன். காளிதாசர் மகா படைப்புகளை முழுமையாகவும், பவாரி, சிறீஃகர்சா நூல்களுல் பல பகுதிகளையும் வடமொழி மூலத்தில் படித்துள்ளேன். இவை தவிர இருக்வேத ஐந்தாவது மூலப் பொத்தகத்தையும் பல உபனிசத்துக்களையும், மாபாரதம், கதா சரிதசாகரம், ஆதிசங்கரர் நூல்களில் பெரும் பகுதிகளையும் மற்றும் பல வட மொழி நூல்களையும் கற்றுள்ளேன்.
நான் இவற்றை எல்லாம் இங்குச் சொல்வது எனது அறிவாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அன்று. ஓர் இலக்கியத்தின் செம்மொழிப் பாங்கைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு என்பதைத் தெளிவுபடுத்த மட்டுமே. எவ்வகையான அளவைக் கோட்பாடுகளைத் தேர்ந்து நோக்கினாலும் மேலான உலகப் பாரம்பரியங்கள் செம்மொழி இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், நிச்சயமாகத் தமிழ் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும்.
இதற்கான காரணங்கள் பல அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலாவதாக, தமிழ் மிகத் தொன்மையான மொழி. பிற இந்திய மொழிகளின் தற்கால இலக்கியங்களை விடத் தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் காலத்தால் முற்பட்டது. தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள் பழைய கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வைத்து நோக்கும்போது கி.மு. 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் தெரிகிறது. பழந்தமிழின் பெருமை போற்றும் சங்ககாலத் தனிப்பாடல் திரட்டுகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அவை இந்தியாவில் முதல் முதலான சமயங்களுக்கு அப்பாற்பட்ட உலகியல் வாழ்வு தழுவிய சிறப்புடைய பாடல் தொகுதிகளாகும்.
குறிப்புரை : “தமிழ் ஏன் இன்னும் செம்மொழியாகக்கண்டு ஏற்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முனையும் போது நான் ஓர் அரசியல் காரணத்தையே காணுகிறேன்.
தமிழ் செம்மொழி இலக்கியச் சிறப்புக்கள் உடையது என்ற உரிமையை நிலநாட்ட, நான் இதுபோல் ஓர் உரையை எழுதவேண்டும் என்பது விந்தையாகத் தோன்றுகிறது.”
(இப்பகுதி ஐயா அவர்கள் வழங்கிய கட்டுரையின் சுருக்கமே.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக