தமிழமுது –242– தொல்தமிழர் இசை மரபு:102.
இசை ஓசைகள் மிகும் மலைபடு கடாம்்
பத்துப்பாட்டு.
10. மலைபடுகடாம்.
”கன்று காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண்கோட் பலவின் சுளைவிளை தீம் பழ
முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாவுறுக்கும் மகார் ஓதை
மழை கண்டன்ன வாலைதொறு ஞெரேரெனக்
கழை கண்ணுடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறுமகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும் குன்றகச் சிலம்பும்
என்று இவ்வனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி
அவலவும் மிசையவும் பலவுடன் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த
மலைபடு கடாம் மாதிரத்து இயம்ப..........” ---336 –348. ‘
வளவிய குலைகளையுடைய பலாவினது முற்றின இனிய பழத்தின் சுளையை விரும்பினோர் எல்லாரும் தின்று கீழ்வீழ்ந்து கிடக்கும் மிகையான பழத்தின் விதையைப் பயன் கொள்ளவும் ; கன்றுகளைப் பிணைத்துக் காந்தளினது துடுப்புப்போலும் கமழுகின்ற மடலால் அடித்துக் கடாவிடும் பிள்ளைகளுடைய ஆரவாரமும் ; மழை வளத்தால் செழித்த கரும்புகளைச் சாறு கொள்ளும் ஆலையின் ஓசையும் ; தினையைக் குத்துகின்ற மகளிரின் இசை மிகுகின்ற வள்ளைப் பாட்டும் (உலக்கைப் பாட்டு) ; சோம்பையும் மஞ்சளையும் விதத்து வளர்ந்த பின்பு பன்றி அகழ்ந்தெடுக்காமல் காப்போருடைய பன்றிக்கொட்டும் பறை ஓசையும் ; இவ்வோசைகளால் மலையிடத்தே எழும் இவ்வெல்லா ஓசைகளும் ஒருசேரப் பொருந்தித் திரண்டு மலையின் தாழ்வரையில் உள்ளனவும் உச்சி மலையில் உள்ளனவும் மேலும் பல ஓசைகளும் ஒன்றுசேர்ந்து நெருங்குவதால் எண்ணுதற்கு அரிதாகிய கூறுபாட்டை உடையனவாக எண்ணை ஒழிந்த மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற ஒலி திசைகளில் எல்லாம் ஒலிப்பதாயிற்று. அஃதாவது ’ மலைபடு கடாம் மாதிரத்து இயம்ப ‘ எனக் கடாம் , ஆகுபெயராய் அதனாற் பிறந்த ஓசையை உணர்த்திற்று.
அன்புடையீர், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தொல்தமிழர் இசை மரபை எடுத்தோதியதைக் கண்டோம்.இனி, இடைக்காலத்தே தமிழிசை மரபின் நீட்சியைக் காணலாம், நீட்சி ,இடைக்காலத்தில் எழுச்சியின்றி மெலிந்து ,,நலிந்து மரபிழந்த வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்-- தொடருங்கள்..................................!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக