தமிழமுது –227– தொல்தமிழர் இசை மரபு:87.
பத்துப்பாட்டு- 5. முல்லைப்பாட்டு.
முல்லைப்பாட்டு அகப்பாடலாகும் . பாட்டுடைத் தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறாததால் இஃது அகப்பொருள் இலக்கியமாயிற்று. காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றிய இந்நூல் 103 அடிகளைக் கொண்டு முல்லைத்திணை ஒழுக்கத்தை அழகாகவும் எளிமையாகவும் விளக்குவதுடன் அதன் புறத்திணையாகிய வஞ்சித்திணை இயைபுகளையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
விரிச்சி (நற்சொல்) கேட்டல் :
“பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய் கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப...- 6 – 11.
துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதில், வயது முதிர்ந்த பெண்கள், அரிய காவல் கொண்டதும் பழமையானதுமான ஊரின் புறத்தே சென்றனர் ; சென்று, யாழிசை போல் முரலும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படி அரும்புகள் மலர்ந்த முல்லைப் பூக்களை நாழியில் கொண்ட நெல்லோடு தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நின்றனர்.
( விரிச்சி என்பது, மகளிர் தெய்வம் உறையும் இடங்களுக்கு நெல்லும் மலரும் கொண்டு சென்று வழிபடுவது சங்ககாலப் பழக்க வழக்கங்களுள் ஒன்றாகும் நற்சொல் கேட்டல் என்பது, பழந்தமிழ் மக்களிடம் நிலவிய ஒரு நம்பிக்கையாகும்.் தாம் விரும்பி மேற்கொள்ளும் செயல் நன்கு முடிதலை விரும்பி, அதற்கான நன்னிமித்தம் பெறும் வகையில் ஊரின் புறத்தே படியில் நெல்லும் மலரும் கொண்டுசென்று தெய்வத்தை வழிபட்டு நிற்பர்; அப்பக்கம் பேசிக்கொண்டு செல்வோர் கூறும் சொல் தமக்கு ஏற்றதாக்இருப்பின், தாம்் மேற்கொள்ளும் செயல் இனிது நிறைவேறும் என்று நம்பி , மகிழ்ச்சியுடன் செல்வர் .) .
.......................தொடரும்....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக