தமிழமுது –250– தொல்தமிழர் இசை மரபு:110 நீட்சியும் - வீழ்ச்சியும்.
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 7.
எழுச்சியும் - வீழ்ச்சியும்:
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் குழற்பாணரும் மண்டைப்பாணருமான நால்வகைப் பாணரே பெரும்பாலும் தமிழ்நாட்டில் இசைவாணராயிருந்து தமிழிசையைப் போற்றி வந்தனர்.
“பாண்சேரியில் பாட்டுப்பாடுகிறதா?” என்னும் பழமொழியும், திருமுறை கண்ட சோழன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணைக் கொண்டு தேவாரத்திற்கு இசை வகுப்பித்தமையும் இதை வலியுறுத்தும். ஆரியக் குலப் பிரிவினை ஏற்பட்டபின், பாணர் தீண்டதவராகித் தம் தொல்வரவுப் பாண் தொழிலை இழந்தனர். எழூஉம் இசைத் தொகையினின்று தோன்றிய ஏழ் என்னும் எண்ணுப் பெயரும்,
”தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.”
என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (அகத்.18), தமிழிசையின் தொன்மையை உணர்த்தும். ”இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவ விருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன” என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், வடமொழி இசை நூல்கட்கெல்லாம் தமிழ் நூல்களே முதனூலென அறிக.
”அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.”
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் (33) தமிழிசையின் யாழ்ச் சிறப்பு உணரப்படும். இதன் விரிவை என் ‘முத்தமிழ்’ என்னும் நூலிற் காண்க.
இதுகாறும் நாம் தொல் தமிழரின் இசை மரபின் நீட்சியும் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்து மொழிஞாயிறு பாவாணர் ஐயா வழங்கிய ஆய்வுரையின் வழியாக அறிவோமாக.
ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) பாவாணரின் ஆய்வுரை தொடரும்......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக