தமிழமுது –247– தொல்தமிழர் இசை மரபு:107 நீட்சியும் - வீழ்ச்சியும்.
மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 4.
குரல் என்பது ‘ம’ என்னும் 5ஆம் இசையென்றும், ஒரு நரம்பில் ஒரேயிசை யெழூஉம் நரப்புக்கருவியே தமிழரது என்றும் கூறுவார் தமிழராயினும் இசைத்தமிழ் அடிப்படையே அறியாதார் ஆவர்,
”குரல் முதலேழும் “ என்று இளங்கோவடிகளும் (சிலம்பு. 5:35.)
“முதற்றானமாகிய குரலிலே” என்று புறநானூற்று உரையாசிரியரும் (புறம்.11.)
“மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி” என்று வன்பரணரும் (புறம்.152.) கூறியிருத்தலையும் அவர் கவனித்திலர்.
குரல் என்னும் சொல்லே, இயல்பான குரலாகிய முதலிசையையே குறிக்கும். சுரையாழும் பெருங்கலமே வியாழ் ( ) போல் மெட்டின்றி ஓரிசைக்கொரு நரம்பு கொண்டவை. பேரியாழ் முதலிய பிற யாழெல்லாம் மெட்டுக்களோடு கூடி , ஒரே நரம்பில் பல விசையிசைக்கக்கூடிய பண் மொழி நரம்புகள் கொண்டனவாகவே தெரிகின்றன.
பண்களை,ஏழிசையுமுள்ளவை பண் என்றும் ஆறிசையுள்ளவை பண்ணியல் என்றும் ஐயிசையுள்ளவை திறம் என்றும் நாலிசையுள்ளவை திறத் திறம் என்றும் நால்வகையாக வகுத்திருந்தனர். இந்நால்வகைப் பண்களும் மொத்தம் 11991 எனக் கணிக்கப்பட்டிருந்தன.
இசையாவது, நரப்படைவால் உரைக்கப்பட்ட 11991 ஆதியிசைகளும் அவையாவன : “உயிருயிர் கடனே” என்னும் சூத்திரத்தான் உறழ்ந்து கண்டுகொள்க.” என்று சிலப்பதிகார அருஞ்சொல்லுரைகாரர் (பக்.64.) கூறியிருத்தல் காண்க. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன நாற்பெரும் பண்கள். இவற்றுள் ஒவ்வொன்றும் பல திறங்களாகவும் ஒவ்வொரு திறமும் பலவகைகளாகவும் பகுக்கப்பட்டிருந்தன..
.............................. தொடரும் ...........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக