வியாழன், 26 மார்ச், 2026

தமிழமுது –246– தொல்தமிழர் இசை மரபு:106 மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 3.

 தமிழமுது –246– தொல்தமிழர் இசை மரபு:106 நீட்சியும் -  வீழ்ச்சியும்.  

                               மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 3. 

 ”இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்” என்னும் திருவாசகக் கூற்று (369) செங்கோட்டியாழ் வீணையென்று  சிறப்புப் பெயர் பெற்றமையையே காட்டும். எல்லா நரம்புக்கருவிகளுமே யாழே வீணை என்னும் பெயரும் விண் என்னும் வேரினின்று பிறந்த தென் சொல்லே, அது வடமொழியில் வீணா என்று திரியும்.  விண்ணெனல் நரம்பு தெறித்தொலித்தல். விண் - வீணை் . 

இரண்டாம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் ‘ நாரதன் வீணை நயந்தெரி பாடலும்’ என்றும், 7ஆம் நூற்றாண்டினதான  அப்பர் தேவாரத்தில் “மாசில் வீணையும்” என்று வருதலால், வீணை 11ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது. வேதகால நாரதர் தமிழ்நாடு வந்தே இசைக்கற்று பஞ்சபாரதீயம் என்னும் இசைத் தமிழ் நூலை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டினதான சீவக சிந்தாமணிக் காந்தருவத்தையிலம்பகத்தில், யாழென்றும் வீணையென்றும் ஒரே கருவி குறிக்கப்படுவதால் யாழ் வேறு வீணை வேறு அல்ல. இக்காலத்தில் சுரையாழும் வீணையென்றே பெயர் பெற்றிருத்தல் காண்க. 

திருஞானசம்பந்தர்  பாடிய யாழ்முரிப் பண்ணின் இயல்பு இன்று எவருக்கும் தெரியாமையால், யாழ்முரி வீணைக்கமையும் என்பதும் பொருந்தாது.  

                  தாளக்கருவி வெண்கலத்தினாற் செய்யப்பட்டதினால், அது வெண்கலக் கருவியெனப்பட்டது. சல் அல்லது சல்லரை என்னும் ஓசையுடைமையால், தாளக் கருவியிற் பெரியது சல்லரியென்றும் சிறியது சாலர் என்றும் பெயர் பெற்றன.  

......................................................................தொடரும்.................................. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக