தமிழமுது –236– தொல்தமிழர் இசை மரபு:96.
பண்டைய இசைக்கருவிகள்.
பத்துப்பாட்டு-
10. மலைபடுகடாம்: மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார். பத்துப்பாட்டுள் இறுதிப் பாட்டு, 580 அடிகளைக் கொண்டது. புறப்பொருள் பற்றியது. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் இதன் பாட்டுடைத் தலைவன். திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் தான் அன்றைய செங்கண்மா என்ற ஊராகும் . இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும்.
இடி ஓசையைப்போல முழங்கும் பண்களின் ஓசை.
பண்டைய இசைக்கருவிகள்.
“திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண்வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோள் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் கருக்கிக் காய கலப்பையிர்...” 1 – 13.
செல்வத்தை உண்டாக்கும் மழையைப் பெய்த, இருண்ட நிறத்தையுடைய மேகம், வானில் நின்று முழங்கும் ஓசையைப் போல . பண்களின் ஓசை. தன்னுடைய கண்களிலிருந்து தோன்றுமாறு திண்ணிய வாரினால் இறுக விசித்துக் கட்டப்பட்ட மத்தளத்துடன், சிறு பறையும், நன்றாக உருக்கித் தகடாக வார்க்கப்பட்ட கஞ்ச தாளமும் ; விளங்குகின்ற கரிய பீலியை அழகிய தழை எனக் கட்டியுள்ள ஊதுகொம்பும் ; கணுக்களின் நடுவே வெற்றிடம் உண்டாகுமாறு திறக்கப்பட்டுள்ளதும், யானையின் துதிக்கை போன்றதுமாகிய நெடுவங்கியமும் ; இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னகத்தேகொண்டு ஒலிக்கும் குறிய சிறந்த தூம்பும் ; பாட்டினை அதற்குரிய சுருதி குறையாமல் தன்கண் கொண்டு விளங்கும் இனிய குழலும் ; இணைந்து விளங்க,
கண்களுக்கு நடுவில் நின்று ஒலிக்கும் நரம்பின் ஓசையையுடைய கரடிகை என்னும் கருவியும் ; விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒத்து ஒலிக்கும் வலிய வாயினையுடைய சல்லிகை என்னும் பறையும் ; மாத்திரையின் அளவினைக் காட்டும் தாளத்தினையுடைய ஒருகண் மாக்கிணையும் ; கூறப்படாத பிற இசைக்கருவிகளும் கார்காலத்தில் பழுத்து விளங்கும் பலா மரத்தின் காய்களை மிகுதியாக உடைய கொத்துப்போல, தம்மில் ஒத்த கனத்தையுடையனவாக முடிச்சுக்களாகக் கட்டிக் காவடியில் தொங்குமாறு அமைந்த இசைக்கருவிகளின் மூட்டைகளை ஏந்தியவர்களாய்க் கூத்தர்கள் சென்றனர்.
எல்லா இசைக்கருவிகளுக்கும் மத்தளம் அடிப்படையாக விளங்குதலால் முதலில் கூறப்பட்டது.. தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி கஞ்சக்கருவி எனும் நால்வகைக் கருவிகளும் ஈண்டுச் சுட்டப்பட்டுள்ளன.
(ஆகுளி - சிறு பறை ; பாண்டில் - கஞ்சதாளம் ; அடர் - தகடு ; கோடு - கொம்பு ; உயிர் - துதிக்கை ; தூம்பு - நெடு வங்கியம் ; பீலி - இசைக்கருவி ; இளி - ஏழு நரம்புகளில் இளி என்னும் நரம்பில் எழும் ஓசை. ; பயிர் - அழைத்தல் ; தட்டை - கரடிகை / தட்டைப்பறை ; எல்லரி - சல்லிகை / பறை ; நொடி - கூறுதல் ; பதலை - ஒருகண் மாக்கிணை ; துணர் - கொத்து ; கலம் - இசைக்கருவி ; பரம் - மேலாகிய ; பையிர் - பை உடையிர்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக