தமிழமுது –237– தொல்தமிழர் இசை மரபு:97.
பேரியாழ் - 21. நரம்புகளை உடையது .
பத்துப்பாட்டு-
10. மலைபடுகடாம்:
மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார். பத்துப்பாட்டுள் இறுதிப் பாட்டு, 580 அடிகளைக் கொண்டது. புறப்பொருள் பற்றியது. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் இதன் பாட்டுடைத் தலைவன். திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் தான் அன்றைய செங்கண்மா என்ற ஊராகும் . இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்பெறும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாழிசை வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அதன் தோற்றம் அதற்கு முன்பு எத்தனை ஆண்டுக் காலம் யாழ், பல்வேறு வடிவங்களைப்பெற்றிருக்குமல்லவா ..?தொல்தமிழரின் இசை என்று தோன்றியதோ..!
‘’ தொடித் திரிவுஅன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்த்தன்ன நுண் துளை இரீஇ
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடிக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன்போல் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்த அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண்நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்.--21 – 37.
பேரியாழ் வளையலின் உறழ்ச்சியைப் போன்ற உறழ்ச்சியுடைய ஒன்பது வார்க்கட்டினை உடையது. யாழ் நூலின் கூறுபாடுகள் அனைத்தும் நிரம்பப் பெற்றது. வெண்சிறு கடுகின் அளவுகூட நரம்புகள் முறுக்கிக்கொள்ளாமல் உருவிச் சரி செய்யப்பட்டு அதனின்றும் வெளிப்படும் ஓசையைச் செவியால் ஓர்ந்து பார்த்துக் கட்டப்பட்டுள்ள வடித்து முறுக்கியா நரம்புகளை உடையது. வரகின் கதிர் நீண்டு விளங்குவது போல் நெருங்கிய நுண்ணிய துளைகளையிட்டு, அத்துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளால் தைக்கப்பட்ட தோலினை உடையது.
பாடலின் உரைப் பகுதி ....தொடரும்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக