தமிழமுது –235– தொல்தமிழர் இசை மரபு:95.
பத்துப்பாட்டு-
9.பட்டினப்பாலை : பாட்டைக் கேட்டு ,நாடகத்தை விரும்பிக் கண்டு.....!
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப்பாடல் 301 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலைப் பாடியதற்காகக் கரிகால்பெருவளத்தான் பதினாறு நூறாயிரம் ( 16 இலட்சம்) பொற்காசுகள் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. இது அகப்பொருள் சார்ந்துநூல்.
“பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறைத்
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கான் மாடத்து ஒள்ளெரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண்ணிலவின் பயன் துய்த்தும்
கண்ணடைஇய கடைக் கங்குலான்
மாஅ காவிரி மணங்கூட்டும் தூஉ எக்கர்த் துயில் மடிந்தும்.” --104 – 117.
பெறுதற்கு அரிய பழைய தலைமை உடைய துறக்க உலகத்தைப் போன்று, நெடிய தூண்கள் கொண்ட மாடங்கள் விளங்கும்.அவற்றில் உறைபவர் படல்களைக் கேட்டும் நாடகங்களை விரும்பிக் காண்பர் ; வெண்ணிலவின் இனிமையைத் துய்ப்பர் ; கள் குடித்தலைக் கைவிட்டு இனிய மதுவைக் ( காம பானம்) குடிப்பர் ; தாம் உடுத்திய பட்டு ஆடைகளை நீக்கிப் புணர்ச்சிக் காலத்திற்கு என மெல்லிய வெண்ணிற ஆடையை உடுத்துவர் ; கணவரைக் கூடின மடப்பத்தை உடைய மகளிர் பின்பு கண் துயில்வர் ; மாடத்தேயிருந்து,நுகர்ந்த கள்ளின் மயக்கத்தால் கணவர் சூடிய மாலையை தமது மாலை என்று எண்ணி மகளிர் சூடிக்கொள்வர்் ; மகளிர் சூடியிருந்த மாலையை தமது மாலை என்று நினைத்து மைந்தர் சூடிக்கொள்வர் ; மாடத்தில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளினால் விடியற் காலத்தை அறிய இயலாமல் இராக்காலத்தே வளைந்த திமிலைக் கொண்டு கடலிலே பரவர் என்று எண்ணும்படியாகவும் ஆக ; பொய்யாமல் நீர்வரும் முறைமையினையுடைய பெரிய காவிரி பூ மிக்க பெரிய துறைகளில் பூ மணங்களை கொண்டுவந்து திரட்டும் தூய இடுமணலிலே துயில் கொண்டுகிடந்து விழா அறாத வளநாடு என்க.
...............................தொடரும்....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக