வெள்ளி, 6 மார்ச், 2026

தமிழமுது –229– தொல்தமிழர் இசை மரபு:89. ..செவ்வழிப் பண்.

 தமிழமுது –229– தொல்தமிழர் இசை மரபு:89.   

  பத்துப்பாட்டு- 6. மதுரைக்காஞ்சி : செவ்வழிப் பண்.  

தமிழ் மக்களின் சமயம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகியவற்றின் வரலாற்றுக் கருவூலமாய்த் திகழ்வது பத்துப்பாட்டாகும். 

 தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி மாங்குடி மருதனார் பாடியது, மதுரைக்காஞ்சி, 782 அடிகளைக்கொண்டு, புறப்பொருள் சார்ந்தது.  

    தெய்வத்திற்கு மடை கொடுத்தல் :  

 ”திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி   

குரல் புணர் நல்யாழ் முழவொடு ஒன்றி    

நுண் நீர் ஆகுளி இரட்ட பலவுடன்   

ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு   

நல்மா மயிலின் மென்மெல  இயலி   

கடுஞ்சூல் மகளிர் பேணி கை தொழுது   

பெருந்தோட் சாலினி மடுப்ப” - 604 – 610.  

யாழின் முறுக்காணியின் நரம்பினை அதன் தண்டில் கட்டி, செவ்வழி என்னும் பண்ணை இசைப்பர் ; குரல் என்னும் நரம்புடன் பொருந்திய யாழிசைக்கு ஏற்ப முழவும் பொருந்தி ஒலிக்கும் ‘ மெல்லிய நீர்மையையுடைய சிறுபறை ஒலிக்கும் ; ஒள்ளிய சுடர் விளக்கம் முற்பட்டுத் தோன்ற, பூசைக்கு வேண்டிய  பொருள்கள் பலவற்றுடன் முதற் சூலினை உடைய மகளிர், பால் சோறு முதலிய படையல் பொருள்களை ஏந்தி, நன்றாகிய பெருமையுடைய  மயில் போல மெத்தென நடந்துசென்று  கையால் தொழுது, பெரிய தோளினையுடைய தேவராட்டியோடு வழங்குவர்.  

 யாழ் முழவு, ஆகுளி எனும் இசைக்கருவிகளும் செவ்வழி என்னும் பண்ணும் , குரல் எனும் நரம்பு முதலாகப் பண் இசைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளன.  

(கடுஞ்சூல் - முதற் சூல்.; திவவு - வார்க்கட்டு. ‘ செவ்வழி - மாலைப்பண் ; ஆகுளி - சிறு பறை. ; சாலினி - தேவராட்டி  / தெய்வம் ஏறி ஆடுபவள்,) 

....................................தொடரும் ...................... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக