புதன், 25 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –455: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –455: குறள் கூறும்பொருள்பெறுக.


550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட்டு அதனொடு நேர்.


  மன்னன்,  நாட்டில் உலவும் மிகக் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது,  உழவன் பயிர்களைக் காப்பற்ற களைகளைக் களைதற்கு ஒப்பானதாகும்.


இளை இனிது தந்து விளைவு முட்டுறாது

புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.” ~~ பதிற்றுப்பத்து, 28.


வேந்தே…! ( பல்யானைச் செங்கெழு குட்டுவன்),  நின் நாட்டினை இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து, குடிமக்கள் அனைவரும் பகை, பசி, பிணி என்னும் துன்பங்கள் இன்றி, அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை உடையதாம்.  கள்வனைக் கோறல் கடுங்கோலன்று (சிலம்பு) கள்வனைக் கொன்றொழித்தல் அரச நீதி என்பான்  பாண்டிய மன்னன்.

செவ்வாய், 24 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –454 –சாலி நெல்

 

தன்னேரிலாத தமிழ் –454 –சாலி நெல்


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, மே.21,22 திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்

 

3) சாலி நெல் உயர் வகை நெல்

 

வான் இயைந்த இருமுந்நீர்ப்

பேஎம் நிலைஇய இரும் பெளவத்து

கொடும் புணரி விலங்கு போழ

கடுங்காலொடு கரைசேர

நெடுங்கொடி மிசையிதை எடுத்து

இன்னிசைய முரசம் முழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்டம்

நாடுஆர நன்கு இழிதரும்

ஆடுஇயற் பெரு நாவாய்

மழை முற்றிய மலை புரையத்

துறை முற்றிய துளங்கு இருக்கை

தெண்கடல் குண்டு அகழி

சீர்சான்ற உயர் நெல்லின்

ஊர்கொண்ட உயர் கொற்றவ.” – மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி:75-88.


மேகங்கள் நீரைப் பருகுவதற்காகப் படிந்த, பெரிய மூன்று நீர்மையை உடைய, அச்சம் நிலைபெற்று விளங்கும் கரிய கடலில், கடிய காற்றினால் வளத்து வீசும் அலைகளைக் குறுக்கே பிளந்து செல்லுமாறு நாவாய்களின் பாய்கள் விரிக்கப்படும். அந்த நாவாய்களில் இனிய ஓசையை உடைய முரசம் முழங்கும். பொன் மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில் உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள் கரையை அடையும். நெடிய கொடிகள் பாய்மரத்தின் மேல் ஆடும். கருமேகங்கள் சூழ்ந்த மலை போல  அம்மரக்கலங்கள் கடற்பரப்பில் அசையும்.


இத்தகைய தெளிந்த கடலாகிய ஆழத்தினையுடைய கிடங்கினையும் தலைமை சான்ற உயர்ந்த சாலி என்ற நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கைப்பற்றிக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே..!


சாலியூர்- கடலை அரணாகக்கொண்ட ஒரு துறைமுகம்.

திங்கள், 23 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –453 – கருடன் சம்பா…!

 

தன்னேரிலாத தமிழ் –453 – கருடன் சம்பா…!


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, மே.21,22 திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்

 

2) கருடன் சம்பா…!

“வளைக்கை மகடூஉவயின் அறிந்து அட்ட

சுடர்க்கடை பறவைப் பெயர்படு வத்தம்

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து

கஞ்சமுக நறுமுறி அளைஇ பைந்துணர்

நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

தகைமாண் காடியின் வகைப்படப் பெருகுவிர்” 

– கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும் பாணாற்றுப்படை:304-310.

 

மறைகாப்பாளர் மனைவியாகிய பார்ப்பனி, பதமறிந்து ஆக்கிய பறவைப் பெயர் பெற்ற நெற்சோற்றையும் சேதாவின்(சிவப்புப் பசு) நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயில் வெந்த மிளகுப் பொடியும் கறிவேப்பிலையும்  கலந்து அட்ட மாதுளங்காய்ப் பொரியலையும் பசிய கொத்துக்களையுடைய நெடிய மாமரத்தினது நறிய வடுவினைப் பலநாளாகப் போட்டு வைத்த ஊறுகாயோடும் வகைப்பட ப் பெறுவீர்.


பறவைப் பெயர்படு வத்தம் (சோறு/ நெல்)என்றது கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல்லைக் குறிக்கும் என்பார் நச்சினார்க்கினியர். ஆகுதி பண்ணுதற்கு இந்த நெற்சோறே சிறந்ததென்று இதனைக் கூறினார்.


3) சாலி நெல் …………….தொடரும்………………

ஞாயிறு, 22 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –451

 

தன்னேரிலாத தமிழ் –451


நெஞ்சில் நிறைந்த நினைவுகளோடு…!

      ஐயா நம்மாழ்வார் விளைநிலத்தில் விழுந்த வித்து, ஐயா,நெல் செயராமன் வழியில்  நேற்றும் இன்றும்…… தேசிய நெல் திருவிழா, (மே.21,22) திருத்துறைப்பூண்டியில்….!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நெல் வகைகள்.


1)ஓத்திரம் நெல்


“ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி

மாய வண்ணனை மனன் உறப்பெற்று அவற்கு

ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து…” –கபிலர், பதிற்றுப்பத்து.:7.


பல யாகங்களையும் பெரிய அறச்செயல்களையும் செய்து முடித்தவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன்; அத் தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினை இறையிலியாக அளித்தவன்.


2) கருடன் சம்பா…………………… தொடரும்…………….

புதன், 18 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –450: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –450: குறள் கூறும்பொருள்பெறுக.

542

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி .

உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் கதிரவனையும் கார்மேகத்தினையும் சார்ந்தே உயிர்த்தெழுந்து வாழ்கின்றன. அவ்வாறே முறைசெய்து காப்பாற்றும் மன்னவனின் செங்கோல் நிழலில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். 

உலக உயிர்கள் :  இயற்கையின் ஆட்சியிலும் செயற்கையின் (மன்னனின்) ஆட்சியிலும். வாழ்வு பெறுகின்றன.

அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்

 அன்னோன் வாழி வென்வேற் குருசில்.” பொருநராற்றுப்படை, 230,231.

அறத்தொடு பொருந்திய வழிகளை, அறிந்துகொள்வதற்குக் காரணமான செங்கோல் உடைய, வெல்லும் வேல் படைக்குத் தலைவனாகிய கரிகால் பெருவளத்தான் இனிது வாழ்வானாக.

திங்கள், 16 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –449: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –449: குறள் கூறும்பொருள்பெறுக.


538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


சான்றோர் போற்றிப் புகழ்ந்த செயல்களையே செய்யவேண்டும் , அங்ஙனம்  செய்ய மறந்தார்க்கு எப்பிறவியிலும் நன்மை இல்லை.


தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்

பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய

சிட்டர் என்ன சிட்டர் என்று ஏத்துவர் அல்லாரைச்

சிட்டர் என்று ஏத்தல் சிதைவு.”—அறநெறிச்சாரம், 42.


தன்னைப்பற்றியும் தன்னால் அறியத்தகும் பொருள்களைப் பற்றியும் உண்மையைக் கூறும், சீரிய அறம் உரைக்க வல்லாரை, ‘நிலைபெற்ற கல்வியறிவு நிரம்பிய சான்றோர், மிக உயர்ந்த பெரியோர்என்று உலகத்தார் பாராட்டுவர். அத்தகைமை இல்லாதவர்களைச் சான்றோர் என்று போற்றுவது கேடு பயப்பதாகும்.