தமிழமுது -5
- தாய்மொழி வழிக் கல்வி.
தாய்மொழி:
தாய்மொழிவழிக் கல்வி கற்பது மக்களின்
உரிமை ; அதற்கு
ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சமுக, பொருளாதார விடுதலையின்றி அரசியல் விடுதலை மட்டுமே முழுச் சுதந்திரமாகாது.
அடிமை விலங்கொடித்து விடுதலை பெற்ற நாடுகள் பலவும் கல்விப் புரட்சியின்
வழியே சமுக, பொருளாதார மாற்றங்களைக் கண்டு முன்னேறின. விடுதலை அடைந்த பின்பு புதிய சமுதாயத்தைத்
தோற்றுவிக்க முனைந்த தலைவர்கள் கல்வி வழியே அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உதவாத வெறும் ஏட்டுக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டுத்
தாய்மொழிவழிக் கல்வி அளித்துப் புதிய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினர்.
இரசியா _ வி.இ. இலெனின்.
நாட்டுக்கு விடுதலையும்
நாட்டு மக்களுக்கு அறியாமையிலிருந்து விடுதலையும் பெற்றுத் தந்தவர் இலெனின். இலெனின்
கல்வியின் சிறப்பை நன்குணர்ந்த மேதை. இல்லாதவர்களையும் கல்லாதவர்களையும்
எல்லாம் பெறச் செய்தவர். மாபெரும் அக்டோபர் புரட்சிக்குப்பின்னர்
சோவியத ஒன்றியத்தின் கல்வி நிலை குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்ந்தது.
”தாய்மொழியாலேயே குழந்தைகள்
கல்வி கற்க ஆவன செய்தார். இன்று சோவியத் ஒன்றியம் முழுவதிலும்
51 மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அக்டோபர் புரட்சிக்குப்பின்பு சில சிறுபான்மை இனத்தவர் மட்டும் அவர்களுடைய பேச்சு
மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பினை
இழந்துவிடக் கூடாது எனக் கருதி, வரிவடிவமற்றிருந்த மொழிகளுக்கும்
வரிவடிவங்களை அமைத்து இலக்கியங்கள் மலர வழிவகை செய்யப்பட்டது. “ (–பேராசிரியர்
சு.ந. சொக்கலிங்கம்.).
துருக்கி : கமால் அத்தாதுர்க்
– 1881 -1925.
1923 ஆம் ஆண்டு
விடுதலை பெற்ற துருக்கிக் குடியரசின் தலைவர் கமால் பாட்சா தன் நாட்டையும் மக்களையும்
மொழியையும் பேணி வளர்க்க எதையும் செய்யத் துணிவு கொண்டவராயிருந்தார். மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுத்தார். சாதி சமய மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி
வைத்தார். துருக்கி மொழியே ஆட்சிமொழி, துருக்கி
மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். அரபி, பெர்சியா மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
தாய்மொழிக்கு அரியணை அளித்துத் தன்மானச் சிங்கமெனத் திகழ்ந்தார் கமால்
பாட்சா.……………………………….தொடரும்………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக