தமிழமுது -29. - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முருகன்-
– அறுபடைவீடு
3. ) திரு ஆவினன் குடி – பழனி / பொதினி.
முனிவர்கள் தோற்றப் பொலிவு:
”சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும்
வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும்
உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு
மார்பின்
என்பு எழுந்து
இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த
உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய
மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா
அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய
தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த
காட்சியர் இடும்பை
யாவது அறியா
இயல்பினர் மேவரத்
துனி இல் காட்சி
முனிவர்….” – 127 – 137.
மரவுரியை உடுத்தவர் ; வலம்புரிச்
சங்கை ஒத்த அழகிய நரை முடியை உடையவர் ; அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர்
; மானின் தோலைப் போர்த்தவர் ; சதை வற்றிய மார்பில்
விலா எலும்புகள் தோன்றி அசையும் உடலை உடையவர் ; பல பகற் பொழுதுகள் உண்ணும் உணவை நீக்கியவர்
; பகையைப் போக்கிய மனத்தை உடையவர் ; கற்றறிந்தவர்க்கும்
தாம் எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர் ; ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய அறிவுடையவர்
; எவரிடத்தும் வெறுப்பு இல்லாத மெய்ஞானத்தை உடையவர் ஆகிய இயல்புகளை உடைய முனிவர்கள்.
(சீரை – மரவுரி ;
சீர் – அழகு ; உரிவை – தோல் ; இகல் – மாறுபாடு ; செற்றம் - பகைமைக்குணம் ; துனி – வெறுப்பு. )
முருகனைப் பாடும்
ஆடவர் – தோற்றப் பொலிவு:
”புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த நகைசூழ்
ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு
திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன் நரம்பு
உளர.” – 138 – 142.
பாலாடையன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த
மாலை சூந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின்
இசையிலே பயின்று பயின்று நன்மை உடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே
பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர் இனிய யாழ் நரம்பினை இயக்கிப் பாடுவர்.
( ஆகம் – மார்பு
; எஃகு – கூர்மை ; யாழோர் – யாழ்ப்பாணர்.)
முருகனைப் பாடும் மகளிர் தோற்றப் பொலிவு:
“நோயின்று இயன்ற
யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும்
மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும்
திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பனிந்து ஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு
மறுவின்றி விளங்க.” – 143 – 147.
பாடும்
மகளிர், நோயில்லாது நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை
போன்று மிளிரும் தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர் ; பாடினியர்
இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்வர்.
(பருமம் – மேகலை
; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – பசலை / தேமல். )
முருகனை வணங்குவோர் :
முருகப் பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள்
முன்னே செல்ல, அவர்களைப் பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப்
பாடிக்கொண்டே பின்னால் வர, அவர்களுக்குப் பின்னால் திருமால், சிவபெருமான், இந்திரன்
ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.
(
முருகனின் தந்தை சிவபெருமான் இல்லையோ….?)
……………….தொடரும்……………………………..