தமிழமுது -22 - கடவுள் கோட்பாடு
- தொல்தமிழர் வழிபாடு.
சிறு தெய்வ வழிபாடு: கல் தெய்வமாதல்.
”ஏறுடை இனநிரை பெயர பெயராது
செறிகரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல்லிசை நிறுமார்
பிடிமடிந்தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்
செம்பாங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூடி கழற்கால்
இளையர் பதிப்பெயரும் அரிஞ்சுரம் இறந்தோர்.”-மதுரை மருதனிள
நாகனர்:அகநானூறு, 269: 3-13.
அஞ்சாமை உடைய கரந்தை வீரர்கள், காளையை உடைய பசுக்
கூட்டங்கள் மீண்டு வரவும் தாம் வாராது சுரைகள் கொண்ட வெண்மையான வேல்களை உடைய வெட்சி
வீரர்களை மீண்டும் நிரை மேற்செல்லாது தடுத்து நிறுத்தி, அவரோடு போரிட்டு இறந்து பட்டனர்,
அவர்தம் நிலைபேருடைய நல்ல புகழை நிலைநிறுத்துமறு
உயிர் பிழைத்த கரந்தை வீரர்கள், பெண் யானைகள் படுத்துக் கிடந்தாற்போன்ற குன்றுகளின்
பக்கத்தே, நட்டு வைத்தாற் போன்ற இயற்கையாகவே எழுந்த கற்களின் அகன்ற இடத்தைச் செதுக்கிப்
பல வடிவங்களை அமைத்தனர் ; அவற்றை நீராட்டி நறுமணமுள்ள மஞ்சளை ஈரம் புலராப் புறப்பகுதியில்
பூசினர்; அம்பு கொண்டு அறுத்து உரித்தெடுத்த ஆத்தியின் நாரினால் சிவந்த கரந்தைப் பூவினைத்
தொகுத்துக் கட்டிய கண்ணியைக் கோடுகளையுடைய வண்டுகள் ஒலிக்க, அவ்வடிவங்களுக்குச் சூட்டிக்
கழல் அணிந்த காலினையுடைய வீரர்கள் , தம் பதிக்குத் திரும்பினர்.
இறந்த வீரர்களுக்குக் காட்டு வழியில் எழுந்து நிற்கும் குன்றுகளில் அவ்வீரர்களின் பெயர்களைக் குறித்து, அக்குன்றில்
அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.
தொல்பழங்காலத்தில் கோயிகள் கட்டப்படவில்லை. குன்றுகளைக் குடைந்து
அழகு படைத்துப் பூசை முறைகளையும் மேற்கொண்டனர்.
அன்று நடுகல் அமைத்த இடங்கள் போன்று இன்றும் ‘குலதெய்வக்
கோயில்களை காட்டுக் கோயில் என்று அழைக்கின்றனர்.
தமிழன் :
கல்லிலே கலை வண்ணம் கண்டவன்
மனிதருள் வீரமரணம் எய்தியோரைத் தெய்வமாக்கியவன்
வழிபாட்டிற்குரிய பூசை முறைகளைத் தோற்றுவித்தவன்.
தொல்தமிழர் வரலாற்றில் இன்றைய கோயில்களுக்குத்
தோற்றப் பொலிவளித்தவன்.
இன்று கலைக்கோயில்களில் கருநாகங்கள் குடி புகுந்து
நம்மைத் தீண்டுகின்றன.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக