தமிழமுது –192– தொல்தமிழர் இசை மரபு:52.
2. குறுந்தொகை. கூத்துக்கலை:
“ வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.” - பெரும்பதுமனார்,-7.
கழைக் கூத்தர்கள், மூங்கிலின் மேல் கட்டிய கயிற்றின்மேல் ஏறி நின்று ஆடும் போது கொட்டப்படும் பறை ஒலியைப் போல மேல்காற்று வீசும் போது நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்ணிற நெற்றுகள் ஒலி எழுப்பும், அத்தகைய மூங்கில் செறிந்த பாலை நிலப்பரப்பில் கடந்து செல்ல நினைத்து வருபவர்களுள், கையில் வில்லை ஏந்திய இவ்வாடவன் கால்களில் வீரக்கழல்கள் உள்ளன; வளையணிந்த கைகளையுடைய இம்மகளின் மெல்லிய அடிகளின் மேல் சிலப்புகள் உள்ளன இந்நல்லோர் யாவரோ.? இரங்கத்தக்கவர்.
துணங்கைக் கூத்து.
“ மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.” - ஆதிமந்தி , 31.
மாட்சிமை பொருந்திய தகுதியுடைய என் தலைவனை, வீரர்கள் கூடி எடுக்கும் வில் விழாவின் கண்ணும் மகளிர் தத்தமக்குரிய மள்ளரைத் தழுவியாடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும், இவையல்லாத பிறவிடத்தும் தேடியும் காணக் கிடைத்திலேன் யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே , என் கையில் உள்ள சங்கு அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை நெகிழச் செய்த பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே. என்று வருந்திக்கூறினாள் தலைவி.
தாள முழக்கு:
“ பதலை பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவிநாறு நறுநுதல்
தவ்வென மறப்பரோ..........” மோசிகீரனார், 59:1-4.
ஒருகண் மாக்கிணையை இயக்குகின்ற , தாளத்தையுடைய பாணர் முதலிய இரவலர்களைப் பாதுகாக்கின்ற அரசனின் அதலை என்னும் குன்றத்தின்கண், அகன்ற வாயினையுடைய ஆழமான சுனைகளில் பூத்த குவளை மலர்களோடு சேர்த்துக்கட்டிய காட்டு மல்லிகையின் மணம் வீசுகின்ற நின்னுடைய நல்ல நெற்றியைத் தலைவர் மறப்பாரோ....”
(என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்..... பதலை ஒரு கண் மாக்கிணை என்னும் பறை ; பாணி -தாள ஒழுங்கு ; குவளை- காட்டு மல்லி / மலைப்பச்சை )
........................................................தொடரும்..........................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக