தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -66.
முனைவர் இரெ. குமரன்: 5. பரிபாடல்
தொல்தமிழர் - வழிபாடு : பரிபாடல், கடவுள் வாழ்த்து.
பரிபாடல்; நூற்குறிப்பு.
பழம் பெருமை மிக்க எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாக அமைந்தது பரிபாடல். “ஓங்கு பரிபாடல்” என்று புகழப்பட்ட சிறப்புடையது இந்நூல். சஙக நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் இஃதொன்றே. உரையாசிரியர்கள் எழுபது பாடல்களைக்கொண்டதாக இதனைக் குறித்தாலும் இன்று கிடைப்பன இருபத்திரண்டு தொடர்ச்சியான பாடல்களும், உரைகளிடையே மேற்கோளாகக் காட்டப்பட்டனவாகப் பின்னர்க் கண்டறியப்பட்ட இரண்டு முழுப்பாடல்களும் சில உறுப்புகளுமேயாம்.
ஆசிரியர் நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இளவெயினனார், கரும்பிள்ளைப்பூதனார், கீரந்தையார், குன்றம்பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழிசியார், நல்லெழினியார், நல்வழுதியார், மையோடக்கோவனார் ஆகியோர் பாடலாசிரியர்களாக அறியப்படுகின்றனர்.
கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நந்நாகனார், நல்லச்சுதனார், நன்னாகனார், நாகனார், பெட்டநாகனார், மருத்துவன் நல்லச்சுதனார் ஆகியோர் இசை வகுத்தோராக அறியப்படுவர். பாலை யாழ், காந்தாரம், நோதிரம், என்பன வகுக்கப்பட்ட பண்களாகும்.
கடவுள் வாழ்த்து.
“ஆங்கு, காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழிப் புலவ நிந்தாள் நிழல் தொழுதே.” -64 –68.
வேதங்களை அருளிய திருவாயினை உடைய தெய்வப் புலவ...! நாங்கள் எம்மால் விரும்பப்படும் சுற்றத்தாரோடு உன் திருவடியின் கண்ணே ஒன்று சேரக்கூடி நின்று ‘ உன் திருவடி நிழலைத் தொழுது நாள்தோறும் பொலிந்து விளங்குவோமாக’ என்று இன்புற்ற மனத்தினை உடையவர்களாய் வணங்கி வழிபடுகிறோம்...! அருள்வாயாக...!
( காமரு - விருப்பம் பொருந்திய ; அடி - திருவடி ; உறை - உறைதல், தங்குதல் ; ஒன்றுபு - ஒன்றி ; வைகல் - நாள்தோறும் ; ஏம் - இபம். ; பரவுதும் - வழிபடுகின்றோம் ; வாய்மொழி - வேதம் (எழுதாக்கிளவியாதலின் இவ்வாறு கூறப்பட்டது..)
...............................................................தொடரும்..........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக