தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -67.
முனைவர் இரெ. குமரன்: 5. பரிபாடல்
தொல்தமிழர் - வழிபாடு : பரங்குன்றம் வாழ்த்தல் :
“ என ”ஆங்கு,
உடம்புணர் காதலரும் அல்லாரும் கூடி
கடம்பு அமர் செல்வன் கடிநகர் பேண
மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்
மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண் பரங்குன்றம் நினக்கு.. 8. செவ்வேள் - 124 – 130.
பல வகையால் மக்களுக்குப் பயன்மிக்க இன்பத்தினைத் தரும் குளிர்ச்சி நிறைந்த திருப்பரங்குன்றமே..! தம்முள் பிரியாது கூடி இன்புறும் காதல் மிக்க மகளிரும் ஆடவரும் அவர்கள் அல்லாத பிறராகிய வரம் வேண்டுவோர், கடம்படுவோர் அருச்சிப்போர் ஆகிய அனைவரும் ஒன்றாகக் கூடி, நஞ்சுண்ட கறைக் கண்டத்தினை உடைய சிவபெருமானும் குற்றமில்லாத உமையம்மையும் பெற்ற கடம்ப மரத்தில் விரும்பி உறையும் அருள்மிக்க முருகப்பெருமான் எழுந்தருளிய திருக்கோயிலை இன்று போலவே என்றென்றும் வழிபடவேண்டும் ; இம்மண்ணுலகத்தில் வாழும் உயிர்கல் வருந்துமாறு மழை வறண்டு போனாலும், மலையிலிருந்து நெறிப்பட நீர் வீழும் அருவி இடையறாது தடையின்றி ஒழுகுவதாகிய பெருஞ்செல்வம் உனக்கு என்றென்றும் நிலை பெற வேண்டும் ; அவ்வாறு அமைவதாக என்று வாழ்த்தினர்.
.......................................................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக