புதன், 4 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :926


திருக்குறள் -சிறப்புரை :926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.---- ௯௨௬
 உறக்கத்தில் இருப்பவர்களின் அறிவும் ஆழ்நிலையில் செயற்படாமையால் அவர்கள் செத்தாரின் வேறாகக் கருதப்பட மாட்டார்கள் அதுபோல் கள்ளுண்பவர்களின் அறிவும் மயங்கிச் செயற்படாமையால் அவர்களும் நஞ்சு உண்பவர்களினின்றும் வேறாகக் கருதப்பட மாட்டார்கள்.
“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.” –மணிமேகலை.
நல்லறிவை மயக்கும் கள்ளினையும் நிலை உயிர்களைக் கொல்லுதலையும் அறிவுடையோர் தீயவை என விலக்கினர்.



செவ்வாய், 3 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -10
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைவன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திருந் தானே.” –திருமந்திரம்.
ஐம்பொறிகளுக்குத் தலைவன் – ஆருயிர்
ஐவர் வாழும் ஊர் – ஐம்பொறிகள் ; உடல்
அவ்வூர்க்குத் தலைவன் – மனம்
குதிரை – உயிர்ப்பு (உயிர் வளி)
அகத் தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும்; முறையான பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது, துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு சென்றுவிடும்.

திருக்குறள் -சிறப்புரை :925


திருக்குறள் -சிறப்புரை :925
கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.--- ௯௨௫
தன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளுண்டு, தன்னை அறியாது தானே மயங்கிக்கிடக்கும் செயல், ஒருவன்  தான் செய்வது இன்னதென்று அறியாத அறிவற்ற செயலாகும்.
” கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும் – இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.” ---திரிகடுகம்.
சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்வான் குடிப்பிறப்பும்  ஆகிய இம்மூன்றும் நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.

திங்கள், 2 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.-குறள்.262.
”சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ.
தவம் என்பது விரதம் முதலிய நியமங்களால் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை நோக்கி உருகியிருப்பது. இதனால் ஆன்மா புனிதம் அடைகிறது ; அடையவே பரமான்மாவின் ஒளியையும் திருவருளையும் நேரே பெறுகிறது; பெறவே அது அதிசய மகிமைகள் உடையதாய் உலகம் துதிசெய்ய வருகிறது.” –ஜெகவீரபாண்டியனார்.

திருக்குறள் -சிறப்புரை :924


திருக்குறள் -சிறப்புரை :924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. --- ௯௨௪
கள் உண்ணல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்யும் குடிகாரன்முன், நாணம் என்னும் நற்குணம் நிறைந்த பெண், அவ்விடத்தே நிற்க வெட்கப்பட்டு விலகிப் போவாள்.
“ பொய்யான் புலாலொடு கள் போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால்; என்றும்
அயல அயலவர் நூல். – ஏலாதி.
பொய் கூறான் புலால் உண்ணான், கள் குடியான், தீமைகள் செய்யான், சிற்றினம் சேரான், பிறரை இகழ்ந்து பேசான் இத்தகைய அருங்குணங்கள் வாய்க்கப்பெற்ற ஒருவனுக்கு உற்று நோக்குங்கால் அறிவுநூல்கள் வேண்டுவனவல்ல.



ஞாயிறு, 1 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -8

மெய்ப்பொருள் காண்பது அறிவு -8
“ பெண்ணைச் சம்பளமில்லா அகப்பையாக ; ஆணைச் சம்பாதித்துப் போடவந்த கலப்பையாக நினைக்காமல் இருவரும் குடும்ப நிலையறிந்து வாழ்ந்துவந்தால், படகு ஜீவநதியில் மெத்தென மிதந்து செல்லும். –பூண்டி ஐயா. 

திருக்குறள் -சிறப்புரை :923


திருக்குறள் -சிறப்புரை :923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.--- ௯௨௩
கள் உண்டு களிப்பவனைக் காணும் பெற்றதாயின் முகத்திலேயே வெறுப்புத் தோன்றுமென்றால் ஒழுக்கத்தை உயிராகப் போற்றும் சான்றோர் முன் கள்ளுண்டு களித்தால் எப்படியிருக்கும்..?
”பிறன்மனை கள் களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்….” ஆசாரக்கோவை.
அறவழி அறிந்த சான்றோர், பிறன் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவாடல், சூதாடல், கொலை செய்தல் ஆகிய இவ்வைந்து குற்றங்களையும் செய்வோரை விரும்பார்.