புதன், 8 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -109


தன்னேரிலாத தமிழ் -109

கடை ஆயார் நட்பிற் கமுகு அனையர் ஏனை
இடை ஆயார் தெங்கின் அனையர் தலை ஆயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் நட்பு.நாலடியார்.

கீழ்த்தரமானவர்கள் பாக்கு மரத்தை ப்பர் ; நடுத்தரமானவர்கள் தென்னை மரத்தை ப்பர். பண்பிற் சிறந்த பழைமை உடையார் நட்புச் செய்த காலந்தொட்டே நட்பு உயிர்ப்புடன் தொடர்வதாம்; அவர்களேமுதல் தரமானவர்கள் அவர்கள் எண்ணுதற்கு அருமையான பனை மரத்தை ப்பர்;

செவ்வாய், 7 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -108

காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி…” –புறநானூறு.

அன்பு பொருந்திய மனங்களை உடைய உம்மிடையே (திருமாவளவன்பெருவழுதி) புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார் திரிவர், அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.

திங்கள், 6 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -107

கரப்புடை உள்ளம் கனற்ருபவரே
செருப்பிடைப் பட்ட பரல்.” பழமொழி.

பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர், செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -106


தன்னேரிலாத தமிழ் -106

இம்மை அடக்கத்தைச் செய்து புகழ் ஆக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் மெய்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்புடையாளரே
நட்டார் எனப்படுவார்.” ---அறநெறிச்சாரம்.

 இப்பிறவியில் மன,மொழி, மெய்களால் அடங்கும்படிச் செய்து, பெருமை தரும் புகழினைப் பெருக்கி, மறுபிறப்பில் வீடு பேற்றினை அடையும்படிச் செய்வதால் நீதிநூல்களில் உள்ளபடி உண்மை அறத்தினை எடுத்துக்கூறும் குணம் உடையவர்களே உண்மையான நட்பினர் ஆகும் தகுதி உடையவர்.

சனி, 4 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -105


தன்னேரிலாத தமிழ் -105

இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.”புறநானூறு.

பாரியே..! இப்பிறப்பின்கண் நீயும் நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும் நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த ஊழ் கூட்டுவதாகுக.

வெள்ளி, 3 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -104


தன்னேரிலாத தமிழ் -104

சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக.”ஏலாதி.

நண்பர்கள் இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து  உதவி செய்தலும்; இன்சொல் கூறுதலும்; கூடியிருத்தலை விரும்புதலும்; வருந்தும்போது வருந்துதலும்; பிரியும் காலத்தில் உள்ளம் கலங்குதலும் ஆகிய ஆறு இயல்புகளும் உண்மையான நண்பர்களுக்கு இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.

புதன், 1 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -103

உள்ளத்தால் ஒன்றினார் நட்பும் உயர்வே!
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.”புறநானூறு.

பிசிரோன்(பிசிராந்தையார்) என் உயிர் காக்கும் தோழன்,அவன் என்னிடத்தில் செல்வம் உள்ளபோது வாராமல் இருந்தாலும் யான் துன்புறுங் காலத்தே கட்டாயம் வருவான்.