சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக