வியாழன், 15 டிசம்பர், 2011


திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயர்
இவர் பிறப்பு, வளர்ப்பு, கல்வி போன்ற செய்திகளை விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இவர் எழுதிய திருக்களர் வைபவம் என்னும் நூலில் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளனன. அந்நூலிலும் இவர் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. திருக்களர் தேவஸ்தானத்தில் சிவத்துரோகம் செய்தோரைக் கண்டித்து எழுத, அதற்காகச் சிலர் இவரைத் தூற்றியுள்ளனர். அதற்குப் பதில் கூறும் முகமாகத் தம் குடிப்பெருமை, குலப்பெருமை, குணப்பெருமை முதலியவற்றை எடுத்துக்காட்டி, அவ்வழியில் வந்தவன், வாழ்பவன், பழி. பாவம் ஏதும் அறியாதவன் என எடுத்துக் காட்டியுள்ளார். அக்குறிப்புகளே இப்போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்குத் துணை புரிகின்றன.
திருக்களர் பெருமை
தாம் பிறந்து வளர்ந்து, தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்காளர் என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது கடல் புடை சூழ்ந்த நெடு நிலவுலகிலே, தண்டமிழ் மண்டலத்திலே எண்ணிறந்த கோடி திருத்தலங் களுளொன்றாயும், மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலங் களுளொன்றாயும், தேவாரத்திருப்பதிகமுடைய (275) இருநூற்றெழுபத்தைந்து திருத்தலங்களுள் (7) ஏழு நீங்கலாக (268) இருநூற்றறுபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும், சோழவள நாட்டில் தேவாரத் திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (191) நூற்றுத் தொண்ணுற்றொரு தலங்களுளொன்றாயும் காவிரி நதிக்குத் தென்புறத் தேவாரமுடையனவாய் விளங்கும் (128) நூற்றிருபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (105) நூற்றைந்து தலங்களுளொன்றாயும் விளங்கி நின்றது இத்தலம் என்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக