வியாழன், 15 டிசம்பர், 2011


கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக  திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர்.  நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள்  உரைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக