புதன், 30 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 396

திருக்குறள் – சிறப்புரை : 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. – 396
மணற்கேணியில் தோண்டுந் தோறும்  நீர் ஊற்றெடுத்து பெருகுவதைப் போல;  மாந்தர்,  நல்ல நூல்களைக் கற்குந் தோறும் அறிவு பெருகும்.
“ பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
 கற்றலின் காழ் இனியதில்” – இனியவை நாற்பது.

பற்பல நாளும் வீணே கழியாது, பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடையசெயல் வேறு எதுவும் இல்லை.

செவ்வாய், 29 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 395

திருக்குறள் – சிறப்புரை : 395
உடையார்முன் இல்லார்போல் எக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். – 395
உள்ளவர்முன் இல்லாதார் நின்று,  ஏங்கி இரந்து  பொருள் வேண்டுதல் போலக் கற்றார்முன் பணிந்து கல்வி கற்றவரே கற்றவர் ஆவர், அவ்வாறு கற்க முயலாதார் இழிந்தோராவர்.
“ … ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு.” – நான்மணிக்கடிகை.

 ஒரு குடும்பத்தில் கல்வி கற்காதவன் மூத்தவனாயினும் எவரும் மதிக்கமாட்டார் ; கற்றவன் இளையவனாயினும் அவனை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.

திங்கள், 28 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 394

திருக்குறள் – சிறப்புரை : 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். – 394
சான்றோர் அவையில் பலரும் மகிழும்படி அறிவார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்தி, மீண்டும் எப்போது கூடி மகிழ்வோம்  என எல்லோரும் ஏங்குமாறு பிரிந்து , பிறிதோர் சான்றோர்அவை நாடிச் செல்வதே புலவர் தொழிலாம்.
“ போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
  தேற்றும் புலவரும் வேறு.” – நாலடியார்.

 நூல்களைப் பாதுகாத்துவைக்கும் புலவர் வேறு ; அவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைக்கும் புலவர் வேறு.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 393

திருக்குறள் – சிறப்புரை : 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். – 393
கண் உள்ளவவர்கள் என்று சொல்லத்தகுந்தவர்கள் எண்ணும் எழுத்தும்    கற்றவர்களே ; கல்லாதவர் முகத்தில் உள்ளவை கண்கள் அல்ல, புண்களே.
அறிவை வளர்த்துக்கொள்ளவே கண்களைப் பெற்றுள்ளோம்  ; கண்ணொளி – அறிவொளி.
“ பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிகவும் இனிது.”  -- இனியவை நாற்பது.

 பிச்சை எடுத்தாவது கல்வி கற்றல்  மிகவும் நன்றே

சனி, 26 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 392

திருக்குறள் – சிறப்புரை : 392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. – 392
 ஆறறிவு உடைய மக்களுக்கு நல்வழிகாட்டும் இரு கண்களைப் போன்றவை எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டுமே.
“ எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
 மம்மர் அறுக்கும் மருந்து.” – நாலடியார்.
 அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து,  கல்வியைப்போல் வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.

.

வெள்ளி, 25 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 391

திருக்குறள் – சிறப்புரை : 391
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. – 391
கற்பதற்குத் தகுந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாகக் கற்க வேண்டும் ; கற்றபின் கல்வி கற்றவன் என்று சொல்லத் தகுதியுடையவனாக நடத்தல் வேண்டும்.
“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
 பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.” – புறநானூறு.

 தன் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து அதனைப் போக்க உதவி செய்தும் அவருக்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டும் கல்வி கற்பது நன்மை பயக்கும். 

வியாழன், 24 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 390

திருக்குறள் – சிறப்புரை : 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. – 390
புலவர்களையும் இரவலர்களையும் போற்றிக் கொடைவழங்குதல் ; எவ்வுயிர்க்கும் அருளுதல் ; நெறிபிறழாது ஆட்சி நடத்துதல் ; குடிமக்களைப் பேணிப் பாதுகாத்தல் ஆகிய இந்நான்கு நிலைகளிலும் சிறந்து விளங்கும் மன்னன்  வேந்தர்களுக்கெல்லாம் ஒளி விளக்காம்.
“ கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
 களைக என அறியாக் கசடுஇல் நெஞ்சத்து
  ஆடுநடை அண்ணல் …….. ( பதிற்றுப்பத்து)

 பரிசில் வேண்டி வருவோர்க்கு வாரி வழங்குவதோடு கனவில்கூட ‘ என்னுடைய துன்பத்தை நீக்குக,’ – என்று பிறரிடம் கூறுதலை அறியாத குற்றமற்ற மனத்தையும் வெற்றியைத் தோற்றுவிக்கும் நடையையும் உடைய அண்ணல்.. (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.)

புதன், 23 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 389

திருக்குறள் – சிறப்புரை : 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. – 389
மக்கள் கூறும் குற்றம் குறைகள்,  தன்  காது கசக்கும்படியாக இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருமையுடன்  கேட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள முயலும் பண்புடைய மன்னன் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவர்..
“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்க அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண் அகன் ஞாலம்” – புறநானூறு.

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசனைப் பழித்துரைக்கும்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 388

திருக்குறள் – சிறப்புரை : 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். – 388
நெறிமுறை தவறாது ஆட்சி செய்து மக்களைப் பாதுகாத்துவரும் மன்னன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று போற்றப்படும் சிறப்பை அடைவான்.
“ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
 மன்னன் உயிர்த்தே  மலர்தலை உலகம்.” – புறநானூறு.

இவ்வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று அரசனே உயிராவான் ; மக்கள் உடலாவர்.( உடலுக்கு வரும் துன்பத்தை, உயிர் தாங்குமன்றோ…!)

திங்கள், 21 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 387

திருக்குறள் – சிறப்புரை : 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. – 387
 குடிமக்கள் போற்றுமாறு இனிய சொற்களை உவந்து கூறும் இயல்புடைய மன்னனுக்கு  அவன் விரும்பியவாறு எல்லா நலன்களும் கொண்டதாக இவ்வுலகம் அமையும்.
“ அலத்தல் காலை ஆயினும்
 புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.” – புறநானூறு.

 உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமையுடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 386

திருக்குறள் – சிறப்புரை : 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். – 386
மன்னன், தங்குதடையின்றிக் குடிமக்கள் காண்பதற்கு எளிமை உடையவனாகவும் எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருப்பானேயானால்  அவன் ஆளும் நிலவுலகத்தார் யாவரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்.
“ முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
 உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.” – புறநானூறு.

நீதி வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத்துளியை விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்றவர்.

சனி, 19 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 385

திருக்குறள் – சிறப்புரை : 385
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு. -385
 ஓர் அரசு எவ்வாறு  இருக்க வேண்டும்  எவ்வாறு இயங்க வேண்டும்..?
பொருள் வரும் வழிகளை நெறிதவறாது தேர்ந்தெடுத்தலும்  அவ்வழிகளில் பொருளை ஈட்டலும்  ஈட்டிய செல்வத்தைப் பேணிப் பாதுகாத்தலும் செல்வத்தை நாட்டின் நலன் கருதி ஆராய்ந்து வகுத்த வழிகளில் செலவு செய்தலும் ஆகிய நான்கு வழிகளில் இயங்குவதே சிறந்த அரசாகும்.
“ குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
 சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே.” – புறநானூறு.

குடிமக்களிடம் வரிவேண்டி இரக்கும் சிறுமை உள்ளம் படைத்த,  மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால், அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.

புதன், 16 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 384

திருக்குறள் – சிறப்புரை : 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. – 384
அறத்திற்கு இழுக்கு நேராவண்ணம் ஒழுகுதலும் ; அல்லவை நீக்கி அருளுதலும் ;  வீரத்தில் அறவழியில் மானம் காத்தலும் ஆகிய அறங்களைப் பேணுவதே ஒரு நல்ல அரசுக்குரிய இலக்கணமாம் .
“ ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்
வானத்தன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி…… ” - புறநானூறு.

சூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மையும் வான் மழை போன்ற கொடைச் சிறப்பும்  உடையவனாகுக.

செவ்வாய், 15 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 383

திருக்குறள் – சிறப்புரை : 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. – 383
காலத்தைக் கண்ணெனப்போற்றல், தேர்ந்த கல்வியறிவு,  மயங்காது துணிந்து முடிவெடுத்தல் ஆகிய இம்மூன்று குணங்களும்  நிலமாளும் அரசனுக்கு என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். அஃதாவது காலம்தாழ்த்தாது ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவனாக மன்னன் செயல்பட வேண்டும் என்பதாம்.
“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
 கொல்சின வேந்தன் அவை காட்டும்..” – பழமொழி நானூறு.

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.

திங்கள், 14 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 382

திருக்குறள் – சிறப்புரை : 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. – 382
ஒரு நல்ல அரசனுக்குரிய இலக்கணமாவது, பகைக்கு அஞ்சாமை, இரவலர்க்கு ஈதல், தெளிந்து ஆராயும் அறிவு, மக்களுக்கு உழைப்பதில் ஊக்கம் ஆகிய இந்நான்கு இயல்புகளும் என்றும் குறைவுபடாமல் இருப்பதேயாம்.
“ குழவியைப் பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர …. – கலித்தொகை.

அரசனே… !  குழந்தையைப் பார்த்து பார்த்து முலை சுரந்து பால் ஊட்டும் தாயைப்போல, மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து, உலகைப் பாதுகாத்து வருகிறது ; இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 381

                                              பொருட்பால்
39. இறைமாட்சி
திருக்குறள் – சிறப்புரை : 381
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. – 381
படைவலிமை, நன்மக்கள், நிறைந்தவளம், அறிவிற்சிறந்த அமைச்சர்கள், நட்பிற்சிறந்த நல்லுறவு, வலிமையான எல்லைப் பாதுகாப்பு ஆகிய இவ்வாறும் நிறைவாகப் பெற்றவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.
:” உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே” -பதிற்றுப்பத்து

சனி, 12 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 380

திருக்குறள் – சிறப்புரை : 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். – 380
 ஊழைவிட வலிமை உடைய வேறு எதுவும் உளதோ..?
அதனை விலக்கி முன்னேற முயன்றாலும் அதுவே முன்வந்து நிற்கும். பழவினையின் ஆற்றல் உணர்த்தினார் என்க.
”செய்வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருள் உரை “ – சிலம்பு.

 முன் செய்த வினையின்வழி உயிர் சென்று சேரும் என்பது பொய்யுரை அறியாச் சான்றோர் கூறிய உண்மையாம். 

வெள்ளி, 11 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 379

திருக்குறள் – சிறப்புரை : 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். – 379
நல்வினையால் நன்மை விளைகின்றபொழுது இன்பம் அடைகின்றவர்கள் தீவினயால் தீமை அடைகின்றபொழுது துன்பம் அடைவதேன்..?
“ அறிவினை ஊழே அடும்” – பழமொழி நானூறு.

நல்ல அறிவினை முன்செய்த வினையே கெடுக்கும்.

வியாழன், 10 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 378

திருக்குறள் – சிறப்புரை : 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். – 378
தீவினையின் பயனாகிய துன்பத்தைத் துய்க்கவிடாது ஊழ்வினை கழியுமேயானால்  வறுமையினால் துய்த்தல் இல்லாதவர்கள் துறவு மேற்கொள்வார்கள்.
” ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” – சிலப்பதிகாரம்.

முன் செய்த தீவினை உருப்பெற்றுவந்து தன் பயனைத் துய்க்கச்செய்யும்.

புதன், 9 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 377

திருக்குறள் – சிறப்புரை : 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – 377
   இன்னார்க்கு இவ்வளவு என்று ஊழே வரையறுத்துள்ள நிலையில்,  கோடி கோடியாகச் செல்வத்தைக் குவித்தவர்களும்கூட  ஊழ்வினை வகுத்த விதிகளுக்கு மேலாக இன்பத்தை துய்த்துவிட முடியாது .
“ முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்.” – பழமொழி நானூறு.

உலகத்தை  முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது முயற்சியின்றி இருந்தால்  துன்பம் நீங்குமோ..?

செவ்வாய், 8 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 376

திருக்குறள் – சிறப்புரை : 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. – 376
ஆகூழின்றி எவ்வளவுதான் முயன்று விரும்பிப் போற்றினும் செல்வம் நில்லாது தொலைந்துவிடும் ;  ஆகூழால் வந்து சேர்ந்த செல்வத்தை வேண்டாமென்று வெளியே கொட்டினும் அது நம்மை விட்டுப்போகாது .
“ தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை…. – நாலடியார்

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இறந்தபின் தம்முடன் வருவது தாம்செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தவிர வேறொன்றுமில்லை.

திங்கள், 7 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 375

திருக்குறள் – சிறப்புரை : 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. – 375
செல்வத்தை ஈட்டும் முயற்சியில்  ஆகூழால்  தீயவைகூட நல்லவையாகி நன்மை பயத்தல்   உண்டு ; போகூழால் நல்லவை எல்லாம்கூடத் தீயவையாகிக் கேடு பயத்தல் உண்டு.
“ ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா” – சிலப்பதிகாரம்.
ஒழிக என வேண்டினும் ஒழியாது தானே எதிர்வந்து தன் பயனை ஊட்டக்கூடியது வல்வினை ; நிலத்தில் இட்ட வித்தினைப் போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி உரியவரை வந்துசேரும் அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஊழ் – வினை விளையும் காலம் என்க.

ஞாயிறு, 6 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 374

திருக்குறள் – சிறப்புரை : 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. – 374
இரவும்பகலும் இணைந்து ஒரு நாளாதல் போல இவ்வுலகம் இருவேறு இயல்புடையதாக இருக்கிறது ; செல்வம் உடையவர்,  தெளிந்த அறிவுடையர்  ஆகிய இருவேறு இயல்புடையோர் இவ்வுலகில் உள்ளனர்.
“ உம்மை வினை வந்து உருத்த காலைச்
 செம்மை இலோர்க்குச் செய் தவம் உதவாது” – சிலப்பதிகாரம்.

முன் செய்த வினை, அதன் பயனை விளைவிக்க வந்து சேர்ந்த பொழுது, பண்பு இல்லாதவர்க்கு அவர் செய்த தவமும் உதவாது.

சனி, 5 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 373

திருக்குறள் – சிறப்புரை : 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். – 373
சான்றோர்அருளியஅறிவுசெறிந்த நூல்களைக் கற்றுத்தேறினும் தீவினையானது கற்றறிந்த அறிவால்  தெளிவிபெற  விடாது , இயல்பான அறிவே மேலெழுந்து செயல்படும்.
” நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்…”
                  கணியன் பூங்குன்றன், புறநா. 192: 9 – 11
ஆற்று நீரில் மிதந்து செல்லும் தெப்பம்போல, வாழ்க்கையும் ஊழின் வழியே செல்லும் என்பதைச் சான்றோர் கூற்றால் தெரிந்துகொண்டோம்.