தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -68.
முனைவர் இரெ. குமரன்: 5. பரிபாடல்
தொல்தமிழர் - வழிபாடு :
மகளிர் தைந்நீராடி வேண்டிக் கோடல்.
“ சேய் உற்ற கார்நீர் வரவு
நீ தக்காய் தைந்நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்
கழுத்து அமை கை வாங்ககாக் காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்
பூ வீழ் அரியின் புலம்பப் போகாது
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும்
மழ ஈன்று மல்லற்கேள் மன்னுக என்மாரும்....”
- நல்லந்துவனார், 11. வையை: 114 – 121.
முன் சொல்லிய கார்பருவத்து நீர் போன்று கலங்கிய செந்நிறமுடையதாக இல்லாமல்,
தைந் நீரே ...! நீ, நாங்கள் நீராடி மகிழும் அளவில் தெளிந்த நிறமுடையை ஆதலின் நீ நல்ல பண்புகளை உடைமையின் கணவன்மார் எங்கள் கழுத்தில் அமைத்துத் தழுவிய கைகளை விலக்கிக் கொள்ளாமல் எங்களை எப்பொழுதும் தழுவி நிற்கவும் ; அதனால் நாங்கள் பெருமை பெறவும் அருள் செய்க என்று வேண்டிக்கொண்டனர் ; சிலர் எங்களால் விரும்பப்பட்ட தலைவர் மலருக்கு மலர் தாவும் வண்டு போல் எங்களைப் பிரிந்து தனித்து வருந்தும்படி விட்டு நீங்கிப் போகாமல் எங்களுடனேயே இருத்தலால் நாங்கள் இன்பம் பெறுமாறு அருள்வாயாக என்று வேண்டிக்கொண்டனர் ; சிலர் எங்கள் கணவரும் நாங்களும் கிழவர் கிழத்தியர் என்று உலகத்தவரால் கூறப்படாமல் எங்கள் ஏழாம் பருவத்திற்குரிய ஆண்டினை அடையும் அளவும் இளமைப்பருவமே நிலைபெறுமாறு இத்தைந்நீர்த் தவம் தந்தருள, நாங்கள் வளமான செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறும்படி அருள்க என்று வேண்டிக்கொண்டனர்.
( கார் - கார்ப்பருவம் ; தக்காய் - நற்பண்பு உடையதால் தகுதி உடையாய் ; கழுத்து அமை கை - கழுத்தைச் சுற்றிய கை. ; புல்ல - தழுவ ; விழுத்தகை - வீறு , பெருமை. ; பூ வீழ் - மலரை விரும்பும். ; அரி - வண்டு ; புலம்ப - தனித்து வருந்த ; யாம் வீழ்வார் - எம்மால் விரும்பப்பட்டவர். ; ஏமம் - இன்பம். ; கிழவர், கிழவியர் - முதுமைப் பருவத்தினர் ,தலைவன் தலைவி ; ஏழ் - ஏழாம் பருவம் : மழவு - இளமை ; மல்லல் - செல்வம் ; கேள் - சுற்றம் ; மன்னுக - நிலைபெறுக.)
...........................................தொடரும்.............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக