திங்கள், 30 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :862


திருக்குறள் -சிறப்புரை :862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. --- ௮௬௨
ஒருவன் தன்னைச்சார்ந்தாரிடத்தும் அன்பு இல்லாதவனாய் ; துன்பத்தில் துணையாகும் நல்ல துணை இல்லாதவனாய் ; தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவனால் எப்படிப் பகைவரின் வலிமையை வெல்ல முடியும்..?
“இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை…” ---நாலடியார்.
ஒரு செயலைச் செய்ய இயலாது என்றாலும் மன வலிமையால் அச்செயலை வென்றெடுக்க முயல்வதே ஆண்மைக்கு அழகு.


ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :861


87. பகை மாட்சி
திருக்குறள் -சிறப்புரை :861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. --- ௮௬௧
(மாறு ஏற்றல்)
தம்மைவிட வலியவரைப் பகைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் ; தம்மைப் போற்றாத மெலியாரிடத்துத் தோன்றும் பகைமையை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“வலியர் என வழிமொழியலன்
 மெலியர் என மீக்கூறலன்.” ---புறநானூறு.
 தன்னைவிட வலியவர் என்று கருதி எவரையும் வணங்கி வழிபடான் ; எவரையும் இவர் எளியவர் என்று கருதித் தன்னைத்தானே புகழ்ந்து கூறிக்கொள்ள மாட்டான்.(நெடுஞ்செழியன்)


சனி, 28 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :860


திருக்குறள் -சிறப்புரை :860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.---- ௮௬0
பகைமையால் ஒருவனுக்கு இன்னாதன எல்லாம் வந்துசேரும்;  நட்பு ஒன்றினாலே நல்லவன் என்னும் பெருமிதம் உண்டாகும்.
“நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்.”---புறநானூறு.
நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையன் ஆகாமல் விளங்குக.


வெள்ளி, 27 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :859


திருக்குறள் -சிறப்புரை :859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.---- ௮௫௯
ஒருவன் செல்வ வளம் பெறும்பொழுது எவரிடத்தும் மாறுபாடு கொள்ளான்; அவனோ கேட்டினை வரவழைத்துக் கொள்வதற்கு மாறுபாட்டினை மேற்கொள்வான்.
”அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ…” ---பழமொழி.
அடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ? விரும்ப மாட்டார்.

வியாழன், 26 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :858


திருக்குறள் -சிறப்புரை :858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.--- ௮௫௮
மனத்தில் எழும்  காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அதனை நீக்குதல் ஆக்கம்தரும், அப்படிச் செய்யாமல் அவ்வுணர்ச்சியை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவானாயின் அவன் தனக்குத் தானே  கேட்டினை ஊக்கப்படுத்திக் கொண்டவனாவான்.
“ தீதும் நன்றும் பிறர்தர வாரா
 நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.”—புறநானூறு.
நமக்கு நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை ; துன்பம் நேர்தலும் அது தீர்தலும் கூட நம்மால் விளைவதே.

புதன், 25 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :857


திருக்குறள் -சிறப்புரை :857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். ----- ௮௫௭
வெறுப்பு என்னும் தீமையோடு ஒன்றினார் துன்பத்தை உண்டாக்கும் அறிவினையுடையார்,அவர்,  இன்பம் தருகின்ற நன்னூல்கள் நல்கும் மெய்ப்பொருள்களை அறிய விரும்பார்.
“ நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
 கெடுங்காலம் இன்றிப் பரக்கும்…” –நாலடியார்.
நீண்ட காலம் கழிந்தாலும் மனிதத் தன்மையற்றவர்களின் சினம் அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும்.


செவ்வாய், 24 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :856


திருக்குறள் -சிறப்புரை :856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. --- ௮௫௬
பிறரை இகழ்வதே இன்பம்  என்று கருதி அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித்  துன்புறுதலும் அழிவதும் விரைந்து நடக்கும்.
“ கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல கனைத்து. “ –நாலடியார்.
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு அரிப்பு எடுக்கும்.


திங்கள், 23 ஏப்ரல், 2018


திருக்குறள் -சிறப்புரை :855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர். --- ௮௫௫
(இகல் எதிர்; சாய்ந்து ஒழுக ; மிகல் ஊக்கும்)
மனத்தில் காழ்ப்பு உணர்வு தோன்றும் பொழுது அதனைப் புறந்தள்ளி, இயல்பாக நடந்துகொள்ளும் வல்லமை உடையவர்களை வெல்லக்கருதும் தன்மை உடையவர்கள் யாவர் ? ஒருவரும் இல்லை என்பதாம்.
“ இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.” ---புறநானூறு.
இவ்வுலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது; உலக இயல்பு உணர்ந்தவர்களே , வாழ்வில் இனிமை காண்பர்.


ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

LINGUISTIC PRE-HISTORY OF INDIA…….3


LINGUISTIC PRE-HISTORY OF INDIA…….3
               Vedic language was the language of Vedic mantras. It had a longer history as a communicative medium of mantras. It lived in the memory of Vedic scholars and Pandits. When Sayanacharya in the 14 century A.D. gave a written form borrowing Devenagary Script used for Sanskrit language and gave the veneer  of Sanskrit. Thus Vedic mantras got the form of a written language from 14th  century A.D. Vedic language and Sanskrit languages are having poetic differences, morphological differences, syntactical differences and semantic differences  according to Sriman Narayanamurthy .
   Therefore Vedic language and Sanskrit languages are entirely two different languages. Most of the early Indian historians, literary historians and linguists erroneously thought that Vedic language and Sanskrit languages are one and the same and enforced a serious error in the early Indian history by creating misleading nomenclature for their imaginary language as “Vedic Sanskrit”.
Vedic language without a written form as religious mantras had a very long history. With a written form had a history from fourteenth century A.D. It is still living as a language of religious communication. Sanskrit language had a genesis first in the first century B.C. as experimental inscriptional language and its birth as a literary language was in the 4th  century A.D. Sanskrit language had a flourishing history during the age of ritual politics throughout India.  According to Gopalasamy Iyangar about sixty percent of Sanskrit literary creations were made in South India as Sanskrit language was an all India language. It was not Vadamozhi. In the Tamil word is erroneously called Vadamozhi.
   ……………Contd.

திருக்குறள் -சிறப்புரை :854


திருக்குறள் -சிறப்புரை :854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.---- ௮௫௪
துன்பத்துள் கொடிய துன்பமாகிய காழ்ப்புணர்ச்சி கெட்டு ஒழியுமாயின்  அந்நிலையே இன்பத்துள் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.
“உள் இல்லோர்க்கு வலி ஆகுவன்
கேள் இல்லோர்க்குக் கேள் ஆகுவன்.” –புறநானூறு.
வாட்டாற்று எழினியாதன், ஊக்கம் இல்லாதார்க்கு உரமாகித் துணை செய்வான்; சுற்றம் இல்லாதார்க்கு உறவாகி மகிழ்ச்சி அளிப்பான்.

சனி, 21 ஏப்ரல், 2018

LINGUISTIC PRE-HISTORY OF INDIA……. 2


LINGUISTIC PRE-HISTORY OF INDIA……. 2
                After the birth and growth of archaeological  explorations and the historical discoveries of Indus valley civilization, history noe tells that Sanskrit language in India had a very late origin in the fourth century A.D. as the inscriptional language of ritual politics confirmed by the Guptas of Gangetic zone, Pallavas of Kanchi mandalam and Vishnugunins in the Deccan. Sanskrit literature was artificially produced  to the benefit  of a tiny minority, the beneficiaries of ritual state. Sanskrit was never been a spoken language. The leading epigraphist, K.V.Ramesh and Professor of Sanskrit M.A. Mahendale indirectly explain the late origin of Sanskrit. K.V. Ramesh wrote, “with an element of surprise in the contrary to our normal expectations built up by all that we know of our hoary past,  all our earliest readable inscriptions are in (northern / Dravidian) Prakrit and not in Sanskrit”, (Indian Epigraphy volume I Delhi,P.41) M.A.Mahendale, Professor of Sankrit wrote, of Sanskrit secular poetry we have unfortunately no extant work dating back to the date preceding the Christian Era, a period marked by fervent activity in Prakrit literature.(Sanskrit secular poetry, in the Age of Imperial unity, by R.C.Majumder and published by Bharathiya Viydhya Bhavan, Bombay, 1951.P.265).
                                  During 4th and 5th centuries Sanskrit as a young language had to depend upon Dravidian language for its enrichment and growth. Sriman Narayanamurthy sums up the situation thus “The loan words from Dravidian languages are particularly numerous and important. They provided a continuous source of the enrichment of Sanskrit vocabulary from the earlier period onwards.” ( Introduction to Sanskrit linguistics D.K.Publication New Delhi, P.60.)   …..Contd.

திருக்குறள் -சிறப்புரை :853


திருக்குறள் -சிறப்புரை :853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.---- ௮௫௩
(தவல் இல்லா –அழிவு இல்லாத; தாவில் – கெடுதல் இல்லாத)
வெறுப்பு என்னும் துன்பம் தரும் கொடிய நோயினை ஒருவன் தன் மனத்தினின்று முற்றாக நீக்கிவிடுவானாகில் அது அவனுக்கு எக்காலத்தும் கெடுதல் இல்லாத புகழினைத்
தரும்.
“ கருத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து ஆற்றிச் செறல் புகழ்..”---பழமொழி.
தமக்குத் தீமை செய்தாரையும் பொறுத்து அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாகும்.


வெள்ளி, 20 ஏப்ரல், 2018

LINGUISTIC PRE-HISTORY OF INDIA


LINGUISTIC PRE-HISTORY OF INDIA
THROUGH ARCHAEOLOGICAL ROUTE
Prof. V.T.Chellam
Historian and Environmentalist
Kanyakumari
The general belief is that Sanskrit was the earliest   language of India. The claim by some sections of Tamil world is that is as old as Sanskrit. Both these views   are born from unhistorical generalization. Therefore both views are erroneous.
   W.W. Wilson of Asiatic School of Bengal, after 1784, in the absence of archaeological evidences, long before the discovery of Indus Valley Civilization, riding on medieval mythology of Vedic School which had a safe placement in historical vacuum, declared that Sanskrit was the earliest and oldest language of India. In 1787, during the third anniversary of Asiatic School, William Jones the first European Judge in India, and the first President of Asiatic School of Bengal, using his excellent knowledge of European languages, erroneously thinking that all Indians except Indo-Aryans were barbarians, imagined and formulated the famous Indo-European family of languages. Both these theories had powerful and long lasting influence on linguistic pre-history of India though born through unhistorical process without the backing of archaeology.
……..Contd.

திருக்குறள் -சிறப்புரை :852


திருக்குறள் -சிறப்புரை :852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.--- ௮௫௨
ஒருவன் தன்னுடன் ஒன்றுபடாமை கருதி  அன்பற்ற செயலைச் செய்தாலும் வெறுப்பினால் அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்த பண்பாம்.
“ தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று…” –கலித்தொகை.
தமக்கு இனிதாக இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிந்து செய்வது நன்றாகுமோ..?


வியாழன், 19 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :851


86. இகல்
திருக்குறள் -சிறப்புரை :851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.--- ௮௫௧
இகல் எனப்படுவது முரண்பாடு, அஃதாவது உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்து வாழ ஒட்டாது  அவைகளை வேறுபடுத்தும் பண்பின்மையை வளர்க்கும் கொடிய நோய் ஆகும்.
“அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க…” ---நாலடியார்.
அருமையான இந்த உடம்பைப் பெற்ற பயனால்  பெரும் நன்மை தரக்கூடிய அறநெறி நிற்றலைத் தேடிக்கொள்ள வேண்டும்.

புதன், 18 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :850


திருக்குறள் -சிறப்புரை :850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.--- ௮௫0
உலகத்தார் உண்மையெனக் கண்டறிந்து கூறுவனவற்றை யெல்லாம் புல்லறிவாளன் இல்லை என்று மறுத்துக் கூறுவான் ; அவன் இவ்வுலகத்தில் மனித வடிவில் திரியும் பேய் என இகழப்படுவான்.
“ அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர் – பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால்கூழை
மூழை சுவை உணராது ஆங்கு.” –நாலடியார்.
அருளின் அறம் உரைக்கும் அன்புடையார்தம் வாய்ச் சொற்களை அறிவுடையோர் ஏற்றுப் போற்றுவர் ;அறிவற்ற மூடனோ பால் சோற்றின் சுவையை உணராத துடுப்பைப் போலப் பெரியோர் வாய்ச் சொற்களை இகழ்ந்து பேசுவான்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :849


திருக்குறள் -சிறப்புரை :849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.--- ௮௪௯
புல்லறிவாளன், தன்னை எல்லாம் அறிந்தவனாகக் கருதிக் கொள்வதால் பிறர் அவனுக்கு அறிவுரை வழங்க  முனைந்தால் அவனால் பழிக்கப்படுவதோடு அறிவுரை வழங்கச் சென்றவர் ஒன்றும் அறியாதவனாகி நிற்பர்.  அறிவுரை ஏற்கும் அளவுக்கு அறிவற்றவன் தான் தன்னை உணர்ந்தவாறே எல்லாம் அறிந்தவனாகத் தன்னை மேலாக எண்ணிக் கொள்வான்.
”கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
 சொல் ஞானம் சோர விடல்.” ---நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே. நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.


திங்கள், 16 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :848


திருக்குறள் -சிறப்புரை :848
ஏவவும் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். ---- ௮௪௮
(அளவும் ஓர் நோய்)
சிற்றறிவு உடையான், அறிவுடையோர் சொல்லியபடி நடக்க மாட்டான்; தானே சிந்தித்து செயல்படவும் அறியான், அவன் உயிர் நீங்கும்வரை அவனுக்கு இஃது ஒரு நோயாகும்.
“அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.—நாலடியார்.
பொறாமை முதலிய கெட்ட குணங்கள் இல்லாத அறிவுடையோர் அறக்கருத்துகளை எடுத்துச் சொல்லும்போது  நற்குணம் இல்லா சிற்றறிவினர் செவி கொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :847


திருக்குறள் -சிறப்புரை :847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.---- ௮௪௭
அரிய நூல்களின் நுண்பொருளைச் சான்றோர் உரைத்தும் அதன்வழி நடக்காது,  தன்மனம்போல் நடக்கும் அறிவற்றவன் தனக்குத் தானே தீராத தீங்கினைச் செய்து கொள்வான்.
“பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்
நன்று அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால். ”---நாலடியார்.
நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது, பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில் மாம்பழச்சாற்றை ஊற்றியது போலாகும்.

சனி, 14 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :846


திருக்குறள் -சிறப்புரை :846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. --- ௮௪௬
தம்மிடத்து உள்ள குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக்கொள்ள முயலாது, தம் உடம்பை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்வது புல்லறிவாளர் செயலாகும்.
“உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்
குடிப்பிறப்பாளர் தம் கொள்கையில் குன்றார்.” –நாலடியார்.
ஆடைகள் கிழிந்து,உடல் தளர்ந்து வறுமையுற்றுத் துன்புற்றாலும் நற்குடியில் பிறந்தார் நல்லொழுக்கமாகிய தம் கொள்கையில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :845


திருக்குறள் -சிறப்புரை :845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். --- ௮௪௫
புல்லறிவாளன் தான் கற்றறியாத நூல்களையும்  கற்றுத் தேர்ந்தவன்போல் உரையாடுவது அவன் குற்றமறக் கற்ற பிற நூல்களின்கண்ணும் பிறருக்கு ஐயம் ஏற்பட இடம்தரும்.
“ நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவு உடையார் …” –நாலடியார்.
(நா பாடம்)
அவையோர் முன் வாய்க்குவந்த பாடத்தைச் சொல்லி நூல் நயம் கற்றவர்போல் விரித்துரைக்கின்ற அறிவுகெட்ட புலவனோடு சான்றோர் உரையாட விரும்பார்.

புதன், 11 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :844


திருக்குறள் -சிறப்புரை :844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. --- ௮௪௪
புல்லறிவு எனப்படுவது யாதென்றால் “யாம்” அறிவிற்சிறந்தோம் என்று தம்மைத்தாமே போற்றி இறுமாப்புக்கொள்ளும் சிற்றறிவாம்.
“நில்லாத காட்சி நிறைஇல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.”-இனியவை நாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :843


திருக்குறள் -சிறப்புரை :843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.--- ௮௪௩
அறிவிலார் தமக்குத்  தாமே உண்டாக்கிக்கொள்ளும் துன்பத்தைத் துன்பம் தருவதற்குரிய செயல்களைச் செய்யும் பகைவர்களாலும் செய்தற்கு அரிதாம்.
“நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்காலென்.”—நாலடியார்.
தினை அளவேயாயினும் நல்ல செயல்களைச் செய்யாத வெட்கமில்லாத  மூடர்கள் இறந்தால் என்ன… இறக்காமல் இருந்தால் என்ன..?.

திங்கள், 9 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :842


திருக்குறள் -சிறப்புரை :842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.--- ௮௪௨
(நெஞ்சு உவந்து)
சிற்றறிவாளன் (சின்ன புத்தி உடையவன்) ஒருவன். தான் மனம் மகிழ்ந்து பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறான் என்றால் அதற்குக் காரணம் வேறு ஒன்றுமில்லை அப்பொருளைப் பெற்றவன் செய்த நல்வினையே ஆகும்.
“அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.”—முதுமொழிக்காஞ்சி.
அறவழியில் கொடாதது கொடை ஆகாது.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கார்வார்டு தமிழ் இருக்கை


கார்வார்டு தமிழ் இருக்கை

கார்வார்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கினால் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகைச் சான்று அளிக்க மறுப்பது…ஏன் என்று தெரியவில்லை ; என்ன நடக்கிறது..?

மாடு என்றால் செல்வம்


மாடு என்றால் செல்வம்
“Cattle ( which include sheep camels and other livestock) are the first and oldest form of money. Each head of cattle was called a caput. Which is Latin for “Head”? So a person with a lot of cattle had lots of caput or “capital” a word still used today to describe money.” ----TOI: 01-04-18. 8/4/18

திருக்குறள் -சிறப்புரை :841


85. புல்லறிவாண்மை
திருக்குறள் -சிறப்புரை :841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு. --- ௮௪௧
இல்லாமை பலவற்றுள்ளும் மிகக்கொடுமையான இல்லாமை என்பது அறிவு இல்லாமையே ஏனைய பொன்னோ பொருளோ இல்லாமையை இல்லாமை எனக் கருதாது இவ்வுலகம்.
“அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் ….” –பழமொழி.
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

சனி, 7 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :840


திருக்குறள் -சிறப்புரை :840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். --- ௮௪0
(கழாஅக்கால் – கழுவப்படாத கால்)
சான்றோர் குழுமியிருக்கும் அவையுள் பேதை ஒருவன் புகுதல் காலினைக் கழுவாமல் தூய்மையான படுக்கை அறையுள் நுழைவதைப் போன்றதாம்.
“கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும்..” –நான்மணிக்கடிகை.
கல்வியறிவு உடையோன் மனம் தளர்வானேல் எப்படியேனும் முயன்று உய்வான்; கல்வியறிவு இல்லாத பேதை தளர்வானேல் முயற்சியின்றிக் கெட்டு அழிவான்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :839


திருக்குறள் -சிறப்புரை :839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.--- ௮௩௯
(பெரிது இனிது ; தருவது ஒன்று)
அறிவற்றவரோடு கொள்ளும் நட்பு மிகவும் இனிது ஏனெனில் பிரிய நேரும் காலத்து அஃது ஒரு துன்பமும் தருவதில்லை.
“அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்”—கலித்தொகை.
அறிவு எனப்படுவது அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.


வியாழன், 5 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :838


திருக்குறள் -சிறப்புரை :838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.--- ௮௩௮
பேதையானவன் தன் கையில் உடைமையாக ஒரு பெற்றுவிட்டால் பித்துப்பிடித்தவன் கள்ளையும் உண்டு மயங்கியதற்கு ஒப்பாவான்.
“ முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
  இந்திரனாக எண்ணிவிடும்.” –நாலடியார்.
முந்திரியின்  அளவுக்குமேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின் கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.( முந்திரி –  1/320 ; காணி- 1/80)

புதன், 4 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :837


திருக்குறள் -சிறப்புரை :837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்ற கடை.--- ௮௩௭
பேதையானவன் நல் ஊழால் பெருஞ்செல்வம் பெற்றானாயின் முன்பின் தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெறுவர் ; சுற்றத்தினரோ பசியால் வருந்திக்கிடப்பர்.
“ ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல்லறிவினார்..”—நாலடியார்.
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார்கள்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :836


திருக்குறள் -சிறப்புரை :836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.--- ௮௩௬
பேதையானவன் செய்யும் முறை அறியாது ஒரு செயலைச் செய்வானாயின் அச்செயல் கெடுவதோடு தானும் விலங்கிடப்படுவான்.
“ எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்
 செய் தொழிலாற் காணப்படும்.” ----நாலடியார்.
பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாயினும் அவர்கள் செய்யும் தொழிலால் இவர்கள் கீழ்மக்களே என்று அறிதல் கூடும்.


திங்கள், 2 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :835


திருக்குறள் -சிறப்புரை :835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.--- ௮௩௫
(தான் புக்கு அழுந்தும்)
பேதையானவன் வாழும் நெறி அறியாதவன் ஆகையினாலே எடுத்த இப்பிறவியிலேயே வரும் பிறவிகளில் துய்க்கவேண்டிய நரகவேதனைகளை எல்லாம் துய்த்துமுடிக்க வல்லவனாவான்.
”உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டு – ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழும் தக்கது உடைத்து.” –நாலடியார்.
அழகும் இளமையும் சிறந்த செல்வமும் பலரும் கண்டு அஞ்சத்தக்க மதிப்பும் ஒரே தன்மை உடையதாய் நிலைத்து நில்லாமை கண்டும் இப்பிறப்பில் யாதொரு நற்செய்கையும் இல்லாதவனுடைய வாழ்க்கை வெறும் உடலைப் பெற்று நின்று வீழும் தன்மை உடையது.


ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :834


திருக்குறள் -சிறப்புரை :834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். --- ௮௩௪
நல்ல நூல்களைக்கற்றும் அவற்றின் உட்பொருளை உணர்ந்தும் அவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் அவ்வழியில் தான் அடங்கி ஒழுகாத பேதையைப்போல் பேதையர் உலகில் இல்லை.
“கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.” –நாலடியார்.
மிகுந்த மேன்மை நிறைந்த நூல்களை அவற்றின் நுண்பொருள் விளங்குமாறு எடுத்துரைத்தாலும் கீழ்மைக் குணம் உடையவன் தன் மனம் விரும்பியவாறே செல்வான்