மகுளி
– இழுகு பறை
பறை
முழக்கம் பல பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது. தகவல் தொடர்பில்
சிறப்பிடம் பெற்ற இக்கலை கைதேர்ந்த கலைஞர்களால் இசைக்கப்பட்டதாகும். பறை இசைக்கலைஞர்களைத் தொழில் பெயரால் பறையர் என்றழைத்தனர். இக்கலை வெறும் தொழில் சார்ந்த நிலையில்
பரவலாக்கப்பட்டு,இத்தொழில் செய்வோரை இழிந்த சாதியினர் என்றும்
குறிக்கலாயினர்.பறையிசைக் கலஞர்களின் ஏழ்மைக்கு
/ வறுமைக்கு வைத்தபெயர் பறையன்.
இசையோடு பிறந்த மனிதனுக்கு இசை மொழியாக பறை- தப்பு
என்று ஒலிப்பெயர் பெற்று நிலைபெற்றது. தப்பு – தாளத்தோடு இயைந்த இசையகும்.
எல்லா முழக்கிசைக்கும் முதன்மையானது சிறுபறை
(தப்பட்டை)
சங்க
இலக்கியம் அகநானூறு
19 ஆம் பாடலில் பொருந்தில் இளங்கீரனார், “உருள்துடி
மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
கடுங்குரல்
குடிஞை……………….” என்று கூறுகின்றார்.
”கடிப்பினால் உராய்தலால் உண்டாகும் மகுளியின் ஓசை ஈண்டுக் குடிஞையின் ஓசைக்கு
உவமையென்க. கேட்போர் தம்மியல்பிற்கேற்பப் பொருள் தெரியும்படி
இசைக்கும் என்க. அஃதாவது ஆறலை கள்வர் கரந்துறையின் அந்நெறியில்
பொருளொடும் போகும் வழிப்போக்கர்க்கு, ‘குத்திப்புதை’.
’சுட்டுக்குவி’ என்னும் பொருள்பட இசைத்தலும் வினைவயிற்
செல்வோர்க்குத் தீநிமித்தமாகவாதல் நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை முற்றுமென்றாதல்
முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய இசைத்தலும் பிறவுமாம். ஆறலை கள்வர்க்கஞ்சிப் போவார்தம் அச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல்
பற்றிக் கடுங்குரல் என்றார் .” உரையாசிரியர், பெருமழைப் புலவர்.
மகுளி, இதனை இழுகுபறை, ஒரு
சிறு பறை எனலாம். பறையில் கோலினால் இழுத்து முழக்குவதால் அவ்வோசை அச்சம் தரத் தக்கதாயிர்று.
காட்டுவழியில் செல்வோரைக் கவனப்படுத்துவதாகும். அஃதாவது ஓசையின் பொருள் தெரியும்படி
ஒலிக்கும் என்பது அவ்வோசைக்குப் பொருள் உண்டு என்பதே! அவ்வோசை ஒரு கருத்தைப் புலப்படுத்தும் தகவல் தொடர்பு கருவியாகும்.
இன்றைய பறை ஒலியில் கூட ஒரு
பொருள் பொதிந்து கிடப்பதை உணர முடியும். பறை முழக்கத்தை நாட்டுப்புறத்தார் ’கொட்டு’
என்று கூறுவர். சாமிக்கொட்டு, கலியாணக்கொட்டு, சாவுக்கொட்டு, அறிவிப்புக்கொட்டு என்று
பல கொட்டு முறைகள் உள்ளன. ஒரு செய்தியை/ஒரு நிகழ்ச்சியைக் கொட்டு முறையைக்
கேட்டுத் தொலைவில் உள்ளோரும் புரிந்து கொள்ளலாம்.
இழுகு பறையில் ஒலிக்கும்
ஓசையின் பொருளைக் ‘குத்திப்புதை’, ‘சுட்டுக்குவி’ என்று தத்தம் மனவியல்புக்கேற்பப்
புரிந்து கொள்வதைப் போலச் சாவுக்கொட்டில் ஒலிக்கும் பறை ஓசையை…
“சாவு செத்தா எனக்கென்ன
சம்பளத்தை மின்ன (முன்னே)கொடு
சாவு செத்தா எனக்கென்ன ; சம்பளத்தை மின்ன கொடு”
என்று ஓசைக்கு ஏற்றவாறு பொருள் கொண்டு (நையாண்டியாக) நானும் என்னூரில் பாடியிருக்கிறேன்.