தமிழமுது – 58.
ஆதிகாவியங்கள் – ஒரு பார்வை :
தொல்காப்பியத்தையும்
சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் தெளிவாகப் பயின்ற பின்னர் வேற்று நாட்டுச் சரக்குகள்
இஙகு விலை போகுமா? இன்னது இனியது என்று நல்லதை
மட்டும் நாட்டோர்க்குச் சொன்ன நம் தமிழர் அறிவுத்திறனை அறிய வேண்டாமா..? கட்டுக் கதைகளும்
குட்டிச் சாத்தானின் குள்ள நரி வேலைகளும், ஆகாயம் அளந்த அடிகளும், ஆற்று மணலைக் கயிறாகத்
திரித்த கதைகளும் தமிழ்நாட்டில் எப்படிச் செல்லுபடியாயிற்று..? செல்லரித்துப் போன சித்தாங்களுக்குப்
புத்துயிர் ஊட்டியது யார்..? பாவ புண்ணிய சொர்க்க நகரக் கதைகள் காதில் புளித்துப்போய்விட்டன
அவற்றில் இனிப்பு ரசம் ஏற்றிக் குடிக்கவைக்கத் துடிக்கும் ஆன்மிகவாதிகளின் அண்டாகாகச
அபுல்காகச, சாதனைகள் எப்படி ஏற்றம் பெற்றன…?
“ சிந்திக்கத் தெரியாதவன் மனிதனே
இல்லை “ என்றான் ஒரு மாமேதை, சிந்திக்கத் தெரியாத ஒரு மக்கட்கூட்டத்தைத் தோற்றுவித்ததே
புராண இதிகாசங்கள் தானே…! இந்தப் பொழுதுபோக்குக் கதைகள் புனிதத்தன்மை பெற்றது எப்படி..?
தெளிந்த அறிவு, தூய சிந்தனை மனித சமுதாயம்
மாண்புற எழுதிய எழுத்துகள் தொல்தமிழ் மண்ணில்
நம் முன்னோர்களால் விதைக்கப்பட்டவையே,..! வேற்று நாட்டுக் “களைகள்” செழித்திருந்த தமிழ்ப்
பயிரை மேய்ந்து விட்டன; காவலர்களோ களைகளைப்
பயிராகக் கருதினரே..! விளைவு, இன்றுள்ள பதர்களே.
தமிழர்கள் தமிழர்களுக்காகச் சொன்ன உண்மைகள் சுவையாக இல்லை ; வடவர் ஊட்டிய சுவைகளில்
உண்மை இல்லை. தமிழர் சொன்னவை கருத்துகள் ; வடவர் சொன்னவை காதில் பூச் சுற்றிய கதைகள்.
கதைகளைக் கேட்டார்கள் ; கண்மூடிப் பழக்கங்கள் எல்லாம் விண்மூடி நிற்கின்றன ; விழித்தெழ முடியவில்லை..
வேத புராண விளக்கங்கள் சங்க இலக்கியச் சுரங்கத்திற்குத்
தாழிட்டன. இப்போது தமிழன் பூட்டிய இரும்புக்கூட்டுக்குள்ளே மாட்டிக்கொண்ட சிறுத்தை, அது வெளியில் வராது. அந்தச் சிறுத்தை எதையெல்லாம் சொல்லக்கூடாதோ அதையெல்லாம் சொல்கிறது, நேரம் சரியில்லை…கடவுள் இட்ட வழி….தலை விதி….
அந்தரத்தில் கடவுள் வந்து அற்புதங்கள் காட்டி அடைக்கலம் அளிப்பான் என்றெல்லாம் புலம்புகிறது.
தமிழனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு ஆயின் கடவுளை அற்புதங்கள் காட்டும் வித்தைகாரனாக
அவன் ஒருபோதும் நினைத்ததில்லை. அவன் அஞ்சி ஒழுகவே கடவுளைப் போற்றினான் பிறரை அச்சுறுத்த
அல்ல. உலகையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்ற கொள்கை தமிழர்க்கு உடன்பாடன்று.
…………………..தொடரும்……………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக