ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழமுது – 61. அசுணம் - விலங்கா / பறவையா..?:

 

தமிழமுது  61. அசுணம் -  விலங்கா / பறவையா..?:

அசுணம்:

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்

கூதிர்க் கூதளத்து அலரி நாறும்

மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்

மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்.” நற்றிணை; 244.

 மழை பெய்த  பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர் காலத்துக் கூதாளி மலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று நறுமணம் கமழும் மலை முழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவி கொடுத்துக் கேட்கும்.

மறையின் தன்யாழ் கேட்ட மானை அருளாது

அறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்ச

பறை அறைந்தாங்கு …” கலித்தொகை; 143,

வஞ்சனையாலே தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்ட அசுணமாவை, இவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற்போல்.

பறைபட வாழா அசுணமா…” நான்மணிக்கடிகை; 4.

கேகயப் பறவைகள், பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.

அசுணம் பறவையா விலங்கா..? என்பதில் குழப்பம் நிலவினும் மலையின் பிளப்பாகிய குகையில் வாழ்வதாக,  நற்றிணை 244, அகநானூறு , 88 - இவ்விரு பாடல்கள் வழியும் பிற சான்றுகளாலும் அசுணம் விலங்கினமே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவ்விலங்கு பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன.  அசுணம்  அழிந்து போன விலங்கினங்களுள் ஒன்றாக இருக்கலாம்.

………………………தொடரும்………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக