புதன், 19 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :360 - துறவைத் துற..

திருக்குறள் – சிறப்புரை :360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். – 360
காமம், வெகுளி, மயக்கம் (அறியாமை) எனும் மூன்று குற்றங்களும் முற்றாக ஒழித்த நிலையில் பிறவித் துன்பமும் இல்லாமல் போகும்.
“ மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
  எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறையிலை” – திருஞான சம்பந்தர்.
 “ மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் பற்று வைக்கத்தான்” – இல்லறம், துறவறம் என்னும் இரண்டனுள் திருவள்ளுவர் போற்றி உரைப்பது இல்லறத்தையே. துறவறம் தமிழர் ஒழுக்கம் இல்லை என்றாலும் மக்களுள் ஒரு சாரார் துறவை விரும்புவாரும் உளராதலால் அவர்களும் ஒழுக்கநெறி வழுவாது  நிற்க வேண்டியே துறவு, மெய்யுணர்வு அதிகாரங்களை அமைத்துள்ளாரெனவும் கொள்ளலாம்.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது –” என்று மானிடப் பிறப்பின் பெருமை பேசும் தமிழ். எடுத்த பிறவியை இனிதே போற்றி, இயற்கையோடு இயைந்து நடத்தி இன்புற்று வாழ்ந்து, இறந்தபின்னும் வாழ்தல் வேண்டும் என்பர் சான்றோர்…
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
  தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” -    (புறநா. 165)
நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர், தம் புகழை நிலை நிறுத்தித் தாம் இறந்தனரே. 

1 கருத்து: