செவ்வாய், 31 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 446

திருக்குறள் – சிறப்புரை : 446
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். ---- ௪௪௬
தகுதியும் திறமையும் வாய்ந்த சான்றோர் ஒருவரைத் தனக்குத் துணையாகக் கொண்டு தானும்  அறவழியில்  நடக்கும் வல்லமை உடைய ஒருவனுக்குப் பகைவர்கள் செய்யக் கூடியதொரு
    தீங்கு  இல்லை என்பதாம்.
“ ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து,” – நாலடியார்.

பல நூல்களையும் ஆராய்ந்து, அந்நூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்.

திங்கள், 30 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 445

திருக்குறள் – சிறப்புரை : 445
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.௪௪௫
ஆராய்ந்த கல்வியறிவால் அறிவுரை வழங்கும் சான்றோர்கள் மன்னனுக்குக்  கண் எனத் தக்கவர், அத்தகையோரைப் போற்றித் துணையாகக் கொள்ளல் வேண்டும்.
“ இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர் …” – நாலடியார்.

 சான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 444

திருக்குறள் – சிறப்புரை : 444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை. ---- ௪௪௪
தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரியாரைச் சுற்றமாகக் கொண்டு ஒழுகுதல் ஓர் அரசன் தான் பெற்றுள்ள படை வலிமைகள் எல்லாவற்றையும் விடத் தலை சிறந்த வலிமையாகும்.
” குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
 குன்று அன்னார் கேண்மை கொளின்.” ------ நாலடியார்

பெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள்.

சனி, 28 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 443

திருக்குறள் – சிறப்புரை : 443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
 பேணித் தமராகக் கொளல். --- ௪௪௩
அரிய செயல்களுள் அரிய பெரிய செயலாவது மூத்த அறிவுடையோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதலேயாம்.
“ சேய்த்தானும் சென்று கொளளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு.” – நாலடியார்..

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 442

திருக்குறள் – சிறப்புரை : 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
 பெற்றியார்ப் பேணிக் கொளல். – ௪௪௨
தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கி மீண்டும் அத்தகைய துன்பம் வரும் முன்னரே காக்கும் நற்குணம் உடையவர்களைப் போற்றி நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
“ சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
  வலியாகிப் பின்னும் பயக்கும்… “ ஐந்திணை எழுபது.

நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு, அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.

வியாழன், 26 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 441

திருக்குறள் – சிறப்புரை : 441
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
 திறனறிந்து தேர்ந்து கொளல். --- ௪௪௧
 அறவழியைப் போற்றி அதன்வழி நிற்க, அறிவிலும் பட்டறிவிலும் தேர்ந்த பெரியோர்களுடைய நட்பினை ஆராய்ந்து அறிந்து தேடிப் பெறவேண்டும்.
“ பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
 வரிசை வரிசையா நந்தும் …” ---- நாலடியார்.
பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறை போல ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.


புதன், 25 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 440

திருக்குறள் – சிறப்புரை : 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். – ௪௪௰
ஒருவன்,  விரும்பியவற்றை யெல்லாம் துய்க்க விரும்புவது  அறியாமை என்பதை உணர்வானாகில் அவனை வெல்ல எண்ணும் பகைவர் சூழ்ச்சியும் பயனற்றதாகி அழியும்.
பொருள் நசை வேட்கையோன் முறைசெயல் பொய்”முது.காஞ்சி.

பொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 439

திருக்குறள் – சிறப்புரை : 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. --
எந்நிலையில் இருந்தாலும் எப்பொழுதும்  தன்னை தானே வியந்து போற்றிக்கொள்ளாதே ; நன்மை பயக்காத செயல்களைச் செய்ய விருப்பம் கொள்ளாதே.
” தன்னைவியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
 நல் நீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
 வியவாமை அன்றே வியப்பு ஆவது இன்பம்

 நயவாமை அன்றே நலம். --- நீதிநெறி விளக்கம்.

திங்கள், 23 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 438

திருக்குறள் – சிறப்புரை : 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று.
ஈத்துவக்கும் இன்பம் அறியாது பொருளைச் சேர்த்து வைத்துக் காக்கும் தன்மையானது குற்றங்களுள் ஒன்றாக எண்ணத்தக்கதன்று, அது மிகக் கொடிய குற்றமாகும்.
“ செல்வத்துப் பயனே ஈதல்
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே” – புறநானூறு.

பெற்ற செல்வத்தால் பெறும் பயனாவது, பிறர்க்குக் கொடுத்தல் ஆகும், அதனை விடுத்துத் தாமே துய்ப்போம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் இம்மைப் பயன்கள் கிடைக்காது வருந்த நேரிடும்.

ஏன் இந்த தடுமாற்றம்…!

ஏன் இந்த தடுமாற்றம்…!
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்தெறிந்த முதல்வர் அவர்கள், இது  ”நிரந்தரச் சட்டம் “ என்று தன் வாயால்
மகிழ்வோடு கூறவேண்டும் என்பதை எப்படி மறந்தார்… ஏன்மறைத்தார்..?
போராளிகளை அடித்துத் துரத்திவிட்டுப் போராட்டப் பொறுப்பாளர்கள் வாயால் அறிவிக்கச் செய்தது… உண்மையில் புரியவில்லை.
ஐந்து மணிக்குக் கூடிய சட்டப் பேரவையில் ஆறு மணிக்கெல்லாம்  ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தலைமைச் செயலகத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே தொடங்கி விட்டதல்லவா..?
 அவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே சொன்னீர்கள் – “இது நிரந்ததரச் சட்டம் “  என்று, போராளிகள்,  ஏதேனும் தடை வந்துவிடுமோ என்று அஞ்சியே தங்கள் அறிவிப்பை ஏற்க மறுத்தனர். அவசரமாக தில்லி பயணம், அவசரமாக ஒரு சட்டம், அவசரமாக சல்லிக்கட்டு அறிவிப்பு, அவசரமாக அலங்காநல்லூர் பயணம்… என்ன நடந்தது….? இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் தன்னிச்சையாகவே முடிவெடுத்தீர்களா..?
காலை நான்கு மணிக்குச் சென்னையில்  போர்க்களத்தில் புகுந்தது காவல்துறை, விழிக்கக் கூடாதவர்கள் முகத்தில் விழித்து… அலறல் … அரற்றல், தள்ளுமுள்ளு, அடி, உதை போராளிகளைப் பூனைகள் கடித்துக் குதறின.
ஏழு நாட்கள் பொறுமை காத்த நீங்கள் பன்னிரண்டு மணி நேரம் பொறுத்திருக்கக் கூடாதா..? இன்று மாலை ஆறுமணிக்கு நிரந்தரச் சட்ட  அறிவிப்பை நீங்கள் நேரில்…. வேண்டாம் …அரசு உயர் அதிகாரிகள், போராட்டக் குழுவினர், சட்ட வல்லுநர்கள் ஆகியோரைக்கொண்டு போர்க்களத்தில் அறிவிக்கச் செய்திருக்கலாமே..? இப்படி அறிவுரை கூற, இடித்துரைக்கும் அமைச்சர் சுற்றம் இல்லையா…  அறிவிற் சிறந்த அதிகாரிகள் இல்லையா…?  போராளிகளை அடித்து விரட்ட, காவல் துறைக்கு ஆணையிட்டது யார்..?
ஒரு பகல் பொழுது பொறுமை யுடன் இருந்து  உலகத் தமிழர்களும்  உண்ணாமல் உறங்காமல் உயிரோடு போராடி  வெற்றி காண விழைந்த போராளிகளும் வாய் நிறைய வாழ்த்துச் செய்திகளை வான் முட்ட ஒலிக்கக் காத்துக்கிடந்தனரே…!
 அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு அவலம் நிறைந்த செஞ்சில்  அடித்து , அழுது புரண்டு அந்நியப் படையினர் விரட்டுவதாக எண்ணி, கண்டவர் கண்களும் குளமாக… கடலாக
என்ன கொடுமை இது..!
நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக விடியட்டும்.
முதல்வர் அவர்களே உங்கள் பதற்றம் புரிகிறது  ;  உங்கள் சுற்றம்  சரியில்லை போலும்.
“ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.” ---குறள்.

சனி, 21 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 437

திருக்குறள் – சிறப்புரை : 437
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும். –
செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்யத் தவறியவன் செல்வம், நில்லாது அழியும்.
“ வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
  இழந்தான் என்று எண்ணப்படும் – நாலடியார்
இல்லாதவர்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன், அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.


காளைகளைப் போற்றுவோம்

 காளைகளைப் போற்றுவோம்
                 ஆண்டு தோறும் தைத் திங்களில் அறுவடை முடிந்தவுடன் சிலர் உளுந்து பச்சை பயிறு பயிரிடுவார்கள். பெரும்பாலான நிலங்களில் பசலியைப் பயிரிடுவார்கள் , கோடைக் காலத்தில் இவ்வகைப் பயிர்களின் அறுவடை முடிவடையும் ; பயிர்களின் தழைகள் மண்ணுக்கு உரமாகப் படியும்.அதன்பின் கோடை முழுதும் வயல்கள் வறண்டு கிடக்கும் நிலம் தனக்கு வேண்டிய சூரிய ஒளிச்சத்து, மழைநீர்ச்சத்துப் பெற்று வளம் பெறும். நாற்று நட்டு அறுவடை முடியும் காலப்பகுதியை ஒரு போகம், இரு போகம், முப்போகம் என்று கூறுவர்., பெண்ணோடு கூடி மகிழ்வதைப் போகம் என்பர். நிலமகளோடு கூடி மகிழ்வதையும் போகம் என்பர்.
              கோடைக்காலத்தில் விவசாயிகள் எருவடித்தல் ,வாய்க்கல் வெட்டுதல், வேலி கட்டுதல் போன்ற மராமத்து வேலைகளைச் செய்வர்.
             இக்காலக்கட்டத்தில் நிலத்தை வளப்படுத்த கிடை போடுவார்கள்.
           இதில் ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை  இவ்விரண்டும் சிறப்பிடம் பெறுகின்றன,
            பெரும்பாலும் ஆட்டுகிடை இராமநாதபுரத்திலிருந்து கீதாரிகள் ஆட்டு மந்தையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இடமாகச் சென்று கிடை போட்டு நெல் அல்லது பணத்தைக் கூலியாகப் பெறுவர்.
 கிடை என்பது – கிடத்தல் .. கிடத்துதல் ஆகும்.
               பகலில் ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று, இரவு முழுதும் நாள் தோறும்  ஒவ்வொரு வயலிலும்  ஆடுகள் கிடத்தப்படும். ஆட்டுப் புழுக்கையும் சிறுநீரும் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாகும், விளைச்சல் நன்றாக இருக்கும்.
                    மாட்டுக்கிடையும் இவ்வாறே வயல்களில் அடைக்கப்படும்.
               இதில் சிறப்பான செய்தி என்னவென்றால். கிடைக்கு மாடுகள் சேர்ப்போர் முதலில் நல்ல நாட்டுக் காளையைத் தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்கிய பின்னரேதான் வீட்டு மாடுகளை கிடைக்கு அழைத்துச் செல்வார்கள்.  இக்கிடைகளில் எருமை மாடுகள் இடம் பெறா. வீட்டிற்குக் குறைந்தது இரண்டு மூன்று கறவை மாடுகளாவது இருக்கும் இவை தவிர  உழவு மாடுகள், வண்டி மாடுகள் வளர்ந்த கன்றுகள்  எல்லாமே கிடைக்கு அனுப்பப்படும்.
                  பசு மாடுகளையும் எருமை மாடுகளையும்  வண்டியிழுக்கவும் ஏர் உழவுக்கும் பயன்படுத்த மாட்டார்கள்.
                   பால் கறக்கும் பசு மாடுகள் குறிப்பிட்ட காலத்தில் இனச்சேர்க்கை விரும்பிக் குரல் எழுப்பும் இதனை “  மாடு காளைக்குக் கத்துது “ என்று புரிந்து கொண்டு கிடைக்கு விடுவார்கள். வீரியம் மிக்க காளைகள் வழிப் பசு  கருக்கொள்ளும்.
               காளைகள்,  மாடுகளின் இனப் பெருக்கத்திற்கு இன்றியமையாதன என்பது விளங்குமன்றோ. இவ்வகையான நம் நாட்டுப் பசுக்களின் பால் மட்டுமே தாய்ப்பாலுக்கு இணையானது என்று அறிவியல் ஒப்புக்கொள்கிறது.
               நம் மண்ணில் விளைவதை நாம் உண்போம் ;  நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.
              வாழிங்டன் ஆப்பிள் வயிற்றுக்கு ஒவ்வாது

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – போராடுவோம், வெற்றி பெறுவோம்..

வியாழன், 19 ஜனவரி, 2017

தமிழ் ஊடகங்கள் பார்வைக்கு…..!

தமிழ் ஊடகங்கள் பார்வைக்கு…..!
ஜல்லிக்கட்டு ..இல்லை – சல்லிக்கட்டு
காணும் பொங்கல் …. – கன்னிப் பொங்கல்.

கன்னிப்பொங்கல் எப்படிக் காணும் பொங்கலாயிற்று என்று தெரியவில்லை. கன்னிப்பொங்கல்,  கன்னிப்பெண்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் உரிய திருநாளாகும்., வகை வகையான விளையாடி மகிழ்வார்கள்,  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்….. ஐந்தாறு சிறுமிகள் ஒன்று கூடி ஒரு கூடையை எடுத்துக்கொண்டு தம் தெருவில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று வாசலில் நின்று வட்டமிட்டு, கும்மி அடித்துக்கொண்டு பாடுவார்கள்.. வீட்டிலிருப்போர் அரிசி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் இவற்றைக் கூடையில் போடுவார்கள். சிறுமியர்,  யாராவது ஒருவர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கூட்டாஞ்சோறு ஆக்கி பலரோடு கூடி உண்பார்கள். வீட்டிற்குவரும் உற்றார் உறவினர்களைக் கண்டு மகிழ்வார்கள். திருமணம் முடித்து கணவர் வீடு சென்ற மகளிர் கன்னிப் பொங்கலன்று கட்டாயம் பிறந்த வீட்டிற்குக் குடும்பத்தோடு வந்து விடுவார்கள்.கன்னிப் பொங்கலன்று அம்மன் கோயில் திருவிழா, மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும், அம்மனிடம் வேண்டுதல், நேர்த்திக்கடன் செய்தல், குழந்தைக்கு முடி இறக்குதல், காது குத்துதல் இன்னபிற சடங்குகள் எல்லாம் முறைப்படி நடக்கும். ஊரும் உறவும் ஓரிடத்தில் கூடிக் கொண்டாடி மகிழ்வதே கன்னிப்பொங்கல். எங்கு சென்றாலும் எப்படி இருந்தாலும் பிறந்த மண்ணின் பெருமை விளங்க,         ஊரோடும் உறவோடும் மகிழ்ந்து இனிது களிக்கும் நன்னாள் – கன்னிப்பொங்கல்.

புதன், 18 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 436

திருக்குறள் – சிறப்புரை : 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
நடுநிலையாளன் முதலில் தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றத்தைக் காண்பானாயின்  அவனுக்கு என்ன குற்றம் வரும்..? ஒரு குற்றமும் வாராது என்பதாம்.
” ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு.” – பழமொழி
உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியுனும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல் பல்லோர் பார்வையில் படும்.


செவ்வாய், 17 ஜனவரி, 2017

முதலில் இந்தியன்

முதலில் இந்தியன்
இரண்டாவதாக, தமிழன்
மூன்றாவதாக…… வேண்டாம்
” முதலும் முடிவுமாக..” தமிழனாக இரு…!
ஆழிப் பேரலை என ஆர்ப்பரித்து எழுந்த புரட்சிப் போராளிகளே.. விழிப்புடன் இருங்கள்..!.
அரசியல் சாக்கடை யில் விழுந்து விடாதீர்கள்.
               ஒரு தாயின் போர்க்குரல்….. !
   தமிழினத்தின் மானங்காக்க, காளை ஒருவனை ஈன்று புறந்தந்து போர்க்களத்து விடுத்த அலங்காநல்லூர் அன்னை கூறினார் “ காளை எங்கள் குலதெய்வம்..” என்று  கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உடல் சிலிர்த்தது.. குருதி கொதித்தது.. அப்படியே உறைந்து போனேன். காவல் துறையினர் காளையைக் சிறைப்ப்டுத்தி வதைப்பதாக குமுறினர் மக்கள்.
                  தமிழ் மக்களின் தன்மான உணர்வு மங்கிவிடவில்லை ; மழுங்கி விடவில்லை… உச்ச நீதி மன்றம் உரசிப்பார்த்தது… மான உணர்வின் மாற்றுக் குறையவில்லை. என்பதை இப்போதாவது உணர்ந்திரூக்குமா..?
                   தொல்பழங்காலத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும்  பன்னெடுங்காலப் பண்பாட்டுப் பெருமையும் கொண்டு உலகம் முழுதும் விழுதுவிட்டு… தமிழகத்தில் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தை அசைத்துப் பார்ப்பதற்குமுன் அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து பார்த்திருக்க  வேண்டும்.
 எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடை போடுவதும் கண்டும் காணாமலும்  ஆள்வோர் இசைவளிக்க அசைய மறுப்பதும்.. கொடுமை.
                                தமிழினத்தை ஆராய்வதற்கு மிகவும் வளமான அறிவு வேண்டும், அது உங்களுக்கு ஒத்து வராது, விட்டுவிடுங்கள்…. சல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடுத்த அமைப்புகள் பற்றியும் அவற்றின் பின்புலம் பற்றியும்.. இப்படி ஒரு வழக்கை முன்வைக்க பீட்டா போன்ற அமைப்புகள் தகுதியுடையனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..?
                      எந்த முட்டாளாவது பசுவை வீட்டு விலங்காக வைத்துக்கொண்டு காளையை வனவிலங்காக்க ஒப்புக்கொள்வானா..? காளைக்கு எத்தனை கால்கள் என்று தெரியாதவனெல்லாம் காளையைப் பற்றிப் பேசுகிறான்.  வரி.. வரி.. என்று வாரிக் குவிக்க வாய்கிழிய முழங்கும் உங்களுக்கு எங்கள் உரிமையை வழங்க உங்கள் வாய் திறக்காதா..?
   அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் மிகக் கேவலமான, அருவருக்கத்தக்க, இழிவான  செயலானது, மக்கள் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்துப் போராடினால்.. மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல் பொறுப்பாளர்களோ, அரசு அதிகாரிகளோ வருவதில்லை மாறாக அவ்விடத்திற்குக் காவல் துறையினர் வந்து விடுகின்றனர், அவர்களே மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் (குடிநீர் கேட்டு, சாலை வசதி கோரி, மணல் கொள்ளையைத் த்டுக்கக் கோரி)  நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்… அரசும்  துறைசார்ந்த அதிகாரிகளும் உல்லாச புரியில்..!
                         நீ…  முதலும் முடிவுமாகத் தமிழனாக இரு…!  நீ .. தலைவர், எம்.எல்.ஏ. ; எம்.பி. ; அமைச்சர்.. எனும் பட்டம் பதவிகள் எல்லாம் கொள்ளை அடிப்பதற்குக் கொடுக்கப்பட்ட உரிமம்  அல்ல. பதவிகளைத் துக்கி எறிந்து எழுந்து வா  உன்னை சந்தனம் பூசி வரவேற்கிறேன்.. பதவியும் பணமும்தான் தேவை என்றால் தொலைந்துபோ… உன் சாம்பலிலும் சாக்கடை மணக்கும்

திங்கள், 16 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 435

திருக்குறள் – சிறப்புரை : 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
 வைத்தூறு போலக் கெடும்.  ~
குற்றம் புரிவதால் வரும் தீயவிளைவுகளை எண்ணி, அதனை விலக்கித்  தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, வைக்கோல் பொதியின் முன் கவனமின்றி வைக்கப்பெற்ற தீயால், வைக்கோல் பற்றி எரிந்து சாம்பல் ஆவதைப் போலக் கெடும்.  
“ இசையும் எனினும் இசையாது எனினும்
 வசைதீர எண்ணுவர் சான்றோர் … - நாலடியார்
 சான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.


ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மருத நிலம் … மண் மணம்

இன்று மாட்டுப் பொங்கல்
மருத நிலம் … மண் மணம்
இன்று மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கான திருநாள். முதல் நாள் இயற்கை வழிபாடு ; சூரியனுக்கு நன்றி. இன்று ஓரறிவோ ஆறறிவோ உயிர் கலந்து ஒன்றிய நட்புறவில் மாடுகளுக்குத் திருநாள்.
மாட்டுத் தொழுவம் தூய்மை செய்யப்படுகிறது.  கள்ளிவட்டம் போட்டு அதில் பாத்திக்கட்டி..  கள்ளி நட்டு.. சாணியால் பிள்ளையார் பிடித்து அருகம் புல் வைத்து… தலைவாழை இலையில் பொங்கல்.. காய்கறி கூட்டு வைத்து நெற்கதிர் சாற்றி கரும்பு வாழைப்பழம்.. மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி.. பீழைப்பூ  வேப்பந்தழை இன்னபிற தொழுவத்தின் வாசல் ஓரத்தில் இருக்க… கட்டுக் கட்டாகப் பசும் புல் கவணையில் குவிக்க.. ஆட்கள் எல்லா மாடுகளையும்  குளத்திற்கு ஓட்டிச் சென்று குளிர குளிர நீச்சல் அடிக்க விட்டு…. ஓட்டிவந்து தொழுவத்தில் கட்டி வீட்டில் வளரும் ஆடு மாடு நாய் கோழி எல்லாவற்றிக்கும் வண்ணம் பூசி. பொட்டு வைத்து மாலையிட்டு.. கற்பூரம் காட்டி…  மணப் புகை பரப்பி… விலங்குகளுக்கெல்லாம் வாயில் பொங்கல் ஊட்டி… மஞ்சள் நீர் தெளித்து…பொங்கலோ..பொங்கல் என்று பறை முழக்கி  தொழுவத்தைச் சுற்றி வர…  பொழுது சாயும் நேரம்…
மாலை வேளையில் மாடுகளை அவிழ்த்துவிட்டு விரட்ட அவைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து தெருக்களைச் சுற்றி ஓடி வர… தொழுவத்துள் நுழைவதற்குமுன் வீட்டு வாசலில் குறுக்கே  வைக்கோலை நெட்டுக்குப்போட்டுத் தீயிட்டு  அந்தக்கரிக்கோட்டைத் தாண்டித் தொழுவத்தின் நுழைவாசலில் உலக்கையைப் போட்டு அதை தாண்டி மாடுகள் உள்ளே செல்ல… மஞ்சி விரட்டு இனிதே நிறைவுறத் தொழுது போற்றுவோம் தொழுவத்தை..!...இன்று கனவில் கண்டு களிக்கிறேன்.

.

சனி, 14 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 434

திருக்குறள் – சிறப்புரை : 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
 அற்றம் தரூஉம் பகை. ~
ஒருவனுக்கு வாழ்க்கையின் இறுதிப் பகையாவது குற்றமே ஆதலால் தன்கண் குற்றம் நேராதவறு தன்னைக் காத்துக்கொள்வதையே பொருளாகக் கொண்டு வாழ வேண்டும்.
“ கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே ~ வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என் செய்வார் பேசு. ……. நன்னெறி


வெள்ளி, 13 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 433

திருக்குறள் – சிறப்புரை : 433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ~௩௩
பழிக்கு அஞ்சி வாழும் நல்லொழுக்கம் உடையோர் தினை அளவாகிய மிகச் சிறிய குற்றம் வரினும்  அதனைப் பனை அளவாகக் கருதி மிகவும் அஞ்சி ஒடுங்குவர்.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
 சுட்டாலும் வெண்மை தரும்.” ~ வாக்குண்டாம்.


வியாழன், 12 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 432

திருக்குறள் – சிறப்புரை : 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.~
கொடை வழங்காத சிறுமையும் போற்றத்தகாத மான உணர்ச்சியும் விரும்பத்தகாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

“கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
 கொல் சின வேந்தன் அவை காட்டும்…. ~ பழமொழி

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையும் சொல் வன்மையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்

புதன், 11 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 431

குற்றங்கடிதல்
திருக்குறள் – சிறப்புரை : 431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. ~
தன்முனைப்பும் வெகுளியும் கீழ்மைக்குணமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களுடைய செல்வம் பெருமிதம் கொள்ளும் சிறப்புடைத்தாம்.
“பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடு இன்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே” ~ புறநானூறு.375.

பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 430

திருக்குறள் – சிறப்புரை : 430
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். ~௩௰
அறிவுடையார் எவ்வகையான செல்வம் இல்லாதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவர் ; அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
தேடிப் பெறவேண்டிய அரிய செல்வம் அறிவே என்றறிக.
”ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
 ஓதி அனையர் உணர்வுடையார் ……. நாலடியார்.

பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.

கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வு
தமிழ்.. வலுவான சான்றுகளுடன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிச் செல்கிறது…! தொல் தமிழரின் செழுமையான நகரிய நாகரிக வளர்ச்சியின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

“SANGAM  FOOTPRINTS ? .Excavations by ASI in Keezhadi a village on the Madurai ~ Sivaganga border have revealed ancient settlements.
Ø Around 100 acres identified forexcavation
Ø The first phase of excavation began in 2013 ~ 2014 ; the second phase of excavation was carried out in 2016.
Ø Around 0.5 acres excavated so far.
Ø Iron implements such as knives earthenware some with Prakrit and Tamil Brahmi inscriptions ; Roman pot shreds ; semi ~ precious stones such as Canelian beads ; brick structures ; and a terracotta ring ~ well and terracotta figurines were excavated.
WHAT IS IT OF  INTERST?
Ø K. Amarnath Ramakrishna superintending archaeologist of the excavation branch VI Bengaluru Claims the unearthed artefacts  belong to 3 BC
Ø 3 BC corresponds to the widely accepted date of tha Tamil Sangam Age.

Ø If the age of the artefacts are established by carbon dating it would be a breakthrough in Tamil history and culture.
                                                                              TOI .. 10/ 1/ 17

திங்கள், 9 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 429

திருக்குறள் – சிறப்புரை : 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய். ~ ௪௨
எதிர் விளைவுகளை அறிந்து தன்னைக் காத்துக்கொள்ள வல்ல அறிவுடையார்க்கு  அவர் நடுங்கும்படியான துன்பங்கள் வந்து சேர்வதில்லை.
” காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய்வினையின்
 மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலி தெரிந்து

 ஆள்வினை ஆளப் படும்.” ……. நீதிநெறி விளக்கம்..

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 428

திருக்குறள் – சிறப்புரை : 428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
 அஞ்சல் அறிவார் தொழில்….. ௪௨அ
அஞ்சுவதற்குரியவற்றைக் கண்டு அஞ்சாமல் முன்னேற முயல்வது அறியாமையாகும் ; அஞ்சுவதற்கு அஞ்சி நடப்பது அறிவுடையார் செயலாகும்.
எத்துணை யாயினும் கல்வி இடம் அறிந்து

உய்த்துணர்வு இல் எனின் இல்லாகும்….  நீதிநெறி விளக்கம்.

சனி, 7 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 427

திருக்குறள் – சிறப்புரை : 427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் . ~    ௪௨௭
அறிவுடையவர்கள்  எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்த்தே செய்வார்கள் ; அறிவில்லாதார் அப்படி எண்ணிச் செய்யமாட்டார்கள் .. எண்ணித் துணியாது இன்னல் அடைவார்கள்.

“ நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” .. கொன்றை வேந்தன்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 426

திருக்குறள் – சிறப்புரை : 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. ~ 426
உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே தானும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும் “ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதறிக.
“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் …..” வாக்குண்டாம்.