ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மருத நிலம் … மண் மணம்

இன்று மாட்டுப் பொங்கல்
மருத நிலம் … மண் மணம்
இன்று மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கான திருநாள். முதல் நாள் இயற்கை வழிபாடு ; சூரியனுக்கு நன்றி. இன்று ஓரறிவோ ஆறறிவோ உயிர் கலந்து ஒன்றிய நட்புறவில் மாடுகளுக்குத் திருநாள்.
மாட்டுத் தொழுவம் தூய்மை செய்யப்படுகிறது.  கள்ளிவட்டம் போட்டு அதில் பாத்திக்கட்டி..  கள்ளி நட்டு.. சாணியால் பிள்ளையார் பிடித்து அருகம் புல் வைத்து… தலைவாழை இலையில் பொங்கல்.. காய்கறி கூட்டு வைத்து நெற்கதிர் சாற்றி கரும்பு வாழைப்பழம்.. மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி.. பீழைப்பூ  வேப்பந்தழை இன்னபிற தொழுவத்தின் வாசல் ஓரத்தில் இருக்க… கட்டுக் கட்டாகப் பசும் புல் கவணையில் குவிக்க.. ஆட்கள் எல்லா மாடுகளையும்  குளத்திற்கு ஓட்டிச் சென்று குளிர குளிர நீச்சல் அடிக்க விட்டு…. ஓட்டிவந்து தொழுவத்தில் கட்டி வீட்டில் வளரும் ஆடு மாடு நாய் கோழி எல்லாவற்றிக்கும் வண்ணம் பூசி. பொட்டு வைத்து மாலையிட்டு.. கற்பூரம் காட்டி…  மணப் புகை பரப்பி… விலங்குகளுக்கெல்லாம் வாயில் பொங்கல் ஊட்டி… மஞ்சள் நீர் தெளித்து…பொங்கலோ..பொங்கல் என்று பறை முழக்கி  தொழுவத்தைச் சுற்றி வர…  பொழுது சாயும் நேரம்…
மாலை வேளையில் மாடுகளை அவிழ்த்துவிட்டு விரட்ட அவைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து தெருக்களைச் சுற்றி ஓடி வர… தொழுவத்துள் நுழைவதற்குமுன் வீட்டு வாசலில் குறுக்கே  வைக்கோலை நெட்டுக்குப்போட்டுத் தீயிட்டு  அந்தக்கரிக்கோட்டைத் தாண்டித் தொழுவத்தின் நுழைவாசலில் உலக்கையைப் போட்டு அதை தாண்டி மாடுகள் உள்ளே செல்ல… மஞ்சி விரட்டு இனிதே நிறைவுறத் தொழுது போற்றுவோம் தொழுவத்தை..!...இன்று கனவில் கண்டு களிக்கிறேன்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக