புதன், 31 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :555

திருக்குறள் – சிறப்புரை :555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. ~~~ ௫௫௫
கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில் மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரே - கொடுங்கோலன் செல்வ வளத்தை அழிக்கும் படையாகும்.
“கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” ~~ கலித்தொகை.

சுற்றத்தினர் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள்… பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..

செவ்வாய், 30 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :554

திருக்குறள் – சிறப்புரை :554
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. ~~~ ௫௫
செங்கோல் வளைய  அறனழிந்த செயல்களைச் செய்யும் மன்னன்.  குடி மக்கள் பழிதூற்ற. வளமிழந்து நாடு நலியக் குற்றம் பெருகிக் கொற்றம் சிதையும்.
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்து விடல்.  பழமொழி

ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல், குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

திங்கள், 29 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :553

திருக்குறள் – சிறப்புரை :553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.~~~~ ௫௫
 அரசன் தன் ஆட்சியின்கீழ் வாழும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குரிய நீதி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நாள்தோறும்  நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாவிடில் நாள்தோறும் நாடு சீரழிந்து கெடும்.
“ அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே. “ புறநானூறு.

உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அதியமான்.. அவன் தாள் வாழ்க.

ஞாயிறு, 28 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :552

திருக்குறள் – சிறப்புரை :552
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. ~~~ ௫௫
செங்கோலைக் கையில் கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றி நல்லாட்சி நடத்தாமல்  வரி வேண்டி மக்களை வருத்தும் மன்னன்  ~  வேல் ஏந்திக் கைப்பொருளைக் கொடு என்று வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரனோடு ஒப்பாவான்.
“ குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
 சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே. புறநானூறு.
குடிமக்களிடம் வரி வேண்டி இரக்கும் (பிச்சை கேட்பதுபோல்)  சிறுமை உள்ளம் படைத்த மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால் அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.



சனி, 27 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :551
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. ~~~ ௫௫௧
குடிமக்களின் அமைதி அழித்து அலைக்கழித்து வருத்தும் முறையற்ற செயல்களைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் கொலை செய்வதையே தொழிலாகக்கொண்ட ஒரு கொலைஞனைவிடக் கொடியவன்.
” கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுகதிர் அமையம் பார்த்திருந்தோர்… சிலப்பதிகாரம்.

கொடுங்கோல் வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் செத்து ஒழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைப் போல. வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

வெள்ளி, 26 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :550

திருக்குறள் – சிறப்புரை :550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டு அதனோடு நேர். ~~~ ௫ ௫0

  மன்னன் நாட்டில் உலவும் மிகக் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது.  உழவன் பயிர்களைக் காப்பற்ற களைகளைக் களைதற்கு ஒப்பானதாகும்.
“ இளை இனிது தந்து விளைவு முட்டுறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.” ~~ பதிற்றுப்பத்து.

வேந்தே( பல்யானச் செல்கெழுகுட்டுவன்) நீ நாட்டினை இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து குடிமக்கள் அனைவரும் பகை. பசி. பிணி என்னும் துன்பங்கள் இன்றி அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை உடையதாம். ( கள்வனைக் கோறல் கடுங்கோலன்று………. ~~ சிலம்பில் பாண்டிய மன்னன் கள்வனைக் கொன்றொழித்தல் அரச நீதி என்பான்.) 

வியாழன், 25 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். ~~~
ஒரு நல்ல அரசனுக்குரிய கடமைகளாவன :
 குடிமக்களைப் புறப் பகையினின்று காத்தலும் நாட்டை வளப்படுத்தி மக்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்தலும் அரசனின் முதன்மைப் பணிகளாம். நாட்டில்   குற்றம் புரிவோர்க்குத் தகுந்த தண்டனை அளித்தல் தவறாகாது அஃதும் அரசனின் கடமையே.
“குழவி கொள்வாரின் குடி புறந்தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ….. பதிற்றுப்பத்து.

குழந்தைகளைப் பாதுகாப்பாரைப் போலத் தன் குடிகளைப் பாதுகாத்து. அறத்தையே ஆராயும் மனத்தை உடையவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

புதன், 24 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :548

திருக்குறள் – சிறப்புரை :548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   ~~~~
ஆட்சிக்கு அரசனாக ; காட்சிக்கு எளியனாக  நாள்தோறும் மக்கள்கூறும் குறைகளைக் கேட்டறிந்து நீதி வழங்கா மன்னவன் தன்னிலையில் தாழ்ந்து தானே அழிந்து போவான்.
“ வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
 வாழச் செய்த நல்வினை அல்லது
 ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை.” ~~ புறநானூறு.

இந்நிலவுலகில் வாழ்வதற்கு என்று வரையறுக்கப்பட்ட காலம் முழுதும் குறைவற வாழ்தல் வேண்டும் ; வாழும்பொழுது நல்வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும்பொழுது அஃதொன்றே துணையாவதன்றிப் பிறிதொன்றும் துணையாவதில்லை.

செவ்வாய், 23 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :547

திருக்குறள் – சிறப்புரை :547
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.~~~~~
உலகத்தை யெல்லாம் காக்கும் அரசன் எந்நிலையிலும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்வானாயின் அந்நெறி முறையே (செங்கோலே)அவனைக் காப்பாற்றும்.
“அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றுஅதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்.” ~~ அகநானூறு.
அறனும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயல்.


திங்கள், 22 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :546

திருக்குறள் – சிறப்புரை :546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின். -----
 ஓர் அரசனுக்குப் போர்க்களத்தில் வெற்றி தருவது வேல் அன்று ; அவனுடைய வளையாத செங்கோலே. வளையாத செங்கோல் பெறும் சிறப்பு உணர்த்தப்பட்டது.
“ ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்
 திங்கள் அனையை எம்மனோர்க்கே”. –புறநானூறு.

வேந்தே.. ! நின் பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் கதிரவனைப் போன்றவன் ; எம்போன்று நின் அருள் பெற்றோர்க்குக் குளிர் நிலவைப் போன்றவன் நீயே…!

ஞாயிறு, 21 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :545

திருக்குறள் – சிறப்புரை :545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. ------
நீதி நெறிபிறழாது ஆட்சி செய்யும் மன்னவன் நாட்டில் பருவம் தவறாது மழை பொழியும்  விளைச்சலும் பெருகிப் பயன் நல்கும்.
“ வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
  நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
 பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ”. --- சிலப்பதிகாரம்.

பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டின்கண், வானம் பொய்க்காது மழை பொழியும் ; வளம் தப்பாமல் விளைச்சல் பெருகும் ; அரசர் கொற்றம் சிதையாது நாடு சிறக்கும் என்று ஆன்றோர் கூறிய நன்மொழிகளை அறியாயோ நீயும்.

சனி, 20 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :544

திருக்குறள் – சிறப்புரை :544
குடிதழீஇக் கோலோச்சும்  மாநில மன்னவன்
அடிதழீஇ நிற்கும் உலகு. ----- ௪௪
தன் குடையின் கீழ் வாழும் மக்களுக்காகவே ஆட்சி நடத்தும்  மாநில மன்னனின் அடியை,  மக்கள் தொழுது போற்றுவர்.
“ வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்
மாஇரும் புடையல் மாக் கழல் புனைந்து.” --- பதிற்றுப்பத்து.

மன்னனே..! மிக உயர்ந்ததும் நல்ல புகழும் உலகம் உள்ள அளவும் அழியாமல் நிலைத்து நிற்க ; வறுமையால் வாட்டமுற்ற நின் குடிகளை மேம்படுத்திய வெற்றி வீரனே..! அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து பகைவர்களை அழித்தொழித்தவனே..!

வெள்ளி, 19 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :543

திருக்குறள் – சிறப்புரை :543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -----
அந்தணர் போற்றி உரைக்கும் நூலுக்கும் அவர்தம் அறவாழ்விற்கும்  அடிப்படையாய் அமைவது ஆளும் மன்னவனின் செங்கோலே.
“ கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈந்து.” – புறநானூறு.
நல்லபல நூல்களைக் கற்றதோடு, கேள்விச் செல்வமும்கொண்டு, வேள்வி செய்தலை உடைய அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை நீர் வார்த்துக் கொடுத்த பெருந்தகையாளன்.
எம் மன்னன்.
அந்தணர்களுக்குப் பொருள் கொடுக்குங்கால் தாரைநீர் வார்த்துக்கொடுத்தல் உலகவழக்கு.

திங்கள், 15 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :542

திருக்குறள் – சிறப்புரை :542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி . -------
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் கதிரவனையும் கார்மேகத்தினையும் சார்ந்தே உயிர்த்தெழுந்து வாழ்கின்றன அதைப்போல முறைசெய்து காப்பாற்றும் மன்னவனின் செங்கோல் நிழலில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். 
உலக உயிர்கள் :  இயற்கையின் ஆட்சியிலும் செயற்கையின் (மன்னனின்) ஆட்சியிலும். வாழ்வு பெறுகின்றன.
“ அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
 அன்னோன் வாழி வென்வேற் குருசில்.” பொருநராற்றுப்படை.

அறத்தொடு பொருந்திய வழிகளை அறிந்துகொள்வதற்குக் காரணமான செங்கோல் உடைய, வெல்லும் வேல் படைக்குத் தலைவனாகிய கரிகால் பெருவளத்தான் இனிது வாழ்வானாக.

ஞாயிறு, 14 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :541

திருக்குறள் – சிறப்புரை :541
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
 தேர்ந்துசெய் வஃதே முறை. ----
ஒருவன் செய்த குற்றத்தின் தன்மை அறிந்து, ஒரு பால் கோடாது, குற்றத்திற்குரிய தண்டனையை நடுவர்களைக் கொண்டு ஆராய்ந்து, தீர்ப்பு அளித்தலே நீதி வழங்கும் முறையாகும்.
“ முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். –குறள் . 388

நீதிநெறி தவறாது ஆட்சிசெய்து , குடிமக்களைப் பாதுகாக்கும் மன்னன், மக்களுக்கெல்லாம் இறைவன் என்று சொல்லத்தக்க சிறப்பைப் பெறுவான்.

சனி, 13 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :540

திருக்குறள் – சிறப்புரை :540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின். --- ௪0
 ஒருவன் தான் எண்ணியதை எண்ணியபடியே முடிக்க அதே சிந்தனையுடன் செயல்பட்டால் எண்ணிய எல்லாவற்றையும் எளிதில் முடிக்கலாம்.
“ எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை
என்று ஒருவர்

தங்கண் அழிவு தாம் செய்யற்க.” என்னிடத்தில் ஒருபொருளும் இல்லை ; எனக்கென்று உறவினர்களும் இல்லை ; என்று ஒருவர், மனம் தளர்ந்து தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும் செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.

வெள்ளி, 12 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :539

திருக்குறள் – சிறப்புரை :539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. ---
வெற்றிக்களிப்பில் பெருமிதம்கொண்டு கடமை தவறும்பொழுது, பெருமிதச் செருக்கால் அழிந்து போனவர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
“ மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” --- புறநானூறு.

வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால், எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.

வியாழன், 11 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :538

திருக்குறள் – சிறப்புரை :538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். ----
சான்றோர் போற்றிப் புகழ்ந்த செயல்களையே செய்யவேண்டும் , அங்ஙனம்  செய்ய மறந்தார்க்கு எப்பிறவியிலும் நன்மை இல்லை.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
 நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர்.”  -- பதிற்றுப்பத்து.

மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.

புதன், 10 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :537

திருக்குறள் – சிறப்புரை :537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். ----
மறவாமை என்னும் கருவி ஒன்றினைக் கைக்கொண்டு உரிய செயலைப் போற்றிச் செய்வார்க்குச் செய்ய முடியாத செயல் என்று ஒன்றில்லை.
“ மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். குறள். 303

எவரிடத்தும் சினம் கொள்ளாதிருக்கவும் தீய விளைவுகள் சினத்தால் வருவனவே. 

செவ்வாய், 9 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :536

திருக்குறள் – சிறப்புரை :536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். –
அன்புடைமை, அறிவுடைமை, அருளுடைமை போன்றவை  எக்காலத்தும் யாரிடத்தும் மறத்தல் இல்லாது பொருந்தியிருக்குமானால் அதற்கு ஒப்பானது வேறு ஒன்றும் இல்லை.
“ ………… ……… யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்.” – பரிபாடல்.
 இறைவா! நினது திருவடி நிழலை எய்த விரும்பிய நாங்கள் நின்னிடம் வேண்டுவன பொன்னும் பொருளும் போகமும் அல்ல ; எமக்கு வீடு பேறு நல்கும் அருளும் அன்பும் அறமும் என்ற மூன்றுமேயாம்.


திங்கள், 8 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :535

திருக்குறள் – சிறப்புரை :535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். ----
 எதிர்காலத்தில் வரும்  துன்பங்களை முன்னரே அறிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியவன், பின்னாளில் தன்பிழைகளை எண்ணி மிகவும் கவலைப்படுவான்.
“ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு… குறுந்தொகை

முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப்பெறார் ; இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இழிவானது.

புதன், 3 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :534

திருக்குறள் – சிறப்புரை :534
அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. ----
இயல்பாகவே அஞ்சும் மனநிலை கொண்டவர்களுக்கு,  அவர்களைச்சுற்றி எவ்வளவுதான் பாதுகாப்பு இருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. அதுபோலக்  கடமையை மறந்து களிப்பில் கிடப்பவர்களுக்கும் அறிவார்ந்த சுற்றம் இருப்பினும் அதனால் நன்மை ஏதும்  விளைவதில்லை.
“ கைஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
சொல் ஞானம் சோர விடல்.------ நாலடியார்.

அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக..

செவ்வாய், 2 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :533

திருக்குறள் – சிறப்புரை :533
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ---- ௩௩
மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கடமையை மறந்தவர்களுக்குப் புகழ்மை என்னும் பேறு கிடைப்பதில்லை, இஃது உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
“ கருமம் சிதையாமே கல்வி கெடாமே
 தருமமும் தாழ்வு படாமே பெரிதும் தம்
இல்நலமும் குன்றாமே ஏரிளங் கொம்பு அன்னார்

நல்நலம் துய்த்தல் நலம். ---- நீதிநெறிவிளக்கம்.

திங்கள், 1 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :532

திருக்குறள் – சிறப்புரை :532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. --- ௩௨
நாளும் வறுமையால் வாடும் ஒருவனை அவன் அறிவே அவனை கொல்வதைப் போல. ஒருவன் புகழினை அவனுடைய மறதியே( கடமையைச் செய்யத் தவறுதல்) அவனைக் கொன்றுவிடும்.
” கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே “ --- புறநானூறு.

நல்வினை ஆற்றி, இமயமலையின் ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்திப் பழியற்ற உடலோடு இறத்தல் நன்று.