ஞாயிறு, 7 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 14

தொல்தமிழர் அறிவியல் – 14

                  2.ஞாயிறு

                      உலகத் தோற்றத்தின் முதலாக; உயிர் ஆக்கத்தின் மூலமாக ஆதிபகலனாகிய (ஆதிபகவன்) செஞ்சுடரைக் குறிப்பார் திருவள்ளுவர்தன்னொளியின்றி ஞாயிற்றின் ஒளியைக் கொள்ளும் கோள்களாகிய திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஆகியவற்றிற்குப் பிறப்பிடமாகியும் அக்கோள்களெல்லாம் தன்னச் சுற்றிவர நடுவே அசையாது இருத்தலினாலே ஞாயிறு கோளரசு என்னும் பெயர் பெறும்.
அறிவியல் அறிவாற்றல்
அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம்
நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை
--மதுரை இளங்கெளசிகனார். அகநா. 381: 4 –5
….. மழை பெய்யாது ஒழிய நிழலினை அகழ்ந்து உண்டு தீப்போலும் வெப்பத்தினை ஞாயிறானது கக்கிச் செல்லும் அத்தகைய கடத்தற்கரிய நீண்ட இடை வழியில்…..
                 ஈண்டுக் கதிர் மண்டிலம் என்றது சூரியக் குடும்பத்தை; இதனால் சூரியன் தலமைக் கோளாகக்கொண்டு வான்வெளியைக் குறிப்பிடுகிறார். இன்றைய அறிவியல்  சூரியனைப் பல கோள்கள் சுற்றிவருகின்றன . இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து சூரியக் குடும்பம் ( Solar System) என்று கூறும்.
செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தார் போல என்றும்
இனைத் தென்போரும் உளரே
   --உறையூர் முதுகண்ணன் சாத்தனார். புறநா. 30 : 1 – 6
               அறிவியல் புலவர் – “ செஞ்ஞாயிற்றினது வீதியும் ; அஞ்ஞாயிற்றின் இயக்கமும் ( சூரியனின்  வட .தென் செலவைக் குறிப்பதோடு ஏனைய கோள்களை ஈர்த்தலும் இயக்குதலும்) அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் ; காற்று இயங்கும் திக்கும்( வான் வெளியில்) ; ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்…. பரிப்பென்றதுஇத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை.”
                       பரிப்பு ~ என்றது ஈர்ப்பு என்பதாகலாம். கோள்களின் இயக்கங்கள் ஈர்ப்பினால் இயங்குவதைச் சுட்டுவதாம் . ( பரி ~ கடந்து செல் ; வேகம்; இயக்கம் > பறி ~ நீரோடும் வாய்க்காலில் மீன்களை ஈர்க்க (பிடிக்க) மூங்கில் குச்சிகளைக் கொண்டு பின்னபட்ட  ஒரு மீன் பிடி பெட்டிக்குப் பறி என்று பெயர்.)

செஞ்ஞாயிற்றுச் செலவு என்றது  கிழக்கில் எழும்(Equinox) சூரியன் வடகிழக்கு (solstice)தென் கிழக்கு த் திசைகளில் மேற்கொள்ளும் செலவினைக் குறித்துள்ளார்.
Equinox: each time of year when day and night are of equal length.
(about 22 September and 20 March)
Solstice: either of the times in the year when the sun is furthest from the equator: the point reached by the sun at these times ; summer solstice. about 21 June; winter solstice . about 22 December.   -----தொடரும்….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக